கிரெடிட் கார்ட் வேண்டாம் என்று சொல்வதற்கான 6 காரணங்கள்
ஒரு மனிதனின் நிதி நெருக்கடி ஏற்படும் காலங்களில் அல்லது பணம் தேவையான நேரத்தில் அவனுக்கு உதவும் ஒரு சிறந்த தோழன் கிரெடிட் கார்ட். இது பலருக்கு பலமுறை நிரூபிக்கப்பட்ட உண்மை.
கிரெடிட் கார்டை பயன்படுத்துவது அல்லது கிரெடிட் கார்ட் வைத்துக் கொள்வது நன்மையா அல்லது தீமையா என்பது பல காலமாக விவாதத்தில் வைக்கப்படும் ஒரு கேள்வி தான்.
ஒரு மனிதனின் நிதி நெருக்கடி ஏற்படும் காலங்களில் அல்லது பணம் தேவையான நேரத்தில் அவனுக்கு உதவும் ஒரு சிறந்த தோழன் கிரெடிட் கார்ட். இது பலருக்கு பலமுறை நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், கிரெடிட் கார்டை பயன்படுத்துவது அல்லது கிரெடிட் கார்ட் வைத்துக் கொள்வது நன்மையா அல்லது தீமையா என்பது பல காலமாக விவாதத்தில் வைக்கப்படும் ஒரு கேள்வி தான். நீங்கள் கிரெடிட் கார்ட் பயன்பாட்டில் உள்ள நன்மைகளை பற்றி வாதிடலாம். கிரெடிட் கார்டில் தள்ளுபடிகள் கிடைக்கும், 40-55 நாட்கள் வட்டி இல்லாக் கடனை அனுபவிக்கலாம். பண வெகுமதிகள் கிடைக்கலாம், வங்கிகளின் மத்தியில் கடன் அறிக்கையில் நன்மதிப்பை பெறலாம். நல்ல கடன் மதிப்பை பெறுவது எந்த அளவிற்கு சாத்தியமோ, அதே அளவிற்கு, கிரெடிட் கார்டை ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்தும்போது ஒருவரது நன்மதிப்பு கெட்டுப் போகலாம். இதன்மூலம், வாழ்க்கை முழுவதும் வீட்டு கடன், தனி நபர் கடன் போன்றவற்றை வாங்க இயலாமல் போகும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடன் வலையில் சிக்கி சின்னாபின்னமாக போனதற்கும் இந்த கிரெடிட் கார்ட் ஒரு முக்கிய காரணமாகும். இவர்களுடைய குடும்பங்களும் வாழ வழியில்லாமல் தவித்து நிற்கும் சூழ்நிலைகளும் உள்ளது. பலர் தற்கொலைக்கும் முயற்சித்துள்ளனர்.
இதற்கெல்லாம் என்ன காரணம்? கிரெடிட் கார்ட் கொள்கையான இன்று செலவழியுங்கள், நாளை திரும்ப செலுத்துங்கள் என்ற கொள்கையே இதற்கு காரணம். இந்த காரணத்தினால், பலரும் வரவுக்கு மீறி செலவு செய்கின்றனர். மற்றவரை கவரவும், அவர்களின் சமூக மதிப்பை உயர்த்திக் காட்டவும் இந்த நெருக்கடியில் விழுந்து விடுகின்றனர். மிகவும் தாமதமாக அவர்கள் தவறை உணர்ந்து கொள்கின்றனர்.
இன்று செலவு செய்துவிட்டு, நாளை கடனை திருப்பி செலுத்துவதில் என்ன தவறு என்று நீங்கள் வியக்கலாம். உங்கள் தனி நபர் கடனை சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் முழுவதுமாக திருப்பி செலுத்தினால் அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால், குறைந்த பட்ச தொகையை மட்டுமே செலுத்துவதால் பல வருடங்கள் கழிந்தும் மொத்த கடனை செலுத்த முடியாமல் போகும். ஒரு தோராயமான மதிப்பீட்டை இப்போது பார்க்கலாம். உங்கள் கிரெடிட் கார்டில் மொத்தம் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 2 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இதற்கான வட்டியாக 40% வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்ச தொகையை மட்டும் செலுத்தி வந்தால் மொத்த கடனும் அடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில், அந்த தொகையையும் செலுத்த கால தாமதம் ஏற்பட்டால் அதற்கான தாமத கட்டணம் வசூலிக்கப்படும். இப்படி நடக்கும்போது உங்களால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் பயன்படுத்திய தொகையை திரும்ப செலுத்த முடியாது.
ஆகவே இதன் மூலம், தெரியவருவது என்னவென்றால், முடிந்த அளவிற்கு கிரெடிட் கார்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கிரெடிட் கார்ட் பயன்பாட்டை தடுக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இங்கே சில குறிப்பிட்டு சொல்லக்கூடிய காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்து கொள்வோம்.
கிரெடிட் கார்ட் வட்டி விகிதம் அதிகம் :
கிரெடிட் கார்ட் வட்டி விகிதம் மிகவும் அதிகம். இது நீங்கள் வாங்கும் பொருட்களின் கொள்முதல் விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும். சில குறிப்பிட்ட கார்டுகளுக்கு கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் இரண்டு மடங்கு அதிக வட்டியை விதிக்கின்றன. இத்தகைய வட்டி விகிதத்தில் வாங்கும் கடன் உங்களுக்கு ஒரு போதும் நன்மையை செய்யாது. ஒரு பொருளை வாங்க உங்களிடம் போதிய பணம் இல்லாதபோது, அதனை வாங்காமல் இருப்பது நல்லது. அதிக வட்டி விதிக்கும் கிரெடிட் கார்ட் மூலம் அந்த பொருளை வாங்குவதால் நீங்கள் வாங்கும் பொருளின் விலையை நீங்கள் அதிகப்படுத்துகிறீர்கள் என்று www.investonline.in நிறுவனர் திரு அபினவ் அங்கிரிஷ் கூறுகிறார்.
உங்கள் பட்ஜெட்டை அதிகரிக்கிறது:
மக்கள் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி செலவழிக்கும்போது, அதிக பணம் செலவழிக்கப்படுகிறது. ஒரு பொருள் வாங்கும்போது ஒரு சிறிய ரசீதில் நீங்கள் கையொப்பமிடுகிறீர்கள் . இது ஒரு சுலமான செயலாக உங்களுக்கு இருக்கிறது. அந்த மாத செலவு கணக்கில் அந்த தொகை இருக்காது என்பது உங்களுக்கு நிம்மதி. இதனால் நீங்கள் அதிகம் செலவு செய்ய ஊக்குவிக்கப்படுவீர்கள். அதே சமயம், கையில் வைத்திருக்கும் பணத்தை கொண்டு ஒரு பொருள் வாங்கும்போது, பார்த்து பார்த்து வாங்குவீர்கள். உங்கள் பர்சில் இருந்து பணம் வெளியேறுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அதனால் அந்த பொருளுக்கு உரிய விலையை மட்டும் கொடுக்க எண்ணுவீர்கள் என்று அங்கிரிஷ் கூறுகிறார்.
கடன் வலைக்கு இழுத்துச் செல்கிறது :
கிரெடிட் கார்டில் விதிக்கப்படும் மறைமுக கட்டணம் மற்றும் தடைசெய்யப்பட்ட கட்டணம் போன்றவை மக்களை கடனுக்கு உட்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் அவர்களை அதில் இருந்து மீள முடியாமல் செய்து விடுகிறது.
மறைமுக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் :
கிரெடிட் கார்டை வாங்குவதற்கு கையொப்பமிடுவதற்கு முன்னர், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து பார்க்கும்போது, கிரெடிட் கார்ட் பயன்பாட்டில் உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் அதில் இருப்பதை உணர்ந்து கொள்வீர்கள். வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பட்ச இரண்டு வார அறிவிப்பு மூலம், வட்டி விகிதம், கட்டணம், அபராதம் போன்றவற்றை நிறுவனங்கள் அதிகரிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
உங்கள் கடன் நன்மதிப்பை சேதப்படுத்துகிறது :
குறைந்த கடன் நன்மதிப்பு இருந்தால் உங்கள் வட்டி விகிதம் தற்போது செலுத்தும் தொகையை விட அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. கிரெடிட் கார்ட் கடனை திருப்பி செலுத்தாமல் இருந்தால், உங்கள் கடன் நன்மதிப்பு குறையும். இதனால், வருங்காலத்தில் வீட்டு கடன் போன்ற முக்கியமான கடன் வாங்கும்போது, உங்கள் வட்டி விகிதம் அதற்கேற்ப அதிகரிக்கும். சில நேரங்களில், இதன் காரணமாக கடன் கிடைக்காமல் இருக்கும் நிலையும் உண்டாகும். ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் கடன் தொகைக்கான தவணையை செலுத்துங்கள் அல்லது முற்றிலும் அதன் தொகையை செலுத்திவிடுங்கள். என்று அங்கிரிஷ் கூறுகிறார்.
மன அழுத்தம் :
நீங்கள் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்றால், தாமதமாக செலுத்தும் பணம், அபராதங்கள், கட்டணங்கள், வட்டி, கிரெடிட் ஸ்கோர் முதலியவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த மன அமைதி எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம். மற்றவர்களின் வியாபாரத்தை அதிகரிக்க, உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கி உங்கள் மன அமைதியை இழக்க வேண்டாம்.