உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் 6 மசாலாப் பொருட்கள்
உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனை செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தாத 6 மசாலாப் பொருட்கள் இதோ உங்களுக்காக..
காரத்திற்காகவும் சுவைக்காகவும் உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை மட்டும் அதிகரிப்பதில்லை. கூடுதலாக உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. இந்திய சமையலில் மசாலாப் பொருட்களுக்குத் தனி இடம் உண்டு. முக்கியமாக இவற்றைப் பற்றிக் கூற வேண்டும் என்றால், உடல் எடையை அதிகரிக்கும் கலோரிகளை இவை அதிகரிப்பதில்லை. சுவையை அதிகரிக்கும், எளிதில் பயன்படக்கூடிய எல்லாவற்றுக்கும் மேலாக பல்வேறு அற்புத ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இந்த மசாலாப் பொருட்கள் பற்றி நாம் இன்றைய பதிவில் காணவிருக்கிறோம். மசாலாப் பொருட்களில் சக்திமிக்க அன்டி ஆக்சிடென்ட் உள்ளன. குறிப்பாக 6 மசாலாப் பொருட்கள் உள்ளன. இந்த 6 மசாலாப் பொருட்களை தினமும் சிறிதளவு நீங்கள் சமைக்கும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனை செல்லும் வாய்ப்பே ஏற்படாது. ஆம், இது முற்றிலும் உண்மை. வாருங்கள் அந்த பொருட்கள் என்னவென்று அறிந்து கொள்வோம்.
1. இலவங்கப் பட்டை :
இந்தப் பட்டியலில் அனைவரும் அறிந்த ஒரு மசாலாப் பொருள் இலவங்கப் பட்டை. டைப் 2 நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு கால் அல்லது அரை இலவங்கப் பட்டை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை க்ளிசரைடு அளவு குறைகிறது, மேலும் கூடுதலாக, இலவங்கப் பட்டை , இதய மண்டலத்தை வலிமை ஆக்குவதால் , இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இலவங்கப் பட்டை பல்வலிக்கு சிறந்த தீர்வாகவும், வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் இலவங்கப் பட்டை உட்கொள்வதால் மாதவிடாய் வலி மற்றும் இதர பெண்களைத் தாக்கும் அசௌகரியங்களுக்கு நல்ல தீர்வாக உள்ளது.
2. இஞ்சி:
சமையலில் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மசாலாப் பொருள் இஞ்சி. ஆனால் இஞ்சி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது என்பதை பலரும் அறிவதில்லை. குமட்டலைப் போக்க உதவுகிறது இஞ்சி. நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு வீக்கத்தைக் குறைக்கவும் இஞ்சி உதவுகிறது. மசக்கை மற்றும் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் வழங்க இஞ்சி உதவுகிறது. உங்களுக்கு சளி பிடிக்கும்போது உடனடியாக சிறந்த தீர்வைப் பெற இஞ்சி டீ பருகலாம்.
3. காய்ந்த மிளகாய்:
சரும புற்றுநோய் மற்றும் குடல் புற்று நோய் அபாயத்தை குறைக்க காய்ந்த மிளகாய் உதவுகிறது. காய்ந்த மிளகாயை சமையலில் சேர்த்து பயன்படுத்துவதால் குறைவான கலோரிகள் உட்கொள்ள வழி வகுப்பதாக சில ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. தினமும் ஒரு சிறு அளவு காய்ந்த மிளகாய் உட்கொள்வதால் எந்த ஒரு பாதிப்பும் உடலுக்கு ஏற்படுவதில்லை.
4. ஜாதிக்காய்:
சீனர்கள் வலி நிவாரணத்திற்கு ஜாதிக்காய் எண்ணையை பயன்படுத்துகின்றனர். அழற்சி மற்றும் அடிவயிற்று வலியைப் போக்க ஜாதிக்காய் உதவுகிறது. உங்களுக்கு பல்வலியா? கவலை வேண்டாம். பல் ஈறுகளில் ஜாதிக்காய் எண்ணெய்யைத் தடவுங்கள். இது ஒரு சிறந்த மந்திரத்தைப் புரிகிறது. பல்வலியைப் போக்குவது மட்டுமல்ல, வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் ஜாதிக்காய் உதவுகிறது. சரும பாதுகாப்பை முதன்மையாகக் கருதுபவர் நீங்கள் என்றால், உங்கள் சரும பராமரிப்புத் தீர்வுகளில் ஜாதிக்காயை இணைத்துக் கொள்ளுங்கள். ஜாதிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்க்ரப் , சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்க உதவுகின்றன. ஜாதிக்காயை சரும பராமரிப்பில் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் மாறுகிறது. இறுதியாக, உங்களால் இரவில் ஆழ்ந்து தூங்க இயலாமல் இருந்தால், ஒரு கப் பாலில் ஜாதிக்காய் தூள் மற்றும் தேன் சேர்த்து இரவில் உறங்கச் செல்வதற்கு முன் பருகலாம்.
5. சீரகம்:
செரிமான கோளாறுகளுக்கு சீரகம் பயன்படுத்தி தீர்வு காண்பது என்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் முறையாகும். சீரகத்தின் சுவை, வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளை ஊக்குவித்து செரிமானத்தின் முதல் படியைத் துவங்குகிறது. சீரகத்தில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சீரகம் சிறந்த நன்மைகளை வழங்குகிறது. பூச்சிக்கடிக்கு சிறந்த தீர்வாகவும் சீரகம் செயல்படுகிறது. சீரகம் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி சத்தின் ஆதாரமாக விளங்குகிறது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவை இரண்டு சத்துகளும் மிகவும் அவசியம் என்பதால் சளி போன்ற பாதிப்புகள் உடலைத் தாக்காமல் பாதுகாக்கிறது.
6. மஞ்சள்:
மஞ்சளில் குர்குமின் என்ற கூறு உள்ளது. இந்தக் கூறு, உடலில் புற்று நோய் பரவாமல் தடுக்க உதவுகிறது மற்றும் டைப் 2 நீரிழிவைத் தடுக்கவும் உதவுகிறது. வெட்டுக்காயம் மற்றும் தீக்காயங்களால் உண்டாகும் தொற்று பாதிப்பைப் போக்க மஞ்சள் உதவுகிறது. இது ஒரு இயற்கை வலி நிவாரணி ஆகும். சீன மருத்துவத்தில் மனச்சோர்வைப் போக்கும் ஒரு தீர்வாக நீண்ட காலமாக மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.