சித்ரா பௌர்ணமி
சித்ரா பௌர்ணமியன்று சிவபார்வதி வழிபாடு சிறந்ததாகும். இந்நாளில் அன்னதானம் செய்வதால் நம் பாவங்கள் நீங்கி நற்கதியடைவோம் என்பது ஐதீகம்.
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் சித்ரா பவுர்ணமி அன்று எந்த களங்கமும் இல்லாமல் பூரணத்துவத்துடன் பூமிக்கு மிக அருகில் பிரகாசமாக தோன்றும்.
பூமி நாதம்:
சித்ரா பௌர்ணமி அன்று முழு நிலா வெளிச்சத்தில் பூமி நாதம் என்னும் ஒரு வகையான உப்பு பூமியில் இருந்து வெளி வரும். இந்த உப்பு மருந்துக்கு வீரியமளிக்கும் என்று சித்தர்களின் அறிவுரையின்படி இன்றும் பயன்படுத்தி வருகின்றனர் சித்த மருத்துவர்கள். இந்த பூமி நாதம் இளமையையும், மரணமில்லாத வாழ்வையும் கொடுக்கும் ஒரு அதிசய மூலிகை ஆகும்.
சித்திரகுப்தர் வழிபாட்டிற்கு உகந்த நாள்:
எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரகுப்தர் சித்ரா பௌர்ணமி அன்று பிறந்தார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாளில் சித்திரகுப்தர் கோவிலுக்கு செல்வது சிறந்தது , செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சித்ரகுப்தரை நினைத்து விரதம் மேற்கொள்ளும் போது உப்பு, பசும்பால், தயிர் இவைகளை தவிர்க்க வேண்டும். அன்று மாலை சித்திர குப்தருக்கு பூஜை செய்வதால் கேதுவின் தோஷங்கள், கடன் பிரச்சினைகள், சத்ரு துன்பங்கள், பித்ரு தோஷங்கள், பாவங்கள் போன்றவைகளை போக்குவதோடு, நற்கதியடைய செய்வார். சித்திரகுப்தர் கோயில் காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ளது.
சிவன் மற்றும் அம்பிகை வழிபாடு இந்நாளில் சிறந்தது:
சித்திரா பௌர்ணமி அன்று சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களும் உச்சம் பெறுகின்றனர். சூரியன் என்பவர் நமது உடலுக்கு காரகனாவார். சந்திரன் என்பவர் நமது மனோகாரகன் ஆவார். சிவனை சூரிய அம்சம் என்றும், அம்பாளை சந்திர அம்சம் என்றும் குறிப்பிடுவார்கள். இந்நாளில் சிவபார்வதி வழிபாடு சிறந்ததாகும். சித்திரா பௌர்ணமி செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால், இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமான் மற்றும் அம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்குவதோடு, திருமணம் கைகூடும். இந்நாளில் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தபடியே விரதம் இருந்து சிவனையும், அம்பாளையும் வழிபட்டால் திருமணமாகாத ஆண், பெண் இருவருக்கும் நல்ல மணவாழ்க்கை அமைந்திடும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைத்திடும், குழந்தைப்பேறு கிடைத்திடும் மற்றும் வீட்டில் சகல ஐஸ்வர்யமும் நிலைத்து இருக்கும்.
சித்திரா பௌர்ணமியன்று நாடு செல்வ செழிப்புடன் இருக்க தமன உற்சவம் செய்ய வேண்டும் என ஆகமங்கள் கூறுகின்றன. தமனம் என்றால் மரிக்கொழுந்து என்று பொருள்படும். இந்நாளில் மரிக்கொழுந்தை கொண்டு சிவபெருமானை பூஜிப்பவர்கள் மேலான நிலையை அடைவார்கள் என்று கூறப்படுகிறது. இத்தினத்தன்று சிவாலயங்களில் கிரிவலம் செல்வது உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது மற்றும் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் ஆற்றலும் பௌர்ணமி தினத்திற்கு உண்டு. இந்நாளில் அன்னதானம் செய்வதால் நம் பாவங்கள் நீங்கி நற்கதியடைவோம் என்பது ஐதீகம்.