தொற்றுநோய் பரவும் காலத்தில் மனஅழுத்தத்தை நிர்வகிக்க உதவும் நுட்பங்கள்
சமூக விலகல், தனிமைப்படுத்துதல் போன்றவை மக்களுக்கு புதிதாக தோன்றுவதால் அவை குறித்த பயம், அழுத்தம் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது. இவற்றின் நடுவே ஒவ்வொருவரும் தங்களுடைய மனநலத்தை ஆரோக்கியமாக பேணுவது மிகவும் அவசியம்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் காலகட்டத்தில் மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த பாதிப்புகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. சமூக விலகல், தனிமைப்படுத்துதல் போன்றவை மக்களுக்கு புதிதாக தோன்றுவதால் அவை குறித்த பயம், அழுத்தம் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது. மேலும், உலகம் முழுதும், வீட்டில் இருந்து வேலை பார்ப்பது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்ளை விட்டு விலகி இருப்பது, பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுப்பது போன்றவை கடினமான செயலாக இருக்கலாம். ஆனால் இவற்றின் நடுவே ஒவ்வொருவரும் தங்களுடைய மனநலத்தை ஆரோக்கியமாக பேணுவது மிகவும் அவசியம்.
ஒரு சமூகமாக , இந்த தொற்று பாதிப்பைக் கடந்து வர சிறப்பான முறையில் மனஅழுத்த மேலாண்மை தொழில்நுட்பங்கள் நம்மிடையே உள்ளன. அவற்றைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படும் நபர்கள் யார் ?
தொற்றுநோய் பரவும்போது அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் நபர்கள் பின்வருமாறு ..
- மூத்த குடிமக்கள்
- சிறார்கள் மற்றும் பதின்பருவத்தினர்
- நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
- தீவிர மனநல பாதிப்புக்கு உள்ளானவர்கள்
- குறைவான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள்
- கொவிட் 19 பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள்.
இந்த காலகட்டத்தில் மனஅழுத்தத்திற்கான பொதுவான அறிகுறிகள் :
தினசரி செயல்பாடுகளில் மனஅழுத்தத்தை வெளிப்படுத்தும் பொதுவான அறிகுறிகள் சிலவற்றை இப்போது காணலாம்.
- தங்களை பற்றியும் தங்கள் குடும்பத்தினர் பற்றியும் கவலை கொண்டு தூக்க நிலையில் மாற்றம் ஏற்படுவது
- ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதில் கவன குறைபாடு மற்றும் அதனை முடிப்பதில் காலதாமதம்
- பயம் காரணமாக பசியுணர்வு இல்லாமல் இருப்பது
- குணநலனில் மாற்றம் ஏற்படுவது
- மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க மது மற்றும் இதர போதை பொருட்களை பயன்படுத்துவது
- நாட்பட்ட நோய்களை கொண்டவர்களின் நிலை இன்னும் மோசமடைவது
இந்த காலகட்டத்தில் உங்கள் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது ?
- உங்கள் அன்புக்குரியவர்கள் பற்றி கவலை கொள்ளும் அதே நேரத்தில் உங்கள் மனநலம் பற்றியும் அக்கறை கொள்வது அவசியம். அதற்கான சில வழிகள் இதோ..
- ஆரோக்கியமான உணவு உட்கொள்வது, தியானம் செய்வது , ஆன்மீகத்தில் ஈடுபடுவது , உடற்பயிற்சி செய்வது , மது மற்றும் போதை பொருட்களை தவிர்ப்பது.
- செய்திகள், மற்ற வகையான தகவல் தொடர்புகள் மற்றும் சமூக ஊடகத்தில் இருந்து அவ்வப்போது விலகி இருப்பது மனஅமைதியை மேம்படுத்தும்.
- குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க அவ்வப்போது வீடியோ அழைப்பில் பேசலாம். இதனால் உங்கள் தனிமை உணர்வு தவிர்க்கப்படும்.
- புதிய பழக்கங்களை வழக்கமாக்கிக் கொள்வதால் உங்கள் வாழ்வில் ஒரு புதிய அர்த்தம் தோன்றும்.
- உங்கள் வழக்கமான வேலையில் இருந்து சற்று இடைவேளை கொடுத்து குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடலாம், சமைக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.