நயனதாரா என்னும் நித்திய கல்யாணி
நாம் இப்போது காணவிருக்கும் மூலிகை செடியின் பெயர் நித்திய கல்யாணி . இந்த மூலிகை செடி பிறந்த ஊர் மடகாஸ்கர். இதன் தாவர பெயர் கத்ரேந்தஸ் ரோசெஸ் . இதற்கு நயனதாரா, சுடுகாட்டு பூ, கல்லறை பூ, பெரிவீன்க்கில் மதுக்கரை என்ற வேறு பெயர்களும் உண்டு.
தமிழகத்தில் இந்த செடி, திருநெல்வேலி,தூத்துக்குடி, பெரம்பலூர், இராமநாதபுரம் போன்ற இடங்களில் பயிர் செய்யப் படுகின்றன. பொதுவாக இது மணல் பாங்கான இடங்களில் அதிகம் பயிர் செய்ய படும். தமிழ் நாடு தவிர கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம் , குஜராத், மேற்கு வங்காளம் போன்ற இடங்களிலும் இந்தியாவில் இந்த வகை செடியினை காணலாம்.
இந்த செடியின் அணைத்து பாகங்களும் நமக்கு பயனளிக்கின்றன. இதன் இலைகள் மிகவும் கசப்பு தன்மை வாய்ந்தது.
இந்த செடி குறுஞ்செடி வகை சார்ந்ததாகும். அதிகபட்சம் 3 அடி மட்டுமே வளரும். இதன் மலர்கள் இளஞ்சிவப்பு(ரோஸ்) நிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதனை பயிர் செய்ய தனிப்பட்ட பருவங்கள் கிடையாது . வருடம் முழுவதும் பூ பூத்து வளரும்.
பலர் தங்கள் வீடுகளில் அழகுக்காகவும் இச்செடியை வளர்க்கின்றனர். வணிக நோக்குடன் வளர்க்கப்படும் இச்செடிகளின் வேர்கள் இலைகள் ஆகியவை ஏற்றுமதியும் செய்யப் படுகின்றன.
செடி வளர்ந்த பின் 6 மாதங்களுக்குப்பிறகு அதன் இலைகளை, தண்டுகளை பிரித்து விட்டு வேர்களை கழுவி காய வைத்து பதக் படுத்தி பின் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படுகிறது.பிரிட்டன், ஜெர்மனி, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் இந்த வேரினை பயன்படுத்திக் கொள்கின்றன. இதன் இலைகள் ஹங்கேரி ,அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய படுகின்றன.
இந்த பூச்செடியில் இருந்து சர்க்கரை நோய், லுக்கேமியா என்ற இரத்த புற்று நோய் ஆகிய நோய்களுக்கு மருந்துகள் பிரித்தெடுக்கப்படுவதால் அதிகம் அறியப்படுகின்றது. . மற்றும் வின்பிளாசிட்டீன், வின்க்கிரிசுட்டீன் போன்ற உயிர்வேதிப் பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. சென்னை கிருத்துவக் கல்லூரியிலும் மேலை நாடுகளிலும் இதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன.
ரிசெர்பைன், செர்பென்டைன், ரவ்பேசின் ஆகிய ஆல்கலாய்டுகள் இந்த பூச்செடியில் அதிகம் காணப்படுகின்றன. இவ்வகை ஆல்கலாய்டுகளில் இருந்து பிரிக்க படும் வேதி பொருட்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பலவகையான நோய்களுக்கு மருந்து செய்வதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. ஆகையால் மருத்துவ துறையில் இந்த பூச்செடிகள் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
சர்பகந்தி என்னும் ஒரு செடியும் மருத்துவ துறையில் மருந்து உற்பத்தியில் முக்கிய வேதி பொருட்களை தருவதாகும். அந்த செடியின் உற்பத்தி குறைந்து வருவதால் நித்திய கல்யாணியின் சிறப்பான பங்களிப்பு மருத்துவ துறையினருக்கு ஒரு வரப்ரசாதமாகும்.
இதன் வேதிப்பொருட்கள் அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தியிலும் சேர்க்கப்படுகின்றன.
நாடி துடிப்பை சமப்படுத்துவதில் நித்திய கல்யாணி அதிக பலன் கொடுக்கும். சிறுநீர் சர்க்கரையை குறைப்பதற்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
நித்திய கல்யாணி செடியின் பூக்களை 5 - 6 எண்ணிக்கையில் எடுத்து 1/2 லிட்டர் தண்ணீரில் விட்டு நன்கு காய்ச்ச வேண்டும். அந்த நீர் நன்கு கொதித்து 1/4 லிட்டர் ஆகும்வரை அடுப்பில் வைக்க வேண்டும். பின்பு அதை 4 வேளைக்கு குடித்து வந்தால் உடல் வலிமைபெறும். பசி இல்லாதவர்க்கு நல்ல பசியை கொடுக்கும்.
மனஅழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கபப்ட்டோர் இந்த நீரை குடித்து வந்தால் நிறைந்த பலன் கிட்டும். மாத விடாய் நோய்கள் அகலும்.
நித்திய கல்யாணி வேர் சூரணத்தை ஒரு சிட்டிகை எடுத்து நீரில் கொதிக்க வைக்கவும். அந்த நீரை 3 வேளை குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும்.