ராடிச்சியோவின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் 

சாலட் உட்கொள்ளும்போது அதில் சிவப்பு நிறத்தில் ஒரு இலையை நீங்கள் கண்டிருக்கலாம். லெட்டூஸ் மற்றும் இதர பச்சை இலைகளுடன் சேர்த்து இந்த இலையையும் சாலட்டில் சேர்ப்பார்கள். இதுவே ராடிச்சியோ.

ராடிச்சியோவின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் 

 

ராடிச்சியோ ஒரு சிவப்பு இலையுடைய  காய் ஆகும். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு காய் ஆகும். அஸ்டெரசியா குடும்பத்தை சேர்ந்த இந்த இலையுடைய காய் , அடர் சிவப்பு - ஊதா இலைகள் மற்றும் வெள்ளை நரம்புகள் கொண்ட சிறு கசப்பு சுவை கொண்ட ஒரு காயாகும்.

இதனை இத்தாலியன் சிக்கரி , ரெட் சிக்கரி என்று கூறுவர், பெருபாலும் இத்தாலிய உணவு வகைகள் , சாலட் போன்றவற்றிலும் , நட்ஸ் மற்றும் பழங்களுடன் சேர்த்து பரிமாறுவர். மற்ற இலையுடைய  காய்கறிகளுடன் ஒப்பிடும்போது ராடிச்சியோ எவ்வாறு தனித்தன்மை பெறுகிறது? ஆன்டிஆக்சிடெண்ட் அதிகம் உள்ள இந்த காயில் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் மிக அதிகம்.

இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது :

ராடிச்சியோவில் வைட்டமின் கே , மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, அழற்சியைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி , தமனிகளில் அடைப்பு படிவதை  தடுக்கிறது. ராடிச்சியோவில் பாலிபீனால் கூறுகள் இருப்பதாகவும் , இவற்றிற்கு குருதிதட்டுக்கு எதிரான தன்மை இருப்பதாகவும், இதனால் இரத்தஓட்டம் மேம்பட்டு, இரத்த உறைவு தடுக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன .

புற்றுநோயை நிர்வகிக்க உதவுகிறது:

ராடிச்சியோவில் அந்தோசைனின் போன்ற பீனாலிக் கூறுகள் உயர்வாக உள்ளன. இவை புற்றுநோய் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கும் ப்ரீ ராடிகால்களை சேதப்படுத்த உதவுகின்றன. அந்தோசைனின் புற்றுநோய் அணுக்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆரோக்கியமான எலும்புகளுக்கு ஆதரவு தருகிறது:

வலிமையான எலும்புகளின் கட்டுமானத்தில் மற்றும் அவற்றை நிர்வகிப்பதில் ராடிச்சியோ மிகுந்த நன்மைகளைத் தருகிறது. இதற்கு காரணம் இதில் உள்ள வைட்டமின் கே சத்து. இது உடலில் கால்சியம் குவிவதைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் எலும்பு வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு தொடர்பான பிற நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.

கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:

கண் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஆன்டிஆக்சிடெண்ட் லூட்டின் மற்றும்  ஸிக்ஸாந்தின் ராடியோச்சியோவில் உயர்ந்த அளவில் உள்ளது. இந்த ஆன்டிஆக்சிடெண்ட்கள் கண்களை தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து தடுத்து, கண் தொடர்பான கோளாறுகளை தடுக்க உதவுகிறது.

எடை இழப்பிற்கு உதவுகிறது:

நீங்கள் எடை இழப்பிற்கான முயற்சியில் இருந்தால் ராடிச்சியோ உங்களுக்கு நல்ல பலன் தரும். இந்த சிவப்பு இலையுடைய காய் குறைவான கலோரிகள் கொண்டது. ஆனால் உங்கள் பசியுணர்வைப் போக்கி, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். அதனால் உங்கள் சாலட், பழச்சாறு போன்றவற்றில் இதனை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது:

ராடிச்சியோவில் பொட்டாசியம் அதிக அளவில் உளள்து. அதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. சிறுநீரகத்தில் உள்ள அதிக அளவு உப்பை போக்கி, உடலின் திரவ அளவை சரியான நிலையில் நிர்வகிக்க உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

ராடிச்சியோவில் உள்ள குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து சீரான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மலச்சிக்கல்,  வயிறு உப்புசம், வாய்வு தொல்லை போன்ற பாதிப்புகளைக் குறைத்து, குடல் ஆரோக்கியத்தை வழக்கமான முறையில் பராமரிக்க உதவுகிறது.

தொற்றை எதிர்த்து போராடுகிறது:

ராடிச்சியோவின் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள் ஒட்டுண்ணிகளால் இரைப்பைக் குழாயில் ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும். ராடிச்சியோ விலங்குகளில் மலேரியா எதிர்ப்பு  மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.