குழந்தைகளுக்கு உண்டாகும் பதட்டக் கோளாறு
உங்கள் குழந்தை பொதுஇடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா ? அவர்களுக்கு பதட்டக் கோளாறு பாதிப்பு இருக்கலாம்..
பல குழந்தைகள் மிகச் சிறிய வயதிலேயே பல்வேறு அச்சங்கள் மற்றும் கவலைகளால் அவதிப்படுகிறார்கள்; அவர்களில் சிலர் அவ்வப்போது சோகமாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் உணரக்கூடும். புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வது, புதிய சவால்களைச் சந்திப்பது, போன்றவற்றின் மூலம் அவர்களின் பயத்தை போக்க வேண்டும். குழந்தைப் பருவம் முழுவதும் ஒரு கவலையான மற்றும் பதட்டமான சூழலே உள்ளது. மேலும், அந்த பருவத்தில் பள்ளியில் சிறப்பாக செயல்படவேண்டும், ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் , பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டும் என்று குழந்தைகளுக்கான பொறுப்புகள் மிகவும் அதிகம். இந்த பொறுப்புகளை குழந்தைகள் சரிவர செய்யமுடியாத நேரத்தில் அவர்களுக்குள் ஒருவித கவலை அல்லது பதற்றம் போன்ற உணர்வு உண்டாகிறது. மிக மோசமான சூழ்நிலையில், இந்த உணர்வு அவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும், இறுதியில் அவர்கள் கவலைக் கோளாறால் பாதிக்கப்படுவார்கள்.
கவலைக் கோளாறு 6 விதமாக வகை படுத்தப்படுகிறது, அவை..
பொதுவான கவலைக் கோளாறு:
இந்த கவலைக் கோளாறு பல்வேறு சூழ்நிலைகளைப் பற்றி அதிகப்படியான மற்றும் கட்டுப்பாடற்ற கவலையை உள்ளடக்கியது. அமைதியற்ற உணர்வு, தீவிர தலைவலி, வயிற்று உபாதை, தசை வலி போன்றவை பதட்டக் கோளாறின் அறிகுறியாகும். இந்த வகையான கவலைக் கோளாறு பள்ளி, நட்பு, உறவுகள் அல்லது பிற செயல்பாடுகளில் செயல்திறன் குறித்த கவலைகளை ஏற்படுத்தும். இந்த வகையான கவலைக் கோளாறு குழந்தைகளில் மிகவும் பொதுவானது.
பிரிவு கவலைக் கோளாறு:
இந்த வகையான கோளாறு உள்ள குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படலாம். குறிப்பாக 2-4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிவு கவலை பொருத்தமானது என்று கூறப்படுகிறது. ஆனால் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு, பெற்றோரிடமிருந்து பிரிந்து செல்வது குறித்த அதிக பயம் அல்லது கவலையை தோற்றுவிக்கும். மற்றும் தனியாக விளையாடுவதில் அல்லது தனியாக இருக்கும்போது சிரமப்படுவது, அல்லது தனியாக தூங்குவது போன்ற அறிகுறிகளைக் காண்பிப்பது பெற்றோருக்கு கவலை அளிக்கும் காரணியாக இருக்கலாம்.
சில இடங்களில் மட்டும் அமைதி காப்பது:
இது பள்ளி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக சூழல்களில் குழந்தைக்கு திறம்பட பேசவும் தொடர்பு கொள்ளவும் முடியாத ஒரு சிக்கலான குழந்தை பருவ கவலைக் கோளாறு. இந்த வகையான கவலைக் கோளாறு உள்ள குழந்தைகள் , அவர்கள் வீட்டிலோ அல்லது அவர்கள் வசதியாக உணரும் இடத்திலோ மிகவும் பேசக்கூடியவர்களாக இருந்தாலும் கூட சில வகையான சமூக சூழ்நிலைகளில் பேச மறுக்கக்கூடும். குழந்தைகள் பொது இடங்களில் பேச மறுக்கலாம் அல்லது மற்றவர்களுடன் நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்கலாம். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பொதுவாக இந்த வகையான கோளாறால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வகை பாதிப்பு கண்டறியப்பட்டால், உங்கள் குழந்தையை அவ்வப்போது ஆலோசனை அமர்வுகளுக்கு அழைத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சில குறிப்பிட்ட பயம்:
சில குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது பொருளைப் பற்றிய பயம் அல்லது கவலையை அனுபவிக்க முடியும். பெரும்பாலும் குழந்தை அந்த பொருள் அல்லது சூழ்நிலையிலிருந்து விலகி இருக்கக்கூடும் அல்லது அதிக பயத்துடன் சகித்துக்கொள்ளத் தொடங்கும். குழந்தைகள் தன்னைச் சுற்றி இவ்வித பயத்தை உணரும்போது அழவோ அல்லது பெரியவர்களுடன் ஒட்டிக்கொள்ளவோ கூட செய்யலாம். பூச்சிகள், இரத்தம், விலங்குகள், உயரங்கள் அல்லது பறக்கும் பயம் சில வகை பொதுவான பயங்கள் ஆகும்.
பீதி கோளாறு:
சீரான இடைவெளியில் பீதி தாக்குதல்களை அனுபவிக்கும் குழந்தைகள் பீதி கோளாறு பதட்டத்தால் பாதிக்கப்படுவதைப் பற்றி அடிக்கடி கவலைப்படுகிறார்கள். பீதி தாக்குதலுக்குள்ளான ஒரு குழந்தை மார்பில் வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், மூச்சு விடுவதில் சிரமம், குமட்டல், குளிர்ச்சி அல்லது வெப்ப உணர்வுகள் மற்றும் இறக்கும் பயம் போன்ற அறிகுறிகளைக் காட்டக்கூடும்.
சமூக கவலைக் கோளாறு:
உங்கள் பிள்ளை வகுப்பில் கலந்து கொள்வதில் அல்லது அவனது / அவளுடைய வகுப்பு மாணவர்களுடன் தொடர்பு கொள்வதில் ஒருவித ஆழ்ந்த அச்சம் கொண்டு அவதிப்பட்டால், அவன் / அவள் ஒரு சமூக கவலைக் கோளாறு பாதிப்பால் அவதிப்படலாம். குழந்தைகள் அழுதல், உறைதல் அல்லது பெரியவர்களுடன் ஒட்டிக்கொள்வதன் மூலம் இந்த பயத்தை வெளிப்படுத்தலாம்.
பதற்றம் என்பது பயம் அல்லது கவலையின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளில் இவ்வித பயம் கோபத்தையும் எரிச்சலையும் உண்டாக்குகிறது. சிலகுழந்தைகள் இந்த பயத்தை தனக்குள்ளேயே வைத்துக் கொள்வதால், இந்த அறிகுறிகள் குறித்து பெற்றோர் கவனமாக இருப்பது அவசியம் இல்லையேல் இந்த அறிகுறிகள் தவறவிடப்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு.