செயற்கை சுவையூட்டிகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா?

நாம் உண்ணும் பல உணவுகள், உதாரணத்திற்கு, சாக்லேட் , சோடா, டூத்பேஸ்ட், சுயிங்கம் போன்றவை செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டவையாகும்.

செயற்கை சுவையூட்டிகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா?

இன்று சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை சுவையூட்டிகள் சந்தையில் கிடைக்கின்றன. இவை சர்க்கரையை விட சுவை மிகுந்ததாக கருதப்படுகின்றன. கலோரிகள் அதிகரிக்காமல் கிடைக்கும் இனிப்பால்  மக்கள், குறிப்பாக எடை குறைக்க விரும்புவோர்  அதனை பெரிதும் விருப்புகின்றனர். அதன் பயன்பாடு அதிகரிக்கும்போது இவை ஆரோக்கியமானதா என்ற கேள்வியும் தானாகவே  எழுகிறது. அதனை பற்றியது தான்  இந்த தொகுப்பு.

குடல் பாக்டீரியா:
செயற்கை சுவையூட்டிகள் பெரும்பாலும் செரிமான மண்டலத்திலிருந்து செரிமானம் ஆகாமலே வெளியேறுகின்றன. இதனால் , இவை உடலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் , செயற்கை சுவையூட்டிகள், குடல் பாக்டீரியாக்களின் சம நிலையை மாற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கலாம் என்று குறிப்பிடுகின்றன.
செயற்கை சுவையூட்டிகளை விலங்குகளிடம் பரிசோதித்து பார்த்ததில், அவற்றின் குடல் பாக்டீரியாவின் மாற்றம் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் எண்ணிக்கை குறைவதாகவும் கூறப்படுகின்றன. நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் சமநிலை உடல் ஆரோக்கியம் மற்றும் எடையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த செயற்கை சுவையூட்டிகளால் , குடலில் இருக்கும் பாக்டீரியாக்களின் தன்மை ஒவ்வொரு மனித உடலிலும் வேறுபடுகிறது.  ஆரம்ப கட்ட ஆய்வுகளில் செயற்கை சுவையூட்டிகள் பயன்பட்டால் குடல் பாக்டீரியாக்களில்  மாற்றம் ஏற்படுவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

உடல் பருமன்:
உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் எடை குறைப்பிற்காக இந்த செயற்கை சுவையூட்டிகளை பெரிதும் பயன்படுத்துகின்றனர். சிலர் இதற்கு மாறான கருத்தை தெரிவிக்கின்றனர். இவை எடையை அதிகரிக்க செய்வதாக கூறுகின்றனர். ஆய்வுகளும் பல தரப்பட்ட கருத்துகளை தான் தெரிவிக்கின்றன. நீண்ட கால ஆராய்ச்சிகளால் தான்  நம்மால் இந்த கருத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும்.

டைப் 2 நீரிழிவு:
செயற்கை சுவையூட்டிகள் பயன்பாட்டால் இரத்த சர்க்கரை அளவில் எந்த ஒரு அதிகரிப்பும் காணப்படவில்லை என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்த ஒரு சிறந்த பொருளாக இவை கருதப்படுகின்றன. இதனை பற்றிய தெளிவான அறிக்கைகள் இன்னும் வெளி வர வில்லை. கண்காணிப்பு ஆய்வு நிலையில் கூறும் கருத்துகள் என்னவென்றால், நீண்ட நாட்கள் செயற்கை சுவையூட்டிகள் எடுத்து கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது . இன்னும் பல கட்ட ஆய்வின் முடிவுகள் தான் சரியான தகவலை நமக்கு உணர்த்தும்.

வாதம்:
செயற்கை சுவையூட்டிகளை பயன்படுத்துவதால் வாதம் மற்றும் இதய  பாதிப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை செயற்கை சுவையூட்டிகள்  பயன்படுத்துபவரை விட தினமும் பயன்படுத்துபவருக்கு வாதம் ஏற்படுவதற்கான மூன்று பங்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் கண்காணிப்பு ஆய்வின் அடிப்படையில் சொல்லப்படும் கருத்து தான். இவற்றையும் தெளிவு படுத்த இன்னும் பல சோதனைகளை செய்ய வேண்டும்.

சர்க்கரையின் பயன்பாடு:
சர்க்கரையை எடுத்துக் கொள்வது உடலுக்கு தீங்கானது என்று பலருக்கும் தெரியும். அதிகமான  சர்க்கரை உட்கொள்ளல் கேவிட்டி உருவாக்கம், உடல் பருமன், நீரிழிவு, மன நிலை கோளாறு போன்றவை அதிகரிக்கும் வாய்ப்புகளை கொண்டுள்ளது. ஆகவே சர்க்கரையை குறைந்த அளவில் எடுத்து கொள்வது உடல் நலனில் நன்மையை கொடுக்கும்.

சர்க்கரை vs செயற்கை சுவையூட்டிகள்:
அதே சமயத்தில், செயற்கை சுவையூட்டிகள் சர்க்கரை உட்கொள்ளும்  அளவை குறைக்க உதவுகிறது.  குறைவாக பயன்படுத்தும்போது எடை குறைப்பில் உதவுகின்றது, அதிகமாக மற்றும் நீண்ட நாட்கள் பயன்படுத்தும்போதும் நீரிழிவிற்கான அபாயம் உள்ளது.

உடல் ஆரோக்கியத்தை பற்றி நினைக்கும்போது, சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் ஆகிய இரண்டையுமே குறைவாக பயன்படுத்துவது நல்லது.