குழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இன்றைய நாட்களில் இளம் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே தொலைகாட்சி, மொபைல்,வீடியோ கேம் போன்றவற்றிற்கு அடிமையாகி விடுகின்றனர். குறிப்பாக பெரிய நகரங்களில் வசிக்கும் பிள்ளைகள் இந்த சூழ்நிலைக்கு அதிகம் பலியாகின்றனர்.
குழந்தைகள் உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக வளர்ச்சி அடைய தங்கள் சம வயது குழந்தைகளுடன் அவர்கள் விளையாட வேண்டும். விளையாடுவது என்று சொன்னால் மேலே கூறியது போல் வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டு அல்ல. அவர்கள் திறந்த வெளியில் விளையாட வேண்டும். இதனால் அவர்களுக்கு எண்ணற்ற பலன் கிடக்கிறது. திறந்த வெளியில் குழந்தைகள் விளையாடுவதால் உண்டாகும் சில அறிவியல் பூர்வமான நன்மைகள் உள்ளன . அதனைப் பற்றி அறிந்து கொள்ளவே இந்த பதிவு.
கண் பார்வை மேம்படுகிறது:
ஆப்டோமெட்ரி என்னும் அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை சோதனை செய்யும் ஒரு ஆய்வில், முக்கியமாக வீட்டுக்குள்ளேயே வசிக்கும் அல்லது விளையாடும் குழந்தைகளை விட திறந்த வெளியில் நேரத்தை செலவழிக்கும் அல்லது வெளியில் விளையாடும் குழந்தைகளுக்கு, சிறந்த பார்வை சக்தி உள்ளது. இதன்மூலம் திறந்த வெளியில் விளையாடும் குழந்தைகளுக்கு கண்பார்வை மேம்படும் என்று தெளிவாக அறிய முடிகிறது.
சமூக திறன்கள் மேம்படுகிறது:
வெளியில் அதிக நேரம் விளையாடும் குழந்தைகள் அலல்து வீட்டிற்கு வெளியே அதிக நேரம் செலவழிக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட அதிக சமூக திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அவர்களின் தன்னம்பிக்கை, நடத்தை சார்ந்த தகவல்கள் , கேள்விக்கு பதிலளிக்கும் திறன் போன்றவை அதிகரிக்கிறது. குறைவாக வீட்டை விட்டு வெளியே வரும் குழந்தைகள் அடிக்கடி கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாக நேரிடும் என்பது பெரும்பாலும் காணப்படுகிறது. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதால், மற்றவர்களுடன் நேரம் செலவிடுவதால் குழந்தையின் வளர்ச்சி மேம்படுகிறது.
மன அழுத்தம் குறைகிறது:
வீட்டின் நாலு சுவர்களுக்குள் விளையாடுவதைவிட, வெளியில் நண்பர்களுடன் விளையாடுவதால் மனஅழுத்தம் குறைகிறது. எனவே குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்புவது அவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கும். வெளிக் காற்றில் நடைபயிற்சி, விளையாடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வைட்டமின் டி:
குழந்தைகள் வீட்டிற்கு வெளியில் விளையாடுவதால் வைட்டமின் டி குறைபாடு குணமாகிறது. தற்போது பல குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காணப்படுகிறது, குறிப்பாக நகரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. வைட்டமின் டி சத்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது. எனவே, வருங்காலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சனை மற்றும் இதய நோய் போன்றவை ஏற்படுவதைத் தடுப்பதும் அவசியம். வைட்டமின் டி சத்தின் ஆதாரமாக விளங்குவது சூரியன், இது உங்கள் குழந்தைகளுக்கு ஏராளமான வைட்டமின் டி பெற உதவுகிறது.
கவனத்தை அதிகரிக்கிறது:
குழந்தைகளில் கவன குறைபாடு பாதிப்பான ஏ.டி.எச்.டி(ADHD) அறிகுறிகளைக் குறைக்க வெளிக்காற்று வீசும் இடங்களில் ஜாகிங் செய்வது அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ADHD என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு மூளைக் கோளாறு. இந்த பாதிப்புள்ள குழந்தைகளில் சில பொதுவான அறிகுறிகள் பள்ளி மற்றும் வீட்டில் அலட்சியம், மற்றவர்களிடம் பேச மறுப்பது, எந்த வேலையும் சரியாக செய்யாமல் இருப்பது, விஷயங்களை மறந்துவிடுவது அல்லது மிகவும் சிக்கலாக இருப்பது, கூச்சலிடுவது, பொறுமையிழந்து போவது போன்றவை. திறந்த வெளியில் காற்றில் நேரத்தை செலவிடுவது ஒரு குழந்தையை இத்தகைய கோளாறிலிருந்து பாதுகாக்கும்.