சாப்பிடும்போது எதற்காக கீழே அமர்ந்து சாப்பிட வேண்டும்?
வசதி வாய்ப்புகள் பெருகி, மேற்கத்திய கலாச்சாரம் வேர் விடும் இந்த காலகட்டத்தில் நமது வாழ்வியல் முறைகளில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
இன்று வாழ்வியல் முறைகளில் முக்கியமான ஒரு மாற்றம் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவது அல்லது buffet முறையில் நின்று கொண்டு சாப்பிடுவது. இந்த பழக்கத்தினால் நாம் கீழே அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை முற்றிலும் மறந்து விட்டோம் என்றே கூற வேண்டும். இதனால் மருத்துவ ரீதியாகவும், மனநல ரீதியாகவும் நாம் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.
நின்று கொண்டு சாப்பிடும்போது என்ன நடக்கிறது?
நமது ஒவ்வொரு வினாடியும் இன்று விலை மதிப்புள்ளதாக நமக்கு தோன்றுகிறது. ஆகவே எல்லா செயலையும் குறுக்கு வழியில் அல்லது எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக செய்ய நினைக்கிறோம். அதன்மூலம் நமது நேரத்தை மிச்சமாக்குவதாக நாம் எண்ணிக் கொளிறோம். அதனை குறிப்பாக சாப்பிடும்போது செயல்படுத்துகிறோம். அதாவது போகிற போக்கில் சாப்பிடுவது, நின்று கொண்டே சாப்பிடுவது என்று சாப்பிடும் நேரத்தை சுருக்கிக் கொள்கிறோம். இதனால் உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது தெரியுமா? நீங்கள் நேரத்தை மிச்சமாக்குகிறேன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். ஆனால் உண்மையில் நின்று கொண்டு சாப்பிடுவதால், செரிமான மண்டலத்தில் செரிமான நேரம் வழக்கத்தை விட அதிகமாகிறது. மேலும், அதிக அளவு உணவு உண்பதற்கு வழி வகுக்கிறது. இந்த இரண்டுமே சீரான உடல் ஆரோக்கியத்திற்கு எதிரி ஆகும்.
கீழே அமர்ந்து சாப்பிடுவது என்பது பழமையான பாரம்பரியம் மட்டுமல்ல.
"கீழே அமர்ந்து சாப்பிடுவது ஓல்ட் ஸ்டைல் சார்", என்று புறக்கணிப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த முறையில் கீழே அமர்ந்து சாப்பிடுவது உடலுக்கு பல நன்மை தரும் என்பது ஆராய்ச்சி பூர்வமாக விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்ட ஒரு செய்தியாகும். இதைத் தான் பல ஆண்டுகளாக நமது பெற்றோர் மற்றும் அவரது முன்னோர்கள் கூறி வந்தனர்.
உணவு சீரான முறையில் செரிமானம் ஆகிறது
கீழே அமர்ந்து சாப்பிடும்போது நீங்கள் ஒரு வித யோகாவை செய்கிறீர்கள். கீழே அமர்வது என்பது சம்மணமிட்டு உணவை குனிந்து எடுத்து சாப்பிடும் முறையாகும். இதனால் உங்கள் அடிவயிற்று தசைகள் செரிமான சாறு சுரக்க உதவுகின்றன . இதனால் உங்கள் செரிமான செயல்பாடுகள் வேகமாக மற்றும் சீராக நடைபெறுகின்றன.
உடலை நெகிழ்வாக வைக்க உதவுகிறது
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதால் நீண்ட நாட்களுக்கு உடல் நெகிழ்வுத் திறனுடன் இருக்க முடிகிறது. தினம் சாப்பிடும்போது இப்படி உட்காருவதால், இடுப்பு எலும்பு மற்றும் முதுகு தசைகளுக்கு ஒரு வித பயிற்சி கிடைப்பதால், உடல் வலி குறைகிறது.
சரியான எடை நிர்வகிக்கப்படுகிறது
தினசரி குறைந்தது மூன்று முறை உணவு உட்கொள்கிறோம். ஆகவே மூன்று முறை இந்த பயிற்சியை நீங்கள் செய்வதால், எடை அதிகரிக்காமல் இருக்க இந்த பழக்கம் உதவுகிறது. மாறாக, நின்று கொண்டே சாப்பிடுவதால், அதிக அளவு உணவு எடுத்துக் கொள்ளப்பட்டு, எடை நிர்வாகத்தில் பாதிப்பு உண்டாகிறது. இதனால் எடை அதிகரிக்கிறது. ஆகவே, உடல் பருமன் உள்ளவர்கள், கீழே அமர்ந்து சாப்பிடுவது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.
தனிமை மற்றும் மனச்சோர்வைப் போக்க உதவுகிறது:
நமது பெற்றோரின் காலகட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சேர்ந்து குடும்பமாக அமர்ந்து உணவு உட்கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் போனுடன் தான் நாம் மணிகணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குழந்தைகள் கூட எலெக்ட்ரானிக் உபகரணங்களாகிய போன் அல்லது கம்ப்யுட்டர் இல்லாமல் உணவு சாப்பிடுவதில்லை. இது எவ்வளவு தவறான விஷயம் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. இது நமது சமூக அமைப்பை கெடுத்து, ஒருவருடன் மற்றவர் உரையாடுவதை தடை செய்கிறது. இதனால் தனிமை என்னும் கூட்டுக்குள் நாம் அடைபடுகிறோம். சமூக தொடர்பை துண்டித்துக் கொள்வதால், மன நலம் பாதிக்கப்படுகிறது. இதனால் உடலின் செரிமானம் பாதிக்கப்படுகிறது. ஆகவே மறுபடியும் நமது முன்னோர்களைப் போல் கீழே அமர்ந்து குடும்பத்தோடு சாப்பிட்டு மனம் விட்டு பேசலாம். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
உடல் வடிவத்தை மேம்படுத்துகிறது :
நின்று கொண்டு சாப்பிடுவதால், உங்கள் தோள்பட்டை குறுகி, முதுகு தண்டு பாதிக்கப்படுகிறது. கீழே அமர்ந்து சாப்பிடுவதால், முதுகு தண்டு நேராக இருந்து உடல் வடிவம் சிக்கென்று இருக்க உதவுகிறது.
அதிகரித்த இரத்த ஓட்டம் காரணமாக இதயம் வலிமையாகிறது:
கீழே அமர்ந்து சாப்பிடுவதால் உண்டாகும் மற்றொரு நன்மை சீரான இரத்த ஓட்டம். நாம் அமர்ந்த நிலையில் இருக்கும்போது உடல் நெகிழ்வாக இருக்கும்படி வடிவமைக்கபட்டிருப்பதால், இந்த நிலையில் உடலில் இரத்த ஓட்டம் வேகமாக இருக்கும். இதனால் இதயம் வலிமை அடைகிறது. சம்மணமிட்டு அமரும்போது நரம்புகள் நெகிழ்ந்து இதய அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் சீரான செரிமானம் நடைபெறுகிறது.
தியானம்
நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு கவலை, நமது மனதிற்கு இதமளிக்கும் தியானம் செய்வதற்கு போதிய நேரமில்லை என்பது. உண்மையில் நீங்கள் கீழே அமர்ந்து உணவு எடுத்துக் கொள்ளும் நிலை என்பது யோகாசனத்தில் சுகாசனா என்ற ஒரு நிலையாகும். இது நரம்புகளை அமைதி படுத்த பின்பற்றும் ஒரு வகை ஆசனம் ஆகும். மேலும் குழப்பம் இல்லாத தெளிவான மனது சிறப்பான செரிமானத்திற்கு உதவும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.