முகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த வழிகள் சில
உங்கள் முகம், கன்னம் அல்லது கண்களுக்கு அருகில் அல்லது முகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சிறு சிறு வெள்ளை கட்டிகள் தோன்றுகிறதா? அவை பருக்கள் அல்லது வெள்ளை புள்ளிகள் போல் உள்ளதா ? அவை பருக்கள் அல்ல, நீங்கள் நன்றாக அதனைப் பார்த்தால் அது உங்களுக்கு தெரியும். அது தான் மிலியா என்று சொல்லப்பட்டும் பால் கட்டி.
மிலியா என்ற பால் கட்டி என்றால் என்ன ?
பால் கட்டி பொதுவாக மூக்கு மற்றும் கன்னத்தில் தோன்றும். இவை ஒரு குழுவாக மட்டுமே தோன்றும். தனித்து தென்படாது. இந்த பால்கட்டியை மருத்துவ மொழியில் மிலியா என்று கூறுகின்றனர். மிலியா மேல் தோலின் மேல் பகுதியில் பொதுவாக உருவாகும். மிலியாவின் வெள்ளை வண்ணம், இறந்த தோல் அடுக்குகளில் இருந்து ஸ்ட்ரேடம் கோர்நியம் என்று அழைக்கப்படும் உயிரணுக்களால் வழங்கப்படுகிறது. சில நேரம் மிலியா கட்டிகள் கொழுப்பு கட்டிகள் போல் தோற்றமளித்து உங்களைக் குழப்பலாம். ஆனால் மிலியா என்பது கொழுப்பு கட்டி, பரு அல்லது வேனிற் கட்டி போன்ற எதுவுமே இல்லை. இது இறந்த அணுக்களை தனக்குள்ளேயே கொண்டிருக்கும் தோல் பை தான்.
மிலியாவின் காரணங்கள் :
மிலியா தோன்றுவதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை. ஆனால் சிலருக்கு அடிக்கடி இந்த கட்டிகள் தோன்றி நீண்ட காலம் போகாமல் இருக்கும். பின்வரும் சிலவற்றை மிலியா தோன்றக் காரணமாக வைத்துக் கொள்ளலாம், ஆனால் பெரும்பாலும் மிலியா தோன்றுவதன் காரணம் மர்மமாகவே உள்ளது.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படும் சரும மாற்றம்
ரோசாசியா மற்றும் செபோர்ஹிக் டெர்மடிடிஸ் போன்ற தோல் தடிப்புகள்
விஷப் படர்கொடி போன்ற காயங்கள்
ஒவ்வாமை
தோல் எரிச்சல்
ஸ்டீராய்டு கிரீம்கள் போன்ற கடுமையான முகப் பொருட்களின் பயன்பாடு காரணமாக எரிச்சல்
டெர்மப்ரேஷன் மற்றும் லேசர் மறுபுறப்பரப்பாதல் போன்ற தோல் சிகிச்சைகள்
மிலியா எங்கு தோன்றும் :
மிலியா பெரும்பாலும், முகத்தில் தோன்றும். ஆனால் உடலில் எந்தப் பகுதியிலும் இவை தோன்றலாம்.
முகம், கழுத்து, உச்சந்தலை , மார்பு, முதுகு மற்றும் கைகளின் பின்புறம் இவை தோன்றலாம்.
மிலியா கட்டிகள் தோன்றும் சருமத்தைப் பெற்றவர்களுக்கு இதனைப் போக்குவது கடினமாக இருக்கலாம். சருமத்தை தளர்ச்சி அடையச் செய்வது மூலம் ஓரளவிற்கு மிலியாவிற்கு சிகிச்சை அளிக்கலாம், வீட்டு தீர்வுகள் பெரும்பாலும் இந்த நுட்பத்தை சார்ந்ததாகவே உள்ளது. சருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்யும்போது சருமத்தை கவனமாக கையாள வேண்டும். சில நேரம் சருமத்தில் எரிச்சல் உண்டாகும் வாய்ப்புகள் ஏற்படலாம். அல்லது அதிகமான மிலியா தோன்றவும் செய்யலாம்.
வீட்டுத் தீர்வுகள் மூலமாக மிலியாவைப் போக்குவது எப்படி ?
மிலியா கட்டிகள் மிகவும் சிறியதாக இருப்பவையாகும். உங்கள் முகத்தில் இவை இருப்பதை பலரும் பார்க்கத் தவறலாம். ஆகவே இதனை அப்படியே விடுவதால் ஒன்றும் நேர்ந்து விடாது. ஆனால் உங்கள் முகம் மிகவும் மென்மையாக பளபளப்பாக எந்த ஒரு சிறு கட்டியும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கீழே குறிப்பிட்டுள்ள சில எளிய குறிப்புகளை முயற்சித்துப் பார்க்கலாம்.
நீராவி பேஷியல் மூலம் சருமத்தை தளர்த்துவது :
பேஷியல் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது ஒரு சிறந்த வழியாகும். மிலியா கட்டிகள் என்பது சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் என்பதால் நீராவி பேஷியல் செய்வதால், உங்கள் சருமம் சுத்தமாகிறது. சரும துளைகளில் உள்ள அடைப்பை இது போக்குகிறது. மேலும் இந்த துளைகள் அடைப்பால் உண்டாகும் சரும பிரச்சனைகளையும் போக்குகிறது. சருமத்திற்கு அடியில் இருக்கும் பாக்டீரியாவை அழித்து எண்ணெய் மற்றும் அழுக்கைப் போக்குகிறது. இதனால் சருமத்தில் பருக்கள் மற்றும் கட்டிகள் கூட ஏற்படுவதில்லை.
தேவையான பொருட்கள் :
பேஷியல் ஸ்டீமர் அல்லது ஒரு பாத்திரத்தில் வெந்நீர்
பேஷியல் ஸ்க்ரப்
மென்மையான சோப் அல்லது பேஸ் வாஷ்
டவல்
குளிர்ந்த நீர்
செய்முறை :
மென்மையான சோப் அல்லது பேஸ் வாஷ் கொண்டு முகத்தை சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும்.
முகத்தைத் துடைத்துக் காய வைத்துக் கொள்ளவும்.
ஒரு சேரில் அமர்ந்துக் கொண்டு, டேபிளில் ஸ்டீமர் அல்லது வெந்நீர் பாத்திரத்தை வைத்துக் கொள்ளவும்.
முகத்தில் 3 - 5 நிமிடங்கள் நன்றாக ஆவி பிடிக்கவும்.
பிறகு முகத்தை டவலால் ஒத்தி எடுக்கவும்.
இப்போது முகத்தில் ஸ்க்ரப் தடவி, சுழல் வடிவத்தில் ஒரு நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். (சரும துளைகள் திறந்து இருப்பதால், அதிகமான நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டாம்.)
பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவுங்கள்.
மென்மையான துணியால் முகத்தை துடைத்திடுங்கள்.
பின்பு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இதனால் உங்கள் சரும துளைகள் மறுபடி மூடிக் கொள்ளும்.
முகம் காய்ந்தவுடன் தேவைபட்டால் மாயச்ச்சரைசர் பயன்படுத்தலாம்.
தேன் :
சருமத்தின் வறண்ட தன்மை, பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. இது மிலியா ஏற்பட ஒரு காரணமாகவும் உள்ளது. அழுக்கான சருமத்தால் சரும எரிச்சல் அல்லது ஓவ்வாமை ஏறப்டுகிறது, இதுவே மிலியாவிற்கு வழி வகுக்கிறது. தேன், காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. வறண்ட சருமத்தை எதிர்த்து போராடுவது மிலியாவைப் போக்கும் ஒரு வழியாகும். ஆகவே தேன் பயன்படுத்தி ஒரு ஸ்க்ரப் தயாரித்து, மிலியாவைப் போக்கலாம்.
தேவையான பொருட்கள் :
தேன் - 1 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்
ஜோஜோபா எண்ணெய் - 1 - 2 ஸ்பூன்
ஓட்ஸ் - 1 ஸ்பூன்
செய்முறை :
மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.
முகத்தை சுத்தமாகக் கழுவவும்.
பின்பு முகத்தை மென்மையாக துடைத்துக் கொள்ளவும்.
சுத்தமாகக் கழுவி, காய்ந்த முகத்தில் இந்த ஸ்க்ரப்பை தடவவும்.
3-5 நிமிடங்கள் சுழல் வடிவத்தில் மென்மையாக முகத்தை மசாஜ் செய்யவும்.
வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
தேவைப்பட்டால் சோப் கொண்டு முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.
முகம் காய்ந்தவுடன் மாயச்ச்சரைசெர் தடவலாம்.
சந்தனத் தூள் :
சருமத்திற்கு சந்தனம் மிகவும் சிறந்த பலனைத் தருகிறது. சருமத்தைக் களங்கமற்றதாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. சருமத்தின் துளைகளைச் சிறிதாக்க உதவுகிறது. சந்தனம், சரும நிறமிழப்பை தடுக்கும் தன்மை கொண்டதால், சூரிய ஒளியால் சேதமடைந்த சருமத்தைச் சீராக்க சந்தனம் உதவுகிறது. சரும எரிச்சல் அல்லது சரும தொற்றைப் போக்க குளிர்ந்த சந்தனத் தூள் அல்லது எண்ணெய் பயன்படுகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ளது. இதனால் பருக்கள் மற்றும் கட்டிகள் அகற்றப்படுகிறது. மிலியாவைப் போக்கவும் இந்த சந்தன ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
சந்தனத் தூள் - 1 ஸ்பூன்
கடலை மாவு - 1 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
சந்தன தூள் மற்றும் கடலை மாவை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையுடன் தேவையான அளவு பன்னீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்யவும்.
இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும்.
பின்பு சுழல் வடிவத்தில் மென்மையாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
அடுத்த 10-30 நிமிடங்கள் இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் காய விடவும். பின்பு முகத்தை நீரில் கழுவி, காய விடவும்.
மாதுளை தோல் :
மாதுளம் பழம் மிகவும் சுவையான ஒரு பழம், இதன் தோலில் சருமத்திற்கு நன்மை பயக்கும் பல சக்திகள் அடங்கியுள்ளன. இதில் இருக்கும் எல்லசிக் அமிலத்தால், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உள்ளேயே வைத்துக் கொள்ள உதவுகிறது. சருமத்தின் pH அளவைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. இதனால் முகத்தில் தேவையற்ற பருக்கள், கட்டிகள், கரும்புள்ளிகள் , மிலியா போன்றவை இடம்பெறுவதில்லை. மாதுளை தோலால் செய்யப்பட்ட ஸ்க்ரப் மிலியாவை எளிதில் போக்குகிறது.
தேவையான பொருட்கள் :
மாதுளை தோல் தூள் - 2 ஸ்பூன்
பழுப்பு சர்க்கரை - 1 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
ஜோஜோபா எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை :
மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.
இந்த கலவையை முகத்தில் தடவவும்.
5 - 7 நிமிடங்கள் இந்த ஸ்க்ரப்பை முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும்.
பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி காய விடவும்.
பின்பு முகத்திற்கு மாயச்ச்சரைசெர் தடவவும்.
விளக்கெண்ணெய் :
வறண்ட சருமத்தில் ஏராளமான இறந்த செல்கள் தோன்றும். ஆகவே மிலியா ஏற்படும் வாய்ப்பு அதிகம். இத்தகைய வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் ஒரு வரப்பிரசாதம்.
விளக்கெண்ணெய் நீண்ட நேரம் சருமத்திற்கு ஈரப்பதம் தருகிறது. அது மட்டுமல்ல, விளக்கெண்ணெய், சருமத்தில் உள்ள நச்சுகளைப் போக்கி, சருமத்தைத் தூய்மையாக்குகிறது. இது ஒரு கிருமிநாசினியாகச் செயலாற்றுகிறது. விளக்கெண்ணெயில் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை இருப்பதால் கட்டிகள் மற்றும் பருக்களையும் போக்க வல்லது. மிலியா பாதிக்கப்பட்ட சருமத்துள் விளக்கெண்ணெய் தடவுவதால் சருமம் தளர்ந்து புத்துணர்ச்சி அடைகிறது. ஆகையால் இறந்த அணுக்கள் வெளியேறி, மிலியா மறைகிறது.
விளக்கெண்ணெய்யை எப்படி பயன்படுத்துவது ?
அது மிகவும் சுலபம்.
விளக்கெண்ணெய்யை சருமத்தில் தடவி விடுங்கள், சருமம் தானாக அதனை உறிஞ்சிக் கொள்ளும். விளக்கெண்ணெய் பயன்படுத்தும்போது அதனை தடவி, ஸ்க்ரப் செய்ய வேண்டிய தேவை இல்லை. விளக்கெண்ணெய் சருமத்தில் ஊடுருவி வேலை செய்கிறது. விளக்கெண்ணெய் யை சருமத்தில் தடவுவதால், சருமத்தில் உள்ள அழுக்குகளும், இறந்த அணுக்களும் வெளியேறுகிறது. சில மணி நேரம் கழித்து உங்கள் முகத்தைக் கழுவுவதால், தூய்மையான சருமம் உங்களுக்கு கிடைக்கிறது. இதனை தொடர்ச்சியாக சில நாட்கள் தடவி வருவதால், சருமத்தில் நல்ல மாற்றத்தை உணரலாம்.
பேக்கிங் சோடா :
சருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்ய பேக்கிங் சோடா ஒரு சிறந்த தீர்வாகும். இதனைப் பயன்படுத்தி மிலியாவைப் போக்கலாம். இது சருமத்தின் ph அளவைப் பராமரிக்கிறது. மேலும் இறந்த அணுக்களைப் போக்குவதால் மிலியாவை எளிதாக போக்க முடிகிறது.
தேவையான பொருட்கள் :
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
பேக்கிங் சோடாவில் தண்ணீர் விட்டு, ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
இதனை உங்கள் சருமத்தில் தடவி, காய விடவும்.
நன்றாக காய்ந்தவுடன் தண்ணீரால் கழுவி , முகத்தை துடைக்கவும்.
வறண்ட சருமமாக இருந்தால் உடனடியாக மாயச்ச்சரைசெர் தடவவும்.
எலுமிச்சை மற்றும் உப்பு :
சருமத் துளைகள் அழுக்கால் அடைபடும்போது, அவற்றை திறக்க ஒரு சிறந்த வழி, எலுமிச்சை சாறு. அதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் சரும துளைகளில் உள்ள அழுக்கை அகற்ற உதவுகிறது. மேலும், சருமத்தில் அடைப்பட்டுள்ள இறந்த அணுக்களை வெளியேற்றி மிலியாவைப் போக்கவும் இது உதவுகிறது. இந்த எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்ப்பதால் இதன் பலன் இரட்டிப்பாகிறது. உப்பு சருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்வதுடன், சருமதிற்குள் இருக்கும் அழுக்கையும் போக்குகிறது.
தேவையான பொருட்கள் :
ஒரு எலுமிச்சையின் சாறு
உப்பு - ஒரு சிட்டிகை
பஞ்சு
செய்முறை:
எலுமிச்சை சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
இந்த கலவையில் காட்டன் பஞ்சை முக்கி எடுக்கவும்.
இப்போது, மிலியா உள்ள இடத்தில் , கலவையில் நனைத்த பஞ்சை ஒத்தி எடுக்கவும்.
அப்படியே 15-20 நிமிடங்கள் விடவும்.
பிறகு தண்ணீரால் கழுவவும்.
மிகவும் சென்சிடிவ் சருமம் உங்களுக்கு இருந்து, எலுமிச்சை சாற்றின் எரிச்சலைத் தாங்க முடியவில்லை என்றால், அந்த கலவையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை சாறு தடவியபின், வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். அப்படி வெளியில் செல்வதால், சூரிய ஒளியின் பாதிப்பால் உங்கள் சருமத்தில் சேதம் ஏற்படுகிறது. அதனால் இந்த தீர்வை மாலை நேரங்களில் அல்லது இரவு நேரங்களில் அல்லது வீட்டில் இருக்கும்போது பின்பற்றலாம்.
அரிசி ஸ்க்ரப் :
உலகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவுப் பொருள் அரிசி. இத்தகைய அரிசி, முகத்தை பொலிவாக மாற்றவும் உதவுகிறது. சருமத்தைத் தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்வதால் மிலியாவைப் போக்க முடிகிறது. ஆகவே அரிசி ஒரு சிறந்த சரும புத்துணர்ச்சியைத் தருவதாக கூறப்படுகிறது. அரிசியுடன் சில பொருட்களை சேர்த்து ஒரு ஸ்க்ரப் செய்வதால் நல்ல பலனை அடையலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1-2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
தேன் - 1ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
அரிசி மாவுடன் பேகிங் சோடா மற்றும் தேன் சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.
இந்த கலவையை முகத்தில் தடவி, 2 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
தண்ணீரால் முகத்தைக் கழுவி, மென்மையாக துடைக்கவும்.
பாதாம் ஸ்க்ரப் :
ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குவது பாதாம் . சருமத்திற்கு நன்மை சேர்க்கும் வைட்டமின் ஏ மற்றும் ஈ பாதாமில் அதிகமாக உள்ளது. மேலும், இதில் ஈரப்பதம் மற்றும் சருமத்தை மென்மையாக்கும் தன்மை உண்டு. இந்த எல்லா குணங்களும் கொண்ட பாதாம், மிலியாவைப் போக்க பெரிதும் உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
பாதாம் - 5-6
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை:
பாதாமை இரவு முழுதும் ஊற வையுங்கள்.
மறுநாள் காலை , பாதாமின் தோலை உரித்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் தூளாக அரைக்க வேண்டாம்.
இதனுடன் சிறிதளவு தேன் சேர்க்கவும்.
தேவைபட்டால் சில துளி நீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.
இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊற விடவும்.
பின்பு, மென்மையாக சுழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும்.
இந்த ஸ்க்ரப் சற்று காயத் தொடங்கினால், சிறிதளவு தண்ணீர் தெளித்து மசாஜ் செய்யலாம்.
ஒரு நிமிடம் வரை மசாஜ் செய்யலாம்.
பின்பு முகத்தைத் தண்ணீரால் கழுவிக் கொள்ளுங்கள்.
களிமண் மாஸ்க் :
மிலியாவைப் போக்க களிமண் மாஸ்க் சிறந்த பலனைத் தருவதாக பலரும் கூறுகின்றனர். பெண்டோடைட் களிமண் வகை, மிலியாவைப் போக்க , பெரிதும் உதவுகிறது. சருமத்தில் உள்ள நச்சுகளை சிறப்பாகப் போக்கி, இறந்த அணுக்களை வெளியேற்ற இந்த களிமண் பெரிதும் உதவுகிறது. இந்த மாஸ்கை உங்கள் முகத்தில் தடவியவுடன், இந்த களிமண் மேலே எழும்பி, ஒரு ஸ்பாஞ் போல் மாறி, உடலில் தேவையற்ற அழுக்குகளை உறிஞ்சிக் கொள்கிறது. பெண்டோடைட் களிமண், சிலிக்கா, கால்சியம், மெக்னீசியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம் போன்றவற்றையும் கொண்டுள்ளது, இதனால் உங்கள் சருமம் சுத்தமாக, தெளிவாக, பொலிவாக மாறுகிறது.
தேவையான பொருட்கள் :
பெண்டோடைட் களிமண் - 1-2 ஸ்பூன்
தண்ணீர்
செய்முறை :
இந்த களிமண்ணுடன் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.
இதனை முகத்தில் தடவவும்.
தானாக காயும் வரை அப்படியே விடவும்.
பின்னு தண்ணீரால் முகத்தைக் கழுவவும்.
ஆர்கன் எண்ணெய் :
ஆர்கன் எண்ணெய்யை "திரவ தங்கம்" என்று அழைப்பார்கள். இதன் தாய்நாடு மொராக்கோ ஆகும். ஆர்கன் மரத்தின் கொட்டையில் இருந்து இந்த எண்ணெய் எடுக்கப்படுகிறது. வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக விளங்கும் இந்த எண்ணெய், சருமத்திற்கு சிறந்த நீர்சத்தைத் தருகிறது. ஆர்கன் எண்ணெயில் இருக்கும் அண்டி ஆக்சிடென்ட் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை நீக்கி, களங்கமில்லாத சருமத்தைத் தருகிறது. எக்ஸிமா போன்ற வறண்ட சருமத்தின் தொந்தரவுகளைப் போக்கி, சருமத்திற்கு நன்மை செய்கிறது, இதில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள். நீங்கள் நினைத்ததை விட நல்ல பலனைக் கொடுக்கக் கூடியது இந்த ஆர்கன் எண்ணெய். சருமத்தின் அழற்ச்சியைப் போக்கும் தன்மை உள்ளதால், ஆர்கன் எண்ணெய் , பரு , கட்டி போன்றவற்றைப் போக்கவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
ஆர்கன் எண்ணெய் - சில துளிகள்
செய்முறை :
மிலியா உள்ள இடத்தில் சில துளி ஆர்கன் எண்ணெயைத் தடவவும். கண்ணுக்கு கீழ் இருக்கும் மென்மையான இடத்திலும் இந்த எண்ணெயைத் தடவலாம். பொதுவாக இந்த இடங்களில் அடிக்கடி மிலியா தோன்றும்.
தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் இந்த எண்ணையைத் தடவலாம்.
சில தினங்களில் மிலியா சுருங்குவதை உங்களால் காண முடியும்.
ஆப்பிள் சிடர் வினிகர் :
சருமத்தின் எந்த பாதிப்பையும் குணப்படுத்தும் தன்மை ஆப்பிள் சிடர் வினிகருக்கு உண்டு. இதனை வெளிப்புறமாக தடவுவதால் சருமத்தின் pH அளவு பராமரிக்கப்படுகிறது. மேலும் இதனை உட்கொள்வதால், உடலின் pH அளவு பராமரிக்கபப்டுகிறது என்பது ஆச்சர்யமூட்டும் உண்மையாகும். மிலியாவைப் போக்க ஆப்பிள் சிடர் வினிகரைப் பயன்படுத்தலாம். ஆப்பிள் சிடர் வினிகரை உட்கொள்வதில் ஆர்வம் இருந்தால், தினமும் காலை எழுந்தவுடன் 1-2 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருகலாம். சருமத்தின் வெளிப்புறமாக தடவ பின்வரும் வழியை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் சிடர் வினிகர்
தண்ணீர்
இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:
ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கொள்ளவும்.
இந்த கலவையில் பஞ்சை முக்கி எடுக்கவும்.
இதனை மிலியாவில் தடவவும்.
ஒரு நாளில் பலமுறை இதனைச் செய்து வரலாம்.
பச்சை காபி கொட்டை :
பொதுவாக காபிக்கு பயன்படுத்துவது வறுத்த காபி கொட்டைகளாகும் . பச்சை காபி கொட்டைகள் என்பது வறுக்காத காபி கொட்டைகளாகும். ஆகவே இவற்றில் அன்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளன. இந்த அன்டி ஆக்சிடென்ட் சருமத்திற்கு திங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து சருமத்தைப் பாதுகாத்து களங்கமில்லாத சருமத்தைத் தருகிறது.
தேவையான பொருட்கள் :
பச்சை காபி கொட்டை அரைத்தது - 1 ஸ்பூன்
பழுப்பு சர்க்கரை - 1 ஸ்பூன்
ஜோஜோபா எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
மேலே கூறிய எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.
இதனை உங்கள் சருமத்தில் தடவவும்.
2 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும்.
பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி விடுங்கள்.
பின்பு நன்றாக காய்ந்தவுடன், சருமத்திற்கு மாயச்ச்சரைசெர் தடவவும்.
மிலியாவைப் போக்க சில குறிப்புகள்:
மிலியாவால் பாதிக்கப்படும் சருமம் உள்ளவர்கள், தங்கள் சருமத்தை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். ஆரோக்கியமான சரும பாதுகாப்பு முறையை தொடர்ந்து செய்து வருவதால் ஒரு முறை மிலியா வந்து போன பின் மறுமுறை வராமல் பாதுகாக்கலாம். அத்தகைய மக்களுக்கான குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
சருமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் - இறந்த அணுக்கள் சருமத்தில் தாக்காமல் இருக்கும்படி சருமத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். இதற்காக, சருமத்தை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை, மென்மையான சோப் அல்லது க்ளென்சர் பயன்படுத்தி சருமத்தை சுத்தம் செய்யுங்கள்.
சருமத்தை மாயச்ச்சரைஸ் செய்யுங்கள் - சரும பிரச்சனைகளான அரிப்பு மற்றும் எரிச்சல் வறண்ட சருமத்தில் அதிகமாக இருக்கும். இதனால் மிலியா தோன்றுகிறது. ஆகவே சருமத்தை வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் வைக்கும் வழிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் முகத்திற்கும் சருமத்திற்கும் ஏற்ற மாயச்ச்சரைசெரை பயன்படுத்துங்கள்.
சருமத்தை தளர்ச்சி அடையச் செய்யுங்கள் - எந்த ஒரு அறுவை சிகிச்சையுமில்லாமல் மிலியாவைப் போக்க ஒரு சிறந்த வழி, சருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்வது தான். சருமத்தை தளர்த்துவதால், இறந்த செல்கள் வெளியேறி, மிலியா வராமல் தடுக்கிறது. இயற்கையான மூலப்பொருட்கள் மூலம் அடிக்கடி சருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி பெறுங்கள். சந்தையில் வாங்கும் பொருட்களாக இருந்தால், மென்மையான மூலப்பொருட்கள் கொண்ட சரும தளர்த்திகளை வாங்கி பயன்படுத்துங்கள். தொடர்ந்து இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் சருமத்தில் ஒரு சிறு சோதனை செய்து கொள்ளவும்.
சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காத்திடுங்கள் - நீண்ட நேரம் சூரிய ஒளியில் நிற்பவர்களுக்கு மிலியா பாதிப்பு அதிகமாக இருக்கும். வீட்டில் இருந்து வெளியில் செல்வதற்கு முன், சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள், சருமத்தை துணியால் மூடிக்கொள்ளுங்கள், குடை பயன்படுத்துங்கள், தொப்பி , க்ளௌஸ் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
கனமான ஒப்பனை வேண்டாம் - மிக அதிகமான ஒப்பனை பயன்படுத்திய பின் சிலருக்கு மிலியா பாதிப்பு உண்டாகிறது என்று பலரும் கூறுகின்றனர். குறிப்பாக கண்களுக்கு கீழே இதன் பாதிப்பு ஏற்படுகிறது. மிலியா பாதிப்பு ஏற்படுவதை தொடக்கத்திலேயே உணர்ந்தால், ஒப்பனையை மிகவும் லேசாக பயன்படுத்தி பாருங்கள். இதனை நிறுத்தியவுடன் மிலியா பாதிப்பு குறைந்தால் மொத்தமாக ஒப்பனை பயன்பாட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். இதற்காக தனியாக எந்த ஒரு தீர்வையும் கடைபிடிக்கக் வேண்டாம். உங்கள் சருமத்திற்கு ஏற்றுக் கொள்ளாத ஒப்பனைப் பொருட்களைத் தவிர்ப்பதே மிலியா பாதிப்பில் இருந்து மீள ஒரு சிறந்த வழியாகும்.
மிலியாவை கிள்ளவோ அமுக்கவோ வேண்டாம்
ஊசி போன்றவற்றால் மிலியாவை அழுத்த வேண்டாம். இதற்கான நிபுணரை அல்லது தோல் மருத்துவரை அணுகி, இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். மிலியா என்பது சருமத்திற்கு அடியில் இருக்கும் கட்டியாகும். இதனைப் போக்க நீங்கள் ஊசி போன்ற பொருட்களை பயன்படுத்தினால், சருமத்தின் நிலை இன்னும் மோசமாகும். தழும்புகள் தோன்றவும் வாய்புகள் உண்டு. மிலியா என்பது தீங்கு விளைவிக்கக் கூடியது அல்ல. சில சிறிய முயற்சியால் இவற்றை முழுவதுமாக நீக்கலாம். இல்லையேல், தவறான சிகிச்சையால் முகத்தில் தழும்புகள் நிரந்தரமாக இருக்கும் நிலை உண்டாகலாம். .
தினமும் சருமத்தை தளர்த்துவது, சூரிய கதிரிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பது, சரியான பாதுகாப்பு முறையால் சருமத்தை பாதுகாப்பது, எல்லாவற்றுக்கும் மேலாக பொறுமையாக முயற்சி செய்வது போன்றவை மீலியாவை எளிதில் விரட்டும் செயல்களாகும்.