ஆழித்தேர் !
அப்பர் சுவாமிகள், ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரில்’ என்று மனமுருகி பாடினாராம். தேரோட்டத்தின் போது இறைவன் அருளை பெறலாம் என்பதற்கு இதுவே சான்றாகும்.
அப்பர் சுவாமிகள் ஆழித்தேர்வித்தகனை கண்ட நிகழ்வு
பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தியளிக்கும் தலமாக திகழ்கிறது திருவாரூர். தேர் என்றாலே திருவாரூர் என்று சொல்லும் அளவுக்கு திருவாரூர் தேர் உலக பிரசித்தி பெற்றது. திருவாரூரில் உள்ள ஆழித்தேரைத் தான் உலகிலேயே மிக பெரிய தேர் என்று கூறுவார்கள். திருவாரூர் தேரை ஆழித்தேர் என்று அழைப்பதற்கு காரணம் என்னவென்றால், (ஆழி+தேர்) ஆழி என்றால் பரந்து விரிந்த என்று பொருள். பரந்து விரிந்த பெரிய தேர் என்று பொருள்படும். அப்பரடிகளார் ஆழித்தேர் வித்தகனே என்று பாட காரணமாக இருந்த நிகழ்வு மற்றும் தேர்திருவிழா கொண்டாடபடுவதன் நோக்கத்தையும் பற்றி எனக்கு தெரிந்த விசயத்தை உங்களுக்கு இக்கட்டுரையின் மூலம் பகிர்கின்றேன்.
முப்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ( மார்ச் -25) தேதி ஆகம விதிப்படி ஆழித்தேரோட்டம்:
தொன்றுதொட்டு திருவாரூர் தேர் ஆகம முறைப்படி பங்குனி ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டுவந்தது. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த ஆகம விதியை மீறி தேரோட்டம் சித்திரை, வைகாசி மாதத்தில் நடைபெற்றதால் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி,புயல், வெள்ளம் போன்றவை ஏற்பட காரணமாக இருந்தது என்று கூறுகின்றனர் சாஸ்திரம் தெரிந்தவர்கள். அதனால் நாடு செழிக்க ஆகம விதிப்படி ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கையை முன்வைத்தனர். இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஆகம முறைப்படி பங்குனி ஆயில்யம் நட்சத்திரத்தில் (மார்ச்- 25) தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பல நல்ல பலன்கள் கிடைக்கும்.
தேர்திருவிழா கொண்டாடுவதன் நோக்கம்:
நாட்டு மக்களின் ஒற்றுமைக்காக:
மக்களை ஒன்று சேர்ப்பதால் நாட்டில் அமைதியும், செழுமையும் உண்டாகும் என்ற நோக்கத்திற்காக இது போன்ற தேர் திருவிழாவை கொண்டாடும் வழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள் என்று கூறுகின்றனர்.
இறைவனின் அருளை பெற:
கோயிலுக்குள் இருக்கும் உற்சவருக்கு தினமும் வேத மந்திரங்கள் ஓத அபிஷேகங்களும், பூஜைகளும் செய்யும் போது ஏற்படும் சக்தியினை தனக்குள் கிரகித்து அனைவருக்கும் தரவேண்டும் என்பதற்காக இத்தேர் திருவிழாவின் மூலம் பக்தர்களுக்கு உற்சவர் காட்சி அளித்து அருள்பாலிப்பார் என்ற உயரிய நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்று ஆகமநூல்கள் கூறுகின்றது. இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் இந்த இரண்டும் மக்களுக்கு தேரோட்டத்தின் மூலம் நன்மையே கிடைக்கும் என்பதையே உணர்த்துகின்றது.
திருவாரூர் ஆழித்தேரின் சிறப்பு:
கோயிலுக்கு அமைக்கப்பட வேண்டிய அனைத்து அங்கங்களும் இந்த தேரில் அமைக்கப்பட்டு விளங்குவதால் இதை நகரும் கோயில் என்றும் கூறுவார்கள். தேரின் அமைப்பைப் பொருத்தவரை அது கோவில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாக அமைகிறது. ஆழித்தேர் எண்முக்கோகண வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது 96 அடி உயரம், 31 அடி அகலமும், 360 டன் எடையும் கொண்டது.தேர் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை. இந்த 4 சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டிருப்பதால் எளிதாக தேரை திருப்ப முடிகிறது. ஆழித்தேரானது நான்கு நிலைகளையும் பூதப்பார், சிறுஉறுதலம், பெரிய உறுதல், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என ஏழு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இந்தத் தேரில் நான்காவது அடுக்கு 31 அடி உயரமும் 31 அடி அகலமும் கொண்டது. இந்த அடுக்கில் தான் உற்சவர் தியாகராஜ சுவாமிகள் வீற்றிருந்து அருள்பாலிப்பார். திருவாரூர் தேரின் முன்புறத்தில் நான்கு பெரிய வடம் பிடிக்கும் கயிறுகள் மற்றும் தேரின் மேல் புறத்தில் 1மீட்டர் உயரத்திலான கலசம் பொருத்தப்பட்டிருக்கும்.
அப்பரடிகளார் ஏன் ஆழித்தேர் வித்தகனே என்று பாடினார்:
திருநாவுக்கரசரை அப்பர் என்றும் அழைப்பார்கள். ஒரு முறை அப்பர் திருவாரூர் தலத்துக்கு வந்து ஆழித்தேரோட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ஆழித்தேரில் வீற்றிருந்தபடியே தியாகேசர் அப்பரடிகளுக்குத் திருக்காட்சி அளித்தாராம். அதனால் மெய்யுருகிப் போன அப்பர் சுவாமிகள், ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரில்’ என்று மனமுருகி பாடினாராம். ( திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் : 19 : 7) இந்த வரி குறிப்பிடப்பட்டுள்ளது. தேரோட்டத்தின் போது இறைவன் அருளை பெறலாம் என்பதற்கு இதுவே சான்றாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இறைவனின் அருளை பெற தேரை சுற்றி நடந்து வந்தும், தேரை வடம் பிடித்து இழுத்தபடி ஆருரா! தியாகராசா! என்ற விண்ணை பிளக்கும் முழக்கத்திற்கு நடுவில் ஆழிதேரில் தியாகராசர் ஆடி அசைந்தபடி நான்கு மாட வீதிகளிலும் உலா வரும் திருக்காட்சியை காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
தேரோட்டத்தை எவர் ஒருவர் தரிசிக்கிறாரோ, அவரின் கர்மவினைகள் அனைத்தும் நீங்கி மோட்சத்தை அடைவார் என்பது ஐதீகம். திருவாரூர் தேரை பார்க்கும்போது இது போன்ற பிரமாண்டமான தேர்களை கலைநயத்துடன் உருவாக்கிய தமிழனின் திறமையை எண்ணி மெய்சிலிர்க்கிறது. திருவாரூர் ஆழித்தேர் அசைந்து வரும் அழகைக் காண கண் கோடி வேண்டும் என்பார்கள். இதை நாம் கண்டு இன்புற்று பலன்களை பெற்றது போல் நம்மை அடுத்து வரும் தலைமுறையினரும் இதை கண்டு பலன்களை பெறவும் , நம் கலாச்சாரத்தை காக்கவும் இந்த பொக்கிஷத்தை நாம் பேணி காப்பதோடு இது போன்ற திருவிழாக்களின் நோக்கத்தை அவர்களிடம் புரிய வைக்க வேண்டும்.ஆழித்தேர் வித்தகனை அனைவரும் கண்டு பலன் பெறுவோம்.