வைட்டமின் சி சத்து குறைபாடு
வைட்டமின் சி சத்து குறைபாட்டிற்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளில் வைட்டமின் சி சத்து மிகவும் முக்கியம். அவை போதுமான அளவு இல்லாமல் இருக்கும்போது உடலில் சில அறிகுறிகள் தோன்றி அவற்றை நமக்கு உணர்த்துகிறது. அந்த அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை இப்போது அறிந்து கொள்வோம்.
1. வறண்ட மற்றும் சேதமடைந்த சருமம்:
ஒரு ஆரோக்கியமான சருமத்திற்கு வைட்டமின் சி சத்து மிகவும் இன்றியமையாதது. சந்தையில் விற்கப்படும் பல சரும பராமரிப்புப் பொருட்களில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சேர்த்து தயாரிக்கப்படுவதை நாம் கண்டிருக்கலாம். காரணம் இவற்றில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகம். இந்த சத்து சூரிய ஒளியால் சருமத்திற்கு உண்டாகும் சேதங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
2. ஈறுகளில் இரத்தம் வழிவது:
பற்களின் ஈறுகளில் இரத்தம் வழிவதும் வைட்டமின் சி சத்தின் குறைபாட்டிற்கான அறிகுறி என்பது சற்று ஆச்சர்யத்தை உண்டாக்கலாம். ஈறுகளில் இரத்தம் வழிவதால் ஈறுகள் வீக்கமடையலாம். சத்து குறைபாடு தீவிர நிலையை அடையும்போது, ஈறு பாதிப்பு மோசமடைந்து பற்களை இழக்கும் நிலை ஏற்படலாம்.
3. உடல் எடை அதிகரிப்பு:
வைட்டமின் சி சத்து குறைபாடு உள்ளது என்பதை அறிவிக்கும் ஒரு அசாதாரண அறிகுறி எடை அதிகரிப்பு. உங்கள் உடல் எடை எந்த ஒரு காரணமும் இன்றி திடீரென்று அதிகரித்தால் அதற்கு வைட்டமின் சி சத்து குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம். வைட்டமின் சி சத்து குறைவாக இருப்பதால், கொழுப்புகள் சேரலாம். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படியும் நிலை உண்டாகலாம்.
4. பலம் குறைந்த நோயெதிர்ப்பு மண்டலம்:
நீங்கள் வைட்டமின் சி சத்தை குறைவாக எடுத்துக் கொண்டால், எளிதில் நோய்வாய்ப்பட நேரலாம். வெள்ளை அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க வைட்டமின் சி உதவுகிறது. இந்த வெள்ளை அணுக்கள் பக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. அடிக்கடி நோய் உண்டாவதைத் தடுக்க வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.
5. சோர்வு மற்றும் தளர்ச்சி:
வைட்டமின் சி சத்து உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கி , உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி சத்து குறைபாட்டின் ஆரம்ப கால அறிகுறி சோர்வு மற்றும் தளர்ச்சி. பல நோய்களுக்கு இவை இரண்டும் ஒரு பொதுவான அறிகுறியாக இருந்தாலும், வைட்டமின் சி சத்து குறைபாட்டிற்கு இது ஒரு முக்கிய அறிகுறியாகும்.
6. காயம் குணமடைவதில் தாமதம்:
வைட்டமின் சி சத்து குறைவாக எடுத்துக் கொள்வதால், கொலாஜன் கட்டமைப்பில் பாதிப்பு உண்டாகிறது. காயங்கள் குணமடைய கொலாஜன் கட்டமைப்பு மிகவும் அவசியமாகும். குறைவான அளவு வைட்டமின் சி எடுத்துக் கொள்வதால், காயம் குணமாக வழக்கத்தை விட அதிக நாட்கள் ஆகும். தொற்று மற்றும் இதர நோய்கள் எளிதில் உங்களை நோக்கி வரும் அளவிற்கு உங்கள் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும்.
வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள உணவுகள்:
எலுமிச்சை, ஆரஞ்சு, பப்ளிமாசு, கிவி, அன்னாசிப்பழம், ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, பசலைக் கீரை, ப்ரோகோலி, பப்பாளி போன்றவை வைட்டமின் சி சத்தின் சிறந்த ஆதாரமாக விளங்கும் சில உணவு வகைகளாகும்.