அழிந்து வரும் சிட்டுக்குருவி இனம்
பின் வரும் தலைமுறையும் சிட்டுக்குருவியின் சிறப்பை உணர அவற்றை அழிவிலிருந்து காப்போம்.
முந்தைய காலங்களில் காகம், குருவி, கோழி,புறா போன்ற பறவைகள் மனிதர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தன. ஆனால் அதில் பல பறவைகளை இன்று நம் கண்களால் பார்க்க கூட முடிவதில்லை. அவற்றுள் மிக முக்கியமான பறவை சிட்டுக்குருவி.
இன்றைய சிறார்களுக்கு காகத்தை தெரிந்த அளவுக்கு குருவியின் பரிச்சயம் இருக்காது. அதுவும் நகர் புறங்களில் குருவியின் இனம் அழிந்து கொன்டே வருவதாக கூறப் படுகிறது. இந்த நிலை நீடிக்காமல் இருக்க வேண்டும். இந்த அழிவை பற்றிய ஆய்வுகளும் புரிதலும் அதிகமில்லாததே இதற்கு காரணம்.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் என்ற International Union for Conservation of Nature (IUCN) அழிந்து வரும் உயிரினங்களின் ஒரு பட்டியலை தயார் செய்து வருகிறது. அந்த பட்டியலின் 2002ம் ஆண்டு இந்த சிட்டுக்குருவியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது வருந்தத்தக்க ஒரு விஷயமாகும்.
ஒரு காலத்தில் நல்ல ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு பறவை இனம் சட்டென்று எப்படி அழிய தொடங்கும் என்ற கேள்விக்கான பதிலின் தேடலில் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இறங்கினர்.
ஈரநிலப் பறவை பகுதிகளை அழித்தல், புதர் தாவரங்களின் இழப்பு, இனப்பெருக்கம் செய்யும் தளங்களில் குறைப்பு ஆகியவை குருவி இனம் குறைவதற்கு காரணிகளாக பார்க்கப் படுகிறது. ஆனால் அவர்களது எண்ணிக்கையில் இந்த சரிவுக்கான பிரதான காரணம், பூச்சிகள் மற்றும் தானியங்களின் பற்றாக்குறை ஆகும். குருவிகளின் புரத சத்து, முக்கியமாக இந்த தானியங்களில் இருக்கிறது. பெட்ரோல் போன்ற இரசாயனங்கள் குருவி இனத்திற்கு ஒரு கொடிய விஷமாக அறியப்படுகிறது.
சிட்டு குருவிகள் பொதுவாக ஓட்டு வீட்டின் பொந்துகள், பரண்கள் போன்ற இடத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. நகர்ப்புறங்களில் நாகரீகத்தின் பெயரில் சிமெண்டு வீடுகள் கட்ட தொடங்கியவுடன் குருவிகளுக்கு தங்குவதட்கு வீடுகள் இல்லாத நிலை ஏற்பட்டது. மற்றும் சிறு தானியங்கள் ஆகிய கேழ்வரகு, சோளம் , கம்பு போன்றவை இவர்களின் ஆகாரம். இதன் விளைச்சல் குறைந்த நகரங்களில் குருவி இனத்திற்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதும் ஒரு காரணமாகும். இவற்றை அறியாத பலர் செல் போன் கதிர்வீச்சுகள் தான் சீட்டு குருவியின் அழிவிற்கு காரணம் என்று கூறி கொண்டு இருக்கின்றனர்.
குருவிகள் மாற்றத்திற்கான அடையாளம்:
குருவிகளுக்கு சுற்று சூழலில் ஏற்படும் மாற்றங்களை உணரும் திறன் இருப்பதால் ஒரு ஆரோக்கியமான நகர்ப்புற சூழலுக்கு ஒரு உயிர் காட்டியாக இவை விளங்குகின்றன. இவைகளின் இந்த பணி மறைமுகமாக மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியது. இந்த இனத்தின் வீழ்ச்சியால் மனித ஆரோக்கியமும் குன்றத் தொடங்கியது.
மக்களிடையே ராக் புறாக்களின் மோகம் அதிகரித்ததால் குருவிகளின் எண்ணிக்கையில் ஒரு ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. இப்போது இந்த புறாக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
நகர்ப்புற மக்கள் தானியங்களை புறாக்களுக்கு கொடுப்பதை பார்த்திருக்கிறோம். பற்றாக்குறை இல்லாத உணவு கிடைக்கும் மகிழ்ச்சியில் இந்த புறாக்கள் இனம் பெருகி வளரத் தொடங்கியது . இவைகள் குருவிகளின் கூடுகளை ஆக்ரமித்து கொண்டு குருவிகளை வெளியேற்றியதன் விளைவு குருவியினம் நகர்ப்புறங்களில் காணாமல் போயிற்று.
சிட்டுக்குருவிகளை ஒரு நட்சத்திர இனம் என்று Koustubh சர்மா என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார் . பனிச்சிறுத்தைகளைப் காலநிலை மற்றும் அதிக உயரத்தில் காணப்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களின் அறிகுறிகளாக கருதப்படுகின்றன அதே வழியில், சிட்டுக்குருவிகள் நகர்ப்புற சூழலின் குறிகாட்டிகள் ஆகும்.எனவே நகரின் சுற்றுச்சூழலின் சிட்டுக்குருவிகளை பனிச்சிறுத்தை போல கருதலாம் என்று அவர் கூறுகிறார்.
இங்கிலாந்தின் பறவை கண்காணிப்புத் திட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குருவி இனத்தின் சரிவு முறையே 50 முதல் 60 சதவீதம் ஆகும் என்று கணக்கிட்டுள்ளது.
சராசரியாக கடைசி 25 ஆண்டுகளில் குருவியின் இனம் 50% அழிக்க பட்டிருப்பதாகவும் குறிப்பாகா ஆந்திராவில் 80% குருவிகள் அழிந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் சூரிய பிரகாஷ் கூறுகிறார்.
மனிதனின் வாழ்க்கைமுறை மாற்றம், காலநிலை மாற்றம், நுண்ணலை மாசு,மனிதனின் ஆடம்பர வாழ்க்கைக்காக மனிதன் ஏற்படுத்திய சுற்று சூழல்சீர்கேடு இவை யாவும் இந்த இனத்தின் அழிவிற்கு ஒரு காரணம்.
சிட்டு குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் ஐநா, மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவி நாள் என்று 2010 ம் ஆண்டு முதல் அறிவித்தது. டெல்லி மாநிலம் சிட்டு குருவியை அந்த மாநில பறவையாக ஆகஸ்ட்14,2012 அன்று அறிவித்தது.
நம் தலைமுறையும் நமக்கு முந்தைய தலைமுறைகளும் சிட்டுக்குருவியை பார்த்து ரசித்து அவற்றை பற்றிய பாடல்கள் பாடியதோடு நில்லாமல் நமக்கு பின் வரும் தலைமுறையும் சிட்டுக்குருவியின் சிறப்பை உணர அவற்றை அழிவிலிருந்து காப்போம்.