நயன பயிற்சி
கண் பிரச்சனையை போக்க 8 எளிய பயிற்சிகள்.
நம்மைவிட விலங்குகளுக்கு பார்க்கும் திறன் அதிகமாக உள்ளதற்கு காரணம் அவைகளைவிட நாம் கண்களை அதிகமாக உபயோகப்படுத்துவதும் மற்றும் கண்களுக்கு தேவையான ஓய்வை கொடுப்பதில்லை என்பதும் தான். நம் முன்னோர்களுக்கு கண்ணின் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்ததாலேயே அதை முக்கியமான ஒன்றுடன் ஒப்பிடுவார்கள் உதாரணத்திற்கு 'கல்வி கண் போன்றது' ஒருவனுக்கு கண் எவ்வளவு முக்கியமோ அதுபோல் கல்வியும் முக்கியம் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு கூறினார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்ணை நாம் பாதுகாக்க சில பயிற்சிகளை எப்படி செய்வது என்று இக்கட்டுரையில் காண்போம்.
நயனம் (கண்)ஆரோக்கியத்திற்கான பயிற்சி:
- இமைத்தல் பயிற்சி: ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கும்போது அல்லது எழுதும் போது ஒவ்வொரு வரியை முடிக்கும் போதும் கண்களை இருமுறை இமைக்க வேண்டும் மற்றும் தொலைக்காட்சி, கணினி மற்றும் செல்பேசியை உபயோகிக்கும்போது அடிக்கடி இமைத்து கொள்ள வேண்டும்.
- விரல் பயிற்சி: ஆள்காட்டி விரலை முகத்திற்கு முன்பாக ஆறு அங்குலத் தொலைவில் வைத்துக்கொள்ளவும் பிறகு வலது கண்ணிலிருந்து இவ்விரலை பார்த்தவாறு மறுபக்கத்திற்கு தலையை மெதுவாக திருப்பவும். இவ்வாறு மாற்றி மாற்றி 5 நிமிடம் இப்பயிற்சியை செய்யவும்.
- ஒளி பயிற்சி: காலை மற்றும் மாலை இவ்விரண்டு வேளைகளிலும் இளஞ் சூரியனைப் பார்த்தபடி நின்று கொள்ளவும். இவ்வாறு பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு இப்பயிற்சியை செய்யவும்.
- உள்ளங்கை பயிற்சி: கண்களை மூடிக்கொண்டு உள்ளங்கைகளால் கண்களை பொத்திக்கொள்ளவும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இப்பயிற்சியை செய்யவும்.
- கண் குளியல்: ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பிக்கொள்ளுங்கள் பிறகு குனிந்து ஒரு கண்ணை அந்நீரில் வைத்து பத்து முறை கண்ணை மூடி திறக்கவும். இவ்வாறு மறு கண்ணிலும் 10 முறை இப்பயிற்சியை செய்யவும்.
- கண்களை உருட்டும் பயிற்சி: கண்களை மேலும் கீழுமாக 10 முறையும், வலமிருந்து இடபுறமாகவும் 10 முறையும், இடமிருந்து வலபுறமாகவும் 10 முறை சுழற்ற வேண்டும். பிறகு வலது உள்ளங்கையால் இடது கண்ணையும்,இடது உள்ளங்கையால் வலது கண்ணையும் அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக கண்களை மூடி 10 வினாடிகள் கழித்து கண்களை மெதுவாக திறக்க வேண்டும்.
- பந்து பயிற்சி: ஒரு பந்தை வலக்கையால் தரையில் அடித்து இடக்கையால் பிடிக்கவும், பின் கண்களை மூடி திறந்து பந்தை பார்க்கவும். இதுபோல் இடக்கையால் பந்தை தரையில் அடித்து வலக்கையால் பிடிக்கவும் பின் கண்களை மூடி திறந்து பந்தை பார்க்கவும். இவ்வாறு மாற்றி மாற்றி இப்பயிற்சியை 15 நிமிடங்களுக்கு செய்யவும்.
- தூர மற்றும் கிட்ட பார்வைக்கான பயிற்சி: ஆள்காட்டி விரலை முகத்திற்கு முன்பாக வைத்துக்கொள்ளவும் பிறகு அந்த விரலை பார்க்கவும், இரு முறை இமைக்கவும் பின்னர் தூரத்திலுள்ள ஒரு பொருளை பார்க்கவும் பின்னர் இரு முறை இமைக்கவும். இவ்வாறு மாற்றி மாற்றி 10 நிமிடங்கள் செய்யவும்.
கண்ணின் முக்கியத்துவத்தை பற்றிய புரிதலும் மற்றும் ஓய்வுமே கண் பார்வையை பாதுகாக்கும். கணினியில் வேலை செய்யும் போது 20 நிமிடத்திற்கு ஒரு தடவை தூரத்தில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு பின் கணினியை பயன்படுத்தவும். இவ்வாறு செய்வதால் கண்களுக்கு ஓய்வு கிடைப்பதோடு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். நாம் சத்தான உணவை எடுத்துக் கொள்வதோடு, மேல் குறிப்பிட்டுள்ள பயிற்சிகளை மேற்கொண்டால் நம் கண் பிரச்சினைகளை போக்குவதோடு கண் பார்வையை கூர்மையாக்கும்.