நியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை !
இன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம், உணவு விஷயத்தில் அவர்கள் காட்டும் அலட்சியம். ஆகவே ஒரு ஆரோக்கியமான உணவு எது என்பதை ஆராய்ந்து உண்ணுவது நல்லது.
இன்று எல்லா வயதினரும் கடைக்கு சென்று அவர்களுக்கு தேவையானவற்றை வாங்குகின்றனர். குறிப்பாக உணவு பொருட்களை வாங்கும்போது அதில் ஊட்டச்சத்து விபரங்களை பிரிண்ட் செய்து இருப்பதை நாம் கவனித்து இருக்கலாம். இதனை நியூட்ரிஷன் லேபிள் என்று கூறுவர். தற்போது இவை எல்லா பேக்கஜ்ட் பொருட்களிலும் கட்டாயமாக்க பட்ட ஒன்று. இந்த லேபிளில் உள்ள விவரங்களை அறிந்து கொண்டு வாங்குவது நல்ல பலனை கொடுக்கும். பெரியவர்களுக்கே இந்த புரிதலின் அளவு குறைவாக இருக்கும் போது, பதின் பருவத்தில் இருப்பவர்களுக்கு இதற்கான விழிப்புணர்ச்சி இன்னும் குறைவு. ஆனால், இந்த லேபிளில் சில குறைந்தபட்ச தகவல்களையாவது நாம் உணர்ந்திருக்க வேண்டும்.
பதின் பருவத்தில், பிள்ளைகள் உணவில் கட்டுப்பாடு எதுவும் வைத்திருப்பதில்லை. அவர்களுக்கு தேவையானதை அல்லது அவர்கள் நண்பர்கள் விரும்பி உண்ணுவதை , அவர்களும் உண்ண ஆசை படுகின்றனர். வளரும் பருவத்தில் அவர்களின் உணவின் தேவையும் அதிகரித்தே காணப்படும். ஆகவே இந்த சமயத்தில், அவர்களுக்கு தேவையானதை சரியான அளவில் எடுத்து கொள்ள அவர்களை பழக்க வேண்டும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள அல்லது முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். பழங்கள், காய் கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள பழக்க வேண்டும். இதனால், அவர்களின் நண்பர்களும் பயனடைவார்கள்.
புரதம், வைட்டமின், நார்ச்சத்து, இரும்பு சத்து போன்றவற்றை பற்றிய அடிப்படை தெளிவை அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். பதின் பருவம் என்பது வளரும் பருவம். அவர்களுக்கு கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துகள் இரண்டுமே அவசியம். ஆகவே ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளாகிய பழங்கள், காய்கறிகள் தானியங்கள், பயறு வகைகள், பருப்புகள், பால் பொருட்கள் போன்றவற்றை அவர்கள் உண்ணும்போது, கொழுப்பு, சர்க்கரை, உப்பு, கலோரி போன்றவை அதிகரிக்காமல் இருக்கும்.
ஒரு உணவு தயாரிப்பாளர் அவர் உணவை பற்றி வெளியிடும் விஷயங்கள் பெரும்பாலும் நல்லவையாகத்தான் இருக்கும். ஒரு பாக்கெட் செய்யப்பட்ட பழச்சாறை அருந்துவதால் பழங்களின் நன்மை நமது உடலுக்கு கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம் . அவர்கள் சொல்வதை வைத்து நாம் நம்புவதை விட, அந்த பாக்கெட்டில் இருக்கும் நியூட்ரிஷன் லேபிள் இதனை தீர்மானிக்கிறது என்பதை அறிந்து இந்த பொருட்களை வாங்க வேண்டும். ஒரு பாக்கெட்டில் முன் பகுதியில் இருக்கும் விஷயங்கள் மக்களை ஈர்ப்பதற்காகவே இருக்கும். வெறும் விளம்பரங்களை நம்பாமல், பின்னால் இருக்கும் நியூட்ரிஷன் லேபிள் சொல்லும் செய்தியை உணர்ந்து வாங்குவது சிறந்த பலனை கொடுக்கும்.
இன்றைய பதின் பருவத்தினர், பலரும் சுதந்திரமாக செயல்படுகின்றனர். அவர்களை பெற்றோர்களால் எல்லா நேரத்திலும் கண்காணிக்க முடிவதில்லை. ஆகவே ஆரோக்கியமான உணவு பழக்கத்தை அவர்களுக்கு பயிற்றுவிப்பது பெற்றோரின் கடமையாகும். இன்றைய நவீன யுகத்தில் அவர்கள் இந்த ஆரோக்கிய பழக்கத்தை தொடர பல வழிமுறைகள் உள்ளது. மொபைல் ஆஃப்களும், ஆன்லைன் கருவிகளும் ஆரோக்கிய உணவின் நன்மைகளை பற்றி சொல்லி கொடுக்கின்றன. இதனை பயன்படுத்தி இளைஞர்கள் மேலும் சிறப்பாக அவர்களின் வாழக்கை முறையை வாழ முடிகிறது.