பழங்களின் தேவதை - பப்பாளியின் மகத்துவம்

பப்பாளி  எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம். இதன் விலையும்  மலிவாகவே இருப்பதால் இதை "ஏழைகளின் கனி" என்றும் கூறுவர். இதன் இனிமையான சுவையால் "பழங்களின் தேவதை " என்றும் அழைக்கப்படும்

பழங்களின் தேவதை - பப்பாளியின் மகத்துவம்

மனித உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிலுமே பப்பாளியின் பங்கு மகத்தானது. பலவகையான ஊட்டச்சத்துக்களை கொண்ட பழங்களில் பப்பாளி முதன்மையானது. 100gm பப்பாளியில் 43 கலோரிகள் மட்டுமே உள்ளன.

மஞ்சள் நிற பழங்களில் காணப்படும் கரோட்டின் சத்து இப்பழத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த  சத்து புற்று நோய்   வராமல் தடுக்கிறது. 18 வகையான சத்துக்கள் கொண்ட ஒரே பழம் பப்பாளியாகும். உடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதைவிட தினமும் சிறிது பப்பாளி பழத்தை சாப்பிடுவது  சிறந்த  நன்மையை தரும்.

குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை உண்ண கொடுப்பதால் அவர்களின் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். கண் பார்வை கோளாறு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
இதில் போலிக் ஆசிட்(folic acid) அதிகமாக உள்ளது. ஆகையால் குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது . பெண்கள் இதை உண்பதால் மாத விலக்கு சீராகும்.  ஆண்களின் உயிரணு உற்பத்தி திறனை அதிகரிக்கும். இப்பழத்தை தினமும் உண்பதால் நரம்பு தளர்ச்சி குறையும். கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய உகந்தது.

காலை உணவில் பப்பாளியை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டால் உடல் கழிவுகளை வெளியேற்றும். மலச்சிக்கல் மற்றும்  நெஞ்செரிச்சலை  தீர்க்கும். உடல் எடை அதிகரித்து காணப்படுபவர் பப்பாளி பழத்தை  காலை உணவாக சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும்.4 வாரங்கள் தொடர்ந்து  இப்பழத்தை உண்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். இந்த காயை சமைத்து உண்பதாலும் உடல் பருமன் குறையும். 

பப்பாளி காயை உண்பதால் சிறுநீரில் சர்க்கரை அளவு குறையும். மேலும் இக்காயை பிரசவித்த பெண்கள் சமைத்து சாப்பிட்டால் அதிக பால் சுரக்கும்.

பப்பாளியின் வேர்கள் மற்றும் பூக்கள் சிறுநீரக கோளாறு,மஞ்சள் காமாலை,மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நோய்களுக்கு எதிராக நன்மை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பப்பாளி விதைகள் கருமை நிறத்தில் பார்பதற்கு கரு  மிளகு போன்று இருக்கும் . அது கசப்பு சுவை உடையதாகும்.அந்த விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் நாக்குப்பூச்சிகள் வெளியேறும்.

பப்பாளியின் இலைகள் ஆமணக்கு இலைகளின் வடிவத்தைப்போல் இருக்கும். அந்த இலைகளை அரைத்து நம் உடலின் ஏற்பட்ட காயங்களில் பூசினால் ,காயங்கள் விரைவில் குணமடையும்.

சரும பராமரிப்பில் பப்பாளியின் உதவி மிகப் பெரியது.வறண்ட மேல் தோலை அகற்றி புதிய தோலை உண்டாக்கும் வேலையை இஃது செய்கிறது. நமது சருமம்  சீரற்றதாகவும், கடினமானதாகவும் இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இராது. முகத்தோலில்  பெரியதாக துவாரங்கள் இருந்தால், அது ஒரு பெரிய பிரச்சனை. திறந்த தோல் துளைகள்  பல தோல் பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. திறந்த துளைகள் அழுக்கு மற்றும் இறந்த தோல் செல்கள் மற்றும் கருங்கறைகளை (Blackheads) ஈர்க்கின்றன. அவை முகப்பருக்கள் உருவாக்க வழிவகுக்கும். 

இப்பிரச்சனையை பப்பாளியைக் கொண்டு தவிர்ப்பதெப்படி என இங்கே காண்போம்...

இந்த மாஸ்க் செய்ய, உங்களுக்கு தேவையான பொருட்கள்:

1. பப்பாளி பல்ப் - 2 தேக்கரண்டி
2. தேன் - 2 தேக்கரண்டி
3. எலுமிச்சை சாறு (அல்லது ரோஸ் வாட்டர் ) - 1 டீஸ்பூன்

உங்களுக்கு மென்மையான சருமம்(sensitive skin) இருந்தால், எலுமிச்சை சாற்றை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தவும்.

செய்முறை:
1. ஒரு சுத்தமான கிண்ணத்தில் பப்பாளி கூழ் மற்றும் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். 
2. மேல் சொன்ன கலவையை நன்கு கலக்க வேண்டும்.
3. உங்கள் முகத்தில் இந்த பசையை  கெட்டியாக தடவவும்.
4. பின் 20 நிமிடங்கள் காத்திருக்கவும்.
தேய்க்கவோ  அல்லது மசாஜ் செய்யவோ தேவை இல்லை. 

20 நிமிடங்களுக்கு பிறகு சுத்தமான நீர் கொண்டு உங்கள் முகத்தை சுத்தம் செய்ய உடனடியாக மாற்றங்களை பார்க்க முடியும்.

பப்பாளியை உபயோகிப்பதில் சில தீய விளைவுகளும் உள்ளன:

கர்ப்பிணி பெண்கள் முதல் 2 மாதங்கள் இப்பழத்தை உண்ணாமல் இருப்பது நல்லது. அதிகம் பழுக்காத பப்பாளியின் பால்  கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். 

பப்பாளி காயை அதிகம் உட்கொண்டால்  வயிற்று போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படலாம்.

பப்பாளி விதையில் இருக்கும் கார்பைன் என்னும் மூலப் பொருள் நச்சுத் தன்மை வாய்ந்தது.