பொலிவான சருமம் பெற ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் மருத்துவரிடம் செல்லும் வேலை இல்லை என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது உண்மை தான்.
தினமும் குழந்தை பருவம் முதல் ஆப்பிள் சாப்பிட்டு வருவதால், வயது முதிர்வு மற்றும் சருமம் சார்ந்த பல தொந்தரவுகளும் காணமல் போகின்றன. பல நன்மைகள் கொண்ட ஆப்பிள் பழத்தில் வைடமின் ஏ, சி மற்றும் தாமிரம் அதிகமாக உள்ளது. இவை சருமத்திற்கு நன்மை அளிக்கும் ஊட்டச்சத்துகள் ஆகும். சேதமடைந்த சரும திசுக்களை சரி செய்து புதிய அணுக்கள் வளர இந்த பழம் சருமத்தை ஊக்குவிக்கிறது. வைட்டமின் சி சத்து சருமத்தின் கொலோஜென் சத்தை புதுப்பிக்க உதவுகிறது. இதனால் சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து, சுருக்கம் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் சருமத்தின் நீர்சத்தை அழியவிடாமல் காக்கிறது. தாமிரம், சருமத்தை புற ஊதா கதிரிடம் இருந்து பாதுகாத்து ஒரு இயற்கை சன்ஸ்க்ரீன் போல் செயல்படுகிறது.
உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் இருக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தினசரி பின்பற்றி சரும அழகை மேம்படுத்தலாம். இந்த வகை ஆப்பிள் பேஸ் பேக்குகள் எளிதில் வீட்டில் தயாரிக்கக்கூடியதாக உள்ளன. வாருங்கள் அவற்றைப் பற்றி தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.
எல்லா குறிப்புகளுக்கு மிதமான அளவு ஆப்பிள் போதுமானது. மேலும், ஆப்பிளை பயன்படுத்துவதற்கு முன் அதன் தோலை அகற்றிவிட்டு பின்பு பயன்படுத்தவும். ஆப்பிள் சாறு பயன்படுத்தி செய்யும் தயாரிப்புகளுக்கு வீட்டிலேயே புதிதாக தயாரிக்கப்பட்ட ஆப்பிள் சாற்றை பயன்படுத்தவும். கடைகளில் பாக்கெட்டில் கிடைக்கும் பழச்சாற்றை பயன்படுத்த வேண்டாம்.
சரும அழகுக்கான பேஸ் பேக்குகள்
ஆப்பிள், யோகர்ட் மற்றும் எலுமிச்சை பேஸ் பேக் :
இந்த பேஸ் பேக் உங்கள் சருமத்திற்கு மிருதுவான தன்மையை வழங்க உதவும். ஆப்பிள் துண்டுகள் சிலவற்றை எடுத்துக் கொள்ளவும். அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். மசித்த ஆப்பிள் விழுதுடன், ஒரு ஸ்பூன் யோகர்ட் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, உங்கள் முகத்தில் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். தொடர்ந்து இதனை பயன்படுத்துவதால் உங்கள் சருமம் மிகவும் மிருதுவாக மற்றும் பளிச்சென்று மாறும்.
ஆப்பிள் மற்றும் தேன் பேஸ் பேக் :
தேன் முகத்திற்கு இயற்கை மிருது தன்மையை வழங்க உதவும். மேலும் சருமத்தை வெண்மையாக்கும் தன்மை தேனிற்கு உண்டு. ஆப்பிள் சில துண்டுகள் எடுத்து மசித்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவும். தொடர்ந்து இந்த செய்முறையை பின்பற்றுவதால், உங்கள் முகம் இளமையாகவும் மென்மையாகவும் மாறும்.
ஆப்பிள் மற்றும் வாழைப் பழ பேஸ் பேக் :
வாழைப்பழம் இயற்கையாகவே ஈரப்பதம் கொடுக்கும் தன்மை கொண்ட ஒரு பழம். மேலும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் மினரல்கள் அதிகம் உள்ள ஒரு பழம், வாழைப்பழம். வறண்ட சருமத்திற்கு ஒரு க்ரீம் போல் வாழைப்பழம் பயன்படுகிறது. ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் சில துண்டுகளை எடுத்து மசித்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விட்டு பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
ஆப்பிள் மற்றும் கிளிசரின் பேஸ் பேக் :
வறண்ட சருமத்திற்கு கிளிசரின் ஒரு கவசம் போல் செயல்படுகிறது. இதனால் சரும வெடிப்புகள் எளிதில் குணமடைகிறது. இரவு நேரத்தில் கிளிசரினை முகத்திற்கு பயன்படுத்துவதால், சருமம் மென்மையாகவும் சுத்தமாகவும் மாறுகிறது. சில துண்டு ஆப்பிளை விழுதாக்கி, அதில் சில துளிகள் கிளிசரின் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி, இருபது நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.
ஆப்பிள், பால் மற்றும் தேன் பேஸ் பேக் :
பாலுடன் ஆப்பிள் சேர்த்து பயன்படுத்துவதால் இது சருமத்திற்கு ஒரு சிறந்த க்ளென்சர் போல் பயன்படுகிறது. இதனால் உங்கள் சருமம் தூய்மையடைகிறது. ஆப்பிள் சில துண்டுகள் எடுத்து அதனை விழுதாக்கி, அத்துடன் இரண்டு ஸ்பூன் பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். சில நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
ஆப்பிள், ஓட்ஸ் , மற்றும் முட்டையின் மஞ்சள் கரு பேஸ் பேக் :
ஆப்பிளுடன் முட்டை மற்று ஓட்ஸ் சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்துவதால் , சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கிறது. ஆப்பிள் சில துண்டுகள் எடுத்து மசித்துக் கொள்ளவும். இதனுடன் முட்டையின் வெள்ளை கரு மற்று ஓட்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
ஆப்பிள் மற்றும் கோதுமை தவிடு பேஸ் பேக் :
இந்த கலவை சருமத்தை எக்சஸ்போலியெட் செய்ய உதவுகிறது. ஆப்பிள் விழுதுடன் கோதுமை தவிடை கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இதனால் சருமத்தில் உள்ள வெண்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.
ஆப்பிள், பப்பாளி மற்றும் தேன் பேஸ் பேக் :
பப்பாளியில் வைடமின் ஏ சத்து மற்றும் அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. சில துண்டு பப்பாளி எடுத்து மசித்துக் கொள்ளவும். இதனுடன் ஆப்பிள் விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் தேன் சேர்த்து இந்த கலவையை முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவும். இதனை தொடர்ந்து பின்பற்றி வருவதால் விரைவில் உங்கள் சருமம் அழகாக மாறும்.
ஆப்பிள் மற்றும் சர்க்கரை பேஸ் பேக் :
ஆப்பிளுடன் சர்க்கரை துகள் சேர்த்து பயன்படுத்துவதால் ஒரு இயற்கை ஸ்க்ரப் போல் பலனளிக்கிறது. இதனால் உங்கள் சருமம் மிகவும் மென்மையாகிறது. இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவதால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் மறைந்து சருமம் ஆரோக்கியமாக காட்சியளிக்கிறது.