மழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்
மழைக்காலம் வந்துவிட்டது.. மழைக்காலம் என்றால் எல்லாமே மகிழ்ச்சிதான். மழைக் காலத்தில் இந்த 7 பொருட்களை உங்கள் உணவில் இணைப்பதால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்
குளிர்ச்சியான மழை, சுடச் சுடச் சிற்றுண்டி என்று அனைத்தையும் எதிர்பார்த்து தயார் ஆகிக் கொண்டிருக்கிறோம் இந்த வருட மழைக்காலத்தை வரவேற்க.. ஆனால் மழைக்காலங்கள் இனிமையுடன் சேர்த்து சில பல இன்னல்களையும் கொண்டு வரும். காய்ச்சல், சளி, இருமல், வயிறு மந்தம், போன்ற சில பிரச்சனைகள் மழைக்காலத்தில் தவிர்க்க முடியாத சில விஷயங்களாகும். மழைக்காலங்களில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே இந்த நோய்கள் உண்டாகக் காரணமாகும். நோயெதிர்ப்பு சக்தி குறைவதால் கிருமிகளின் தாக்கம் உடலில் அதிகரித்து இத்தகைய நோய்கள் பரவுகின்றன. ஈரப்பதமான வெப்ப நிலை, இந்த கிருமிகளின் வளர்ச்சியை அதிகரிக்கின்றது. மேலும் காற்று, உணவு, நீர் போன்றவற்றில் இந்த கிருமிகள் பரவி இந்த நிலைமை மோசமடைகிறது. ஆகவே மழைக்காலங்களின் இனிமையை அனுபவிக்க உங்கள் உடலை நோயெதிர்ப்பு சக்தியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான ஒரு சிறந்த வழி, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது மட்டுமே.
சில வகை உணவுகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். குறிப்பாக மழைக்காலங்களில். அந்த உணவுப் பொருட்களை தினமும் உங்கள் சமையலில் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். அவை என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
1. பெருங்காயம்:
பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு தன்மை, கிருமிகளை அழிக்கும் பண்பு, கிருமி எதிர்ப்பு தன்மை போன்றவை இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றது. மேலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிகல்களை போக்குகின்றன. வயிறு உபாதைகளான வாய்வு, வயிறு உப்புசம், அஜீரணம் , குடல் நோய்க்குறி போன்ற நிலைமைகளை குறைக்கும் தன்மை பெருங்காயத்திற்கு உண்டு. ஆகவே பருப்பு, கூட்டு , வறுவல் போன்றவை தயாரிக்கும்போது பெருங்காயத்தை சேர்ப்பதால் அதன் சுவையும் அதிகரிக்கும் , ஆரோக்கியத்திற்கும் நன்மை கிடைக்கும்.
2. மஞ்சள்:
மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் கூறு அழற்சி எதிர்ப்பு தன்மை உடையது என்றும் இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் பிளாஸ் ஒன் என்னும் பத்திரிகை நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உங்கள் தினசரி உணவில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்ப்பதால் வயிறு தொடர்பான பல தொந்தரவுகள் நீங்கும். ஆகவே கறி , கூட்டு, பருப்பு மற்றும் சாதத்தில் மஞ்சள் சேர்த்து தயாரிக்கவும் அல்லது ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து பருகவும். இதனால் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி நிச்சயம் அதிகரிக்கும்.
3. மிளகு:
மிளகு ஒரு மந்திரப் பொருள். இதற்கு இரைப்பை குடல் வலியை நீக்கும் தன்மை உண்டு. இதனால், குடல் வாயு மற்றும் பிற வயிற்று தொடர்பான பிரச்சனைகளும் குறைகிறது. மிளகிற்கு அழற்சி எதிர்ப்பு, அன்டி ஆக்சிடென்ட், கிருமி எதிர்ப்பு மற்றும் சில காய்ச்சலை குறைக்கும் தன்மை இருப்பதோடு மட்டும் இல்லாமல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் உண்டு. முட்டை, சான்ட்விச், கறி, சூப், சாலட், போன்றவற்றில் மிளகை சேர்த்துக் கொள்ளலாம். மிளகை முழுதாகவும், நொறுக்கியும், தூளாகவும் பயன்படுத்தலாம். மசாலா டீயில் கூட மிளகை சேர்த்துக் கொள்ளலாம்.
4. கிராம்பு:
கிரம்பில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் செல்-களுக்கு சேதம் உண்டாக்கும் ஃப்ரீ ரேடிகல்களுக்கு எதிராக போராடும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவும். கிராம்பில் இருக்கும் யுஜினால் என்னும் செயலூக்க மூலப்பொருள், தொற்று வளரும் அபாயத்தை குறைக்கவும், நோய்களைப் பரப்பும் கிருமிகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது.
5. வெந்தயம்:
வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே சமயத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவித்து சக்தியை அதிகரிக்கிறது. மேலும் காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்றுகளை எதிர்த்து போராடி உடலை பாதுகாக்கிறது..
6. லவங்கப் பட்டை:
லவங்கப் பட்டையில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் மற்றும் போதுமான அளவு மங்கனீஸ், கால்சியம், நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது. லவங்கப் பட்டையில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்களான சின்னமில் அசிடேட் மற்றும் சின்னமில் டிஹைடு போன்றவற்றில் கிருமி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பக்டீரியா எதிர்ப்பு தன்மை இருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு துணை புரிகிறது. லவங்கப் பட்டை சேர்த்த தேநீர் அல்லது புட்டிங் அல்லது சாதம் சேர்த்துக் கொள்வதால் சிறந்த பலன் கிடைக்கும்.
7. அன்னாசிப்பூ :
டி கே பப்லிஷிங் வெளியிட்ட "குணமாக்கும் உணவுகள்" என்ற நூலில், அன்னாசிப்பூவிற்கு கிருமி எதிர்ப்பு தன்மை உள்ளதாகவும் , கிருமி தொற்று பாதிப்பிற்கு சிறந்த சிகிச்சை தரவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரியாணி அல்லது இனிப்புகளில் இதனை சேர்த்து தயாரிக்கலாம்.
இந்த மழைக்காலத்தில் மேலே கூறிய உணவுப்பொருட்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்து மழையை ஆரோக்கியமாக ரசியுங்கள்.