பார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை

இந்த உலகம் எவ்வளவு அழகானது? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்த அழகை  முழுமையாக பார்த்து ரசிக்க நம்மில் எத்தனை பேருக்கு கண்கள் இருக்கிறது? இந்த கேள்வி நமது மனதில் ஒரு சின்ன மாற்றத்தை உருவாக்குகிறது இல்லையா? ஆம்! கண்களால் நாம் பார்த்து உணரும்  எல்லா அழகையும் கண் இல்லாதவர்களால்  உணர முடியாது என்பதை நினைக்கும் போது இதயத்தில் ஒரு வித வலி உண்டாகிறது.

பார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை

உலகளவில் 285மில்லியன் மக்கள் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 39 மில்லியன் மக்கள் முற்றிலும்  பார்வை இழந்தவர்களாகவும் 246 மில்லியன் மக்கள் குறைந்த பார்வை குறைபாடு கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

கண் பார்வையை இழந்தவர்கள் பலர் நம்முடன் வாழ்க்கையில் பயணித்து கொண்டு தான்  இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கண்பார்வை கிடைத்தால் எப்படி இருக்கும்? 
பார்வை இழந்தவர்கள் பார்க்கும் திறனை பெறுவதற்கான ஆராய்ச்சி பற்றிய பதிவு தான் இது. இந்த ஆராய்ச்சியின் வெற்றி மனித சமுதாயத்தின் வெற்றி. வாருங்கள், ஆராய்ச்சியை பற்றிய விளக்கத்தை பார்ப்போம்.
இங்கிலாந்தில் இருக்கும் யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் ஜீன் தெரபி என்ற மரபணு சிகிச்சை முறையை கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த சிகிச்சையில், பார்வையை இழந்தவர்கள் பார்வை பெற செய்யும் ஒரு சோதனையை மேற்கொண்டு அதில் ஓரளவுக்கு வெற்றியும்  பெற்றிருக்கின்றனர். இவர்கள், கண்களின் பின்புறம் இருக்கும் அணுக்களை மறுசெயலாக்கம் செய்து ஒளி உணரும் திறனை பெற வைத்து இருக்கிறார்கள். 

கண்களின் பார்வை இழப்பிற்கு பொதுவான காரணத்தை அவர்கள் கூறியிருக்கிறார்கள். கண்களில் போட்டோரிசேப்டர் என்று கூறப்படும்  ஒளி ஏற்கும் அணுக்கள் பல மில்லியன் கணக்கில் இருக்கும். இந்த அணுக்களில் சில அல்லது பல , அதன்  சக்தியை இழப்பதால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இவை கண்களில் உள்ள ரெட்டினா எனப்படும் விழித்திரையை சுற்றி இருக்கும். நாம் தற்போது பரவலாக பயன்படுத்தும் டிஜிட்டல் கமெராவில் இருக்கும் பிக்ஸல்  போல் அமைந்திருக்கும் . தலைமை ஆராய்ச்சியாளர் சமந்தா டிசில்வா , மரபணு செயல்முறையால் பார்வை அற்றவர்களுக்கு பார்வையை மீட்டு தரும் ஆராய்ச்சி மிகவும் உணர்ச்சி பூர்வமானது என்று கூறுகிறார். 
 
இந்த ஆராய்ச்சியில் சோதனை மேற்கொள்ள பார்வையற்ற  எலிகள் பயன்படுத்தப்பட்டன. இவை ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற பார்வை இழப்பு நோயால் பாதிக்கப்பட்டவைகள் . பெரும்பாலும் இளைய தலைமுறையினர் இந்த நோயால் பார்வை இழப்பை அடைகின்றனர். மெலனொப்ஸின் என்ற ஒளி உணர் திறன் கொண்ட புரதம், நுண்ணுயிர் கடத்தியால், கண்களின் விழித்திரையில் இருக்கும்  அணுக்களுக்கு கொண்டு செல்ல பட்டன. இந்த எலிகள் ஒரு வருடம் கண்காணிக்க பட்டன. இந்த கால கட்டத்தில், சுற்றியிருக்கும் பொருட்களை அவற்றால் அடையாளம் காண முடிந்தது. அவற்றின் காட்சி உணரும் திறன் அதிகரிக்கப்பட்டது. மெலனொப்ஸின் புரதத்தை எதிர்கொண்ட அணுக்கள் ஒளியை ஏற்று, மூளைக்கு விஷுவல் சிக்னல்களை அனுப்ப தொடங்கியது. பார்வை அற்ற மனிதர்களுக்கு ஒரு எலக்ட்ரோனிக் ரெடினாவை பொருத்துவதற்கான ஆராய்ச்சியும் மேற்கொள்ள பட்டு வருகிறது. ஆனால் இந்த ஜீன் தெரபி எனும் மரபணு சிகிச்சையில் நல்ல மாற்றங்கள் உணரப்படுவதாக கூறப்படுகிறது. இவற்றை மனிதர்களுக்கு சோதித்து பார்க்கும்போது ஏற்படும் நேர்மறை விளைவுகள் பார்வை இழந்தவர்கள் மீண்டும் பார்வையை பெற உதவியாய் இருக்கும். இதுவே அவர்களின் அடுத்தகட்ட முயற்சி என்று கூறுகின்றனர்.

கண்பார்வை கிடைக்கும் ஆராய்ச்சிகள் ஒரு புறம் இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் கண் தானம்   செய்ய முன்வந்தால் , என்றாவது ஒரு நாள் இந்த உலகம் எல்லோராலும் பார்த்து ரசிக்கப்படும்.