தீங்கு விளைவிக்கும் உணவு காம்போ
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு மிகவும் அவசியம். நாம் உண்ணும் உணவில் இருக்கும் சத்துக்களால் உடல் பலமடைகிறது. நாம் பல விதமான உணவுகளை உண்ணுவதற்கு ஆசைப்படுகிறோம்.
உணவுகளில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சில காம்பினேஷன்கள் இருப்பதுண்டு. உதாரணத்திற்க்கு பிரட்-ஜாம் , தயிர்சாதம் - ஊறுகாய், சப்பாத்தி - சென்னா , பூரி-உருளைக்கிழங்கு போன்றவை. இந்த காம்பினேஷன்கள் எந்த அளவுக்கு உடலுக்கு ஏற்றது என்பதை நாம் கவனிக்க தவறுகிறோம். சில உணவுகள் தனியாக உண்ணும்போது கிடைக்கும் ஊட்டச்சத்துகள் இந்த காம்பினேஷனில் உண்ணும்போது எதிர்மறை வினையை புரிகிறது.
எந்த வகை உணவு காம்பினேஷன் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பிரட்-ஜாம் :
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பிரட்-ஜாம். ஆனால் இது ஒரு தவறான காம்பினேஷன். வெள்ளை பிரட் என்பது சுத்தீகரிக்கப்பட்ட ஒரு மாவு வகை. ஜாம் என்பது சர்க்கரையில் செய்யப்பட்டது. இவை இரண்டின் சேர்க்கையால் உடலில் சர்க்கரை அளவில் மாறுபாடு ஏற்படும் . ஜாம் சேர்த்து சாப்பிட விரும்புவோர் வெள்ளை பிரெட்டிற்கு மாற்றாக ஈஸ்ட் சேர்க்காத பிரவுன் பிரெட்டுடன் சேர்த்து உண்ணலாம் .
பிஸ்சா - சோடா :
பொதுவாக பிஸ்சா - சோடா காம்போ விரும்பி சுவைக்கும் காம்போவாகவே இருக்கிறது. பிஸ்சா விற்பனையகங்களில் இந்த காம்போவை அதிகமாக விற்கின்றனர். இது எளிதில் வயிற்றை நிரப்புவதால் அனைவரின் தேர்வும் பிஸ்சா சோடா காம்பினேஷன்தான். ஆனால் இதுவும் ஒரு தவறான காம்போ தான். புரதம், ஸ்டார்ச் மற்றும் கார்போஹைடிரேட் ஆகிய அனைத்தையும் ஒரே உணவாக உண்ணுவது செரிமான மண்டலத்திற்கு பளுவை சேர்க்கும். சோடாவில் இருக்கும் சர்க்கரை பிஸ்சாவுடன் சேரும்போது செரிமானம் மெதுவாகும். இதனால் வயிற்று உப்புசம் ஏற்படும்.
சாக்லெட் - பால் :
பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. கொக்கோவில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம், கால்சியத்தை உறுஞ்சுவதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் பாலுடன் கொக்கோ சேர்த்த சாக்லெட் மில்க் எடுத்து கொள்ளும்போது ஆக்ஸலேட் படிமங்கள் தோன்றி சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம். கட்டாயம் சாக்லெட் பால் சாப்பிடவேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் கொழுப்பு நீக்கிய பாலுடன் கொக்கோ கலந்து பருகலாம்.
முட்டை-பன்றி இறைச்சி
முட்டையுடன் பன்றி இறைச்சியை எடுத்துக் கொள்ளும்போது அதனை ஜீரணிக்க அதிகமான ஆற்றல் தேவைப்படும். இதனால் உடல் சோர்வடையும். முட்டையை தனியாக அல்லது தக்காளியுடன் சேர்த்து உண்ணுவது நல்லது. தக்காளியில் உள்ள அமில தன்மை செரிமானத்திற்கு உதவும். தக்காளியில் உள்ள லிகோபீன் மற்றும் முட்டையில் உள்ள வைட்டமின் ஈ இணையும்போது நல்ல பலன்கள் ஏற்படும்.
தானியங்கள்-ஆரஞ்சு ஜூஸ்
காலை உணவாக தானியங்களை எடுத்துக்கொள்வது பலரின் வழக்கம். அதனுடன் உடல் வலிமைக்காக ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கொள்வது நல்லது என்று நாம் நினைப்போம். ஆனால் அது ஒரு தவறான கருத்து. ஆரஞ்சில் உள்ள அமிலம், தானியங்களில் உள்ள கார்போ ஹைடிரேடுடன் இணையும்போது செரிமானத்தை பாதிக்கும். வயிறு கனமாக இருப்பதாக உணருவோம். தானியங்கள் உட்கொள்ளலுக்கு 1 மணி நேரம் கழித்து இந்த பழச்சாறை நாம் பருகலாம்.
சாலட் - எலுமிச்சை சாறு :
சாலட்கள் உண்ணும்போது அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து உண்ணுவது சிலரின் வழக்கம். காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதற்கு கொழுப்புகள் தேவை. அதனால் இந்த சாலடுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் அல்லது சிறிய அவகேடோ பழம் சேர்த்து உட்கொள்ளும்போது கொழுப்பு சத்தும் சேர்ந்து உடலுக்கு நலன் விளைவிக்கும்.
பாஸ்தாவுடன் சீஸ் :
பாஸ்தா உண்ணும்போது அதில் தக்காளி மற்றும் சீஸ் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இவைகள் பாஸ்தாவில் உள்ள ஸ்டார்ச்சின் செரிமானத்தை பாதிக்கும் தன்மை கொண்டவை. கீரைகள் அல்லது வேக வைத்த காய்கறிகளை பாஸ்தாவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
என்ன வாசகர்களே! எந்த உணவு காம்பினேஷன்கள் உடலுக்கு ஏற்றதல்ல என்பதை தெரிந்து கொண்டீர்களா? இவற்றை பின்பற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.