சுவையான சத்துமாவு உணவு வகைகள்
எந்த பக்கவிளைவும் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவையும் நமக்கு அளிக்கின்றது இந்த சத்து மாவு.
சுவையான சத்துமாவு உணவு வகைகள்
குழந்தைகள் முதல் முதியவரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு சத்தான உணவு, எந்த பக்கவிளைவும் இல்லாத உணவு, ஆரோக்கியமான உணவு மற்றுமின்றி சுவையான உணவையும் நமக்கு அளிக்கின்றது இந்த சத்து மாவு உணவு. இதில் சிலவற்றை பார்ப்போம்.
சத்து மாவு பானம்:
தேவையானபொருட்கள்:
சத்துமாவு
பால்
தண்ணீர்
வெல்லம்
செய்முறை:
அரை கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சத்து மாவை போட்டு கரைத்துக்கொள்ளவும், பிறகு அடுப்பில் சிறு தணலில் காய்ச்சி கெட்டியான பதத்தில் வரும்போது (ஏற்கனவே இதை வறுத்ததால் சிறிது நேரம் காய்ச்சினாலே போதுமானது) அதனுடன் ஒரு கப் பால், தேவைக்கேற்ப பனங்கற்கண்டு (அல்லது) வெல்லம் சேர்த்தால் சுவையான சத்துமாவு பானம் ரெடி.
சத்து மாவு இனிப்பு கஞ்சி:
தேவையான பொருட்கள்:
சத்துமாவு
தண்ணீர்
பால்
ஏலப்பொடி
வெல்லம்
காரமான கஞ்சி:
சத்துமாவு
மிளகு
சீரக பொடி
மோர்
சின்ன வெங்காயம்
செய்முறை: 4 ஸ்பூன் சத்து மாவை, 2 கப் தண்ணீருடன் சேர்த்து சிறு தணலில் காய்ச்சி கெட்டியான பதத்தில் வரும்போது அதனுடன் மிளகு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து குடிக்கலாம், (அல்லது) இனிப்பாக வேண்டுவோருக்கு இதனுடன் தேவைக்கேற்ப வெல்லம், அரை கப் பால், ஏலக்காய் பொடி சேர்த்தால் சுவையான இனிப்பு கஞ்சி ரெடி.
சத்து மாவு லட்டு:
தேவையான பொருட்கள்:
சத்து மாவு ஒரு கப்
வெல்லம் முக்கால் கப்
ஏலக்காய் பொடி
நெய்
(தேவை என்றால் முந்திரி, பாதாம், காய்ந்த திராட்சை சேர்த்துக் கொள்ளலாம்).
செய்முறை: வெல்லத்தை ஒரு வாணலியில் போட்டு அதில் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி வெல்லம் நன்கு கரைந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு சத்து மாவை அதில் சேர்த்து கிளறவும் பிறகு அதில் ஏலக்காய் மற்றும் நெய் சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டவும் சூடாக இருக்கும்போதே உருண்டை பிடித்தால் நன்றாக உருண்டையாக வரும். சூடு ஆறிய பிறகு உருண்டை பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலை ஊற்றி கிளறி பிடித்தால் உருண்டை நன்றாக வரும். உங்களுக்கு வேண்டுமானால் பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சையை இதனுடன் சேர்த்து கூட உருண்டையாக பிடிக்கலாம். சுவையான சத்து மாவு லட்டு ரெடி.
சத்துமாவு இனிப்பு அடை:
தேவையான பொருட்கள்:
ஒரு கப் சத்துமாவு
முக்கால் கப் வெல்லம்
தேங்காய்த்துருவல்,
ஏலப்பொடி
நெய் (அல்லது) எண்ணெய்
செய்முறை :ஒரு வாணலியில் வெல்லத்தை போட்டு அதில் 3 டேபிள்ஸ்பூன் தண்ணீரை ஊற்றி வெல்லம் நன்கு கரைந்த பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு சத்து மாவை அதனுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும் பிறகு ஏலக்காய்பொடி, தேங்காய் துருவலை போட்டு நன்கு கிளறி உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள், தோசைக்கல் சூடு ஆனபிறகு இந்த உருண்டையை இந்த தோசை கல்லின் மீது வைத்து அடை போல் தட்டவும் அதன் மேல் சிறிது நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சிறு தணலில் இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் ருசியான சத்து மாவு அடை ரெடி .