ஆரோக்கியமான ஆயுட்காலம்
நமது வாழ்நாட்கள் முன்பை விட குறைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணம் யார் ? நிச்சயமாக நம்மை தவிர வேறு யாரும் காரணம் இல்லை.
நமது முன்னோர்கள் நூறு வயது வரை வாழ்ந்தார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறோம். இந்த காலகட்டத்தில் எங்கோ ஒருவர் நூறு வயது வரை வாழ்கிறார் என்றால் அவரை படம் பிடித்து பேட்டி எடுக்கும் நிலையில் தான் இருக்கிறோம். உலகிலேயே ஜப்பானியர்களின் ஆயுட் காலம் தான் பெரியது என்று கணக்கிடப் பட்டிருக்கிறது. பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 87 ஆண்டுகள் .ஆண்களின் ஆயுட் காலம் சராசரியாக 80 ஆண்டுகள் . ஆனால் இந்தியர்களின் ஆயுட்காலம் ஆண்களுக்கு 67 ஆண்டுகள். மற்றும் பெண்களுக்கு 70 ஆண்டுகள்.
நம் உடல் நலத்திற்காகவும் நீண்ட ஆயுளிற்காகவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவது அவசியம். அவ்வாறு செய்தால் நாம் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
மக்கள்தொகை ஆய்வுக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனம் (Max Planck Institute) மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, புகை பிடிக்காமல் இருப்பது , ஆல்கஹால் மிதமாக உட்கொள்வது மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது ஆகியவை ஒரு மனிதனுக்கு தமது வாழ்நாளை விட ஏழு ஆண்டுகள் அதிகம் நீட்டிக்கும் எனக் கூறுகிறது. Health Affairs என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ஆபத்தான பழக்கங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பவர்கள் நீண்ட காலம் வாழும் ஜப்பானியர்களைவிட நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டியது.
ஆராய்ச்சியாளர்கள் 14,000 க்கும் அதிகமான நபர்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்தனர், புகை பிடிக்காதவர்கள் பருமனாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களின் ஆயுட் காலம் 4-5 ஆண்டுகள் அதிகமாக இருக்கிறது அதுவும் எவ்வித இயலாமையும்(disability) இல்லாமல் என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது . "மருத்துவ தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பெரும்பாலும் ஆரோக்கியமான, நீண்ட ஆயுட்காலத்தை தருவதாகவே இருக்கின்றன . ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை , எந்த செலவுமின்றி , தனிநபர்கள் மிக நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் போதுமானதாக உள்ளது" என்று ஜெர்மனியில் மக்கள்தொகை ஆய்வு மேற்கொண்ட மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் இயக்குனர் Mikko Myrskyla கூறினார். .
"ஆரோக்கியமான வாழ்க்கையே பயனுள்ள வாழ்வாகும். பருமனை தவிர்த்து, புகைப்பதை தவிர்த்து, மிதமான மது அருந்தி வாழ்வது ஒரு கடினமான குறிக்கோளாக இருக்க முடியாது" என்று Myrskyla கூறினார்.
இந்த ஆய்வு இயலாமை(disability) மற்றும் மொத்த ஆயுட்காலம் ஆகியவற்றில் பல முக்கிய ஆரோக்கிய பழக்கங்களின் ஒட்டுமொத்த தாக்கத்தை ஆய்வு செய்த முதல் ஆய்வாகும். Myrskyla மற்றும் சக உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பல பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தனர், இது ஆரோக்கிய வாழ்விற்காக ஆபத்துகளை தவிர்க்கும் மனிதர்களின் வாழ்க்கை காலம் எவ்வளவு என்பதையை தீர்மானிக்க அனுமதித்தது.
ஆரோக்கியமற்ற நடத்தைகளான உடல் பருமன், புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய மூன்றினாலும், ஆயுட் காலம் குறைவதையும், விரைவாக உடலில் இயலாமை உண்டாவதையும் ஆய்வறிக்கை உணர்த்தியது.
அதிலும், புகை பிடிப்பதால் ஆயுட் காலம் குறைவதாகவும், இயலாமையின் வருடங்கள் அதிகரிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
உடல் பருமனால் ஆயுட் காலம் குறைவதில்லை ஆனால் நீண்ட வருடங்கள் இயலாமையால் பாதிக்கப்படலாம்.
அதிகமாக மது அருந்துவதினால், ஆயுட் காலமும் குறைந்து, இயலாமையால் பாதிக்கப்பட நேரிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இம்மூன்று பழக்கங்களுமில்லாத வாழ்வு பல வருடங்கள் நீடித்திருக்கும். இதில் ஆச்சர்யப்படவேண்டிய மற்றும் அறியப்பட வேண்டிய முக்கிய செய்தி, இவ்விரண்டுக்குமான ஆயுட் கால வித்தியாசம் என்ன என்பதே..
உடல் பருமனில்லாத, புகை பிடிக்காத, மிதமான மது அருந்தும் ஒரு ஆணின் சராசரி ஆயுட் காலம் மற்றவரை காட்டிலும் 11 வருடங்கள் அதிகமாக குறிப்பாக ஆரோக்கியமாக இருக்கிறது. பெண்களில் இந்த இரு குழுக்களிடையேயான இடைவெளி 12 ஆண்டுகள்.
இந்த ஆய்வறிக்கையின் முடிவு கூறுவது என்ன வென்றால், ஆபத்தான பழக்க வழக்கங்களை புறக்கணிப்பவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழலாம் .