உங்கள் ரூமில் துர்நாற்றம் வருகிறதா?
வீட்டில் உள்ள வாடையை போக்க உதவும் சில டிப்ஸ்களை அறிய இங்கே படியுங்கள்.
வீடு நறுமணமாக இருந்தால் தான், நமது மனம் அமைதியாக இருக்கும். வீட்டில் துர்நாற்றம் வீசினால், நம்மால் அங்கே நிம்மதியாக இருக்க முடியாது. வீட்டில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க உதவும் சில டிப்ஸ்களை இங்கே தந்துள்ளோம். இதை செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
பேக்கிங் சோடா:
துர்நாற்றத்தை போக்க எளிதில் கிடைக்கும் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். ரூம் ஃப்ரெஷ்னரை விட இது சிறப்பாக செயல்படும். பேக்கிங் சோடா, விரும்பத்தகாத நாற்றங்களை உரிஞ்சுவதால், துர்நாற்றம் மறைந்துவிடும். ரூம் மட்டுமல்லாது, ஃப்ரிட்ஜில் ஏற்படும் நாற்றத்தையும் இது போக்கிவிடும். ஃப்ரிட்ஜில் பேக்கிங் சோடாவை ஒரு சிறிய பாத்திரத்தில் தினம்தோறும் வைக்கவும். அதன் பின் ஏற்படும் மாற்றங்களை நீங்களே பாருங்கள்.
சுத்தமான திரைச்சீலைகள் :
நிறைய மக்கள் கவனிக்காமல் விடுவது இதைத் தான். விரிப்புகள், திரைச்சீலைகள், அலங்காரத்திற்கு வைக்கப்பட்டுள்ள தலையணைகள், கம்பளம் மற்றும் கார்பெட் போன்றவைகளை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். இவையெல்லாம் துர்நாற்றங்களுக்கான முக்கிய காரணங்கள். அவ்வப்போது கார்பெட் மேல் சிறிது பேக்கிங் சோடாவை தெளித்து ,சில மணிநேரங்களுக்கு விட்டு விடுங்கள். இதனால் கார்பெட்டிலிருந்து நாற்றம் வீசாது.
ஜன்னல்கள்:
உங்கள் வீட்டை நல்ல வாசனையாக மாற்ற எளிதான வழி என்ன தெரியுமா? ஜன்னல்களைத் திறப்பது தான். இதனால் வீடு புத்துணர்ச்சி நிறைந்ததாக மாறும். வீட்டிற்கு நல்ல காற்றோட்டம் இருப்பது அவசியம்.
நறுமணப் பைகள்:
அறைகள் மற்றும் அலமாரிகள் நல்ல வாசனையாக இருக்க நீங்கள் அதில் நறுமணப் பைகளை வைக்கலாம். இந்த நறுமணப் பைகள் கடையிலும் கிடைக்கும், அல்லது உங்களுக்கு முடிந்தால் நீங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். அது எப்படியென்றால், ஒரு துண்டு துணியில் சிறிது லாவெண்டரை வைத்து, பின் அதில் உங்களுக்கு பிடித்த நறுமண எண்ணெய்கள் சில துளிகள் சேர்க்கவும். இதை ஒரு ரிப்பன் கொண்டு நன்கு கட்டிவிடுங்கள். அவ்வளவுதான்! நறுமணப் பைகள் தயார்.
ரூம் ஃப்ரெஷ்னர்:
வீடு மணக்க வேண்டும் என இஷ்டத்துக்கு பல வகையான ரூம் ஃப்ரெஷ்னரை வாங்கி பயன்படுத்துகிறீர்களா? இது நாற்றத்தை அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறைக்காது. நிறைய ரூம் ஃப்ரெஷ்னர் பயன்படுத்தும் போது, வாசனைகள் ஒன்றொடு ஒன்று கலந்து அது வேறுவிதமான நாற்றத்தை உண்டாக்கும். எனவே உங்களுக்கு மிகவும் பிடித்த ஏதேனும் ஒரு வாசனை கொண்ட ரூம் ஃப்ரெஷ்னரை தேர்ந்தெடுத்து, பயன்படுத்துங்கள்.