உங்கள் குழந்தை மலம் கழிப்பதில் பிரச்சனையா ?
1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவும் சில வீட்டு மருத்துவக் குறிப்புகளை அறிய இங்கே பார்க்கவும்.
உங்கள் குழந்தை மலம் கழிக்க கஷ்டப்பட்டாலோ அல்லது இரண்டு நாட்களுக்கு மேலாக மலம் கழிக்காமல் இருந்தாலோ அவர்களுக்கு மலச்சிக்கல் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்களுக்கு வயிற்றில் வலி ஏற்படலாம். அவர்கள் எடுத்து கொள்ளும் உணவின் அளவு குறையலாம். இதை கவனித்து வேண்டிய சிகிச்சை எடுப்பது அவசியம். எந்த நோயாக இருந்தாலும் சரி அல்லது குழந்தைகளின் உடல் நிலையை பற்றி எந்த சந்தேகமாக இருந்ததாலும் சரி, மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது.
குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனைக்கு பல காரணங்கள் இருக்க வாய்ப்புண்டு. மரபு வழி காரணங்கள், நார்ச்சத்து இல்லாத உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் அதிகமாக பசும்பால் குடிப்பது என பல காரணங்கள் இருக்கலாம்.
சரியான உணவுப் பழக்கங்களை பின்பற்றி இதன் தீவிரத்தை நம்மால் குறைக்க முடியும். அதைப்பற்றி அறிய இங்கே தொடர்ந்து படியுங்கள்.
பசும்பால்:
பொதுவாக ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 500 மிலி பால் போதுமானது. இதை விட அதிகமாக ஒரு குழந்தை தொடர்ந்து குடித்தால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குழந்தை பாத்ரூம் போகும் போது அழுதால், முதலில் உங்கள் குழந்தை குடிக்கும் பாலின் அளவை பாருங்கள்.
தண்ணீர்:
போதுமான அளவில் தண்ணீர் குடிக்காவிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும் . எனவே குழந்தைக்கு நிறைய தண்ணீர் கொடுங்கள். சில குழந்தைகள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் தண்ணீரின் சுவையை மாற்றி கொடுக்கலாம். உதாரணமாக சீரக தண்ணீர் அல்லது ஓமம் போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் என மாற்றி மாற்றி முயற்சித்து பாருங்கள்.
விளையாட்டு:
குழந்தைகள் நன்றாக ஓடியாடி விளையாட ஊக்குவியுங்கள்.
உணவுகள்:
கீழ்க்கண்ட நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட கொடுத்து வாருங்கள்.
ஆளி விதைகள்
ப்ராக்கோலி
பேரிக்காய்
அவகேடோ
பட்டாணி
பீன்ஸ்
ஓட்ஸ்
கோதுமை ப்ரட்
செர்ரி பழங்கள்
பெர்ரி பழங்கள்
நட்ஸ் வகைகள்
உலர் பழங்கள்
ப்ளம்ஸ் பழங்கள்
மசாஜ்:
தேங்காய் எண்ணெயை குழந்தைகளின் தொப்புளில் சில சொட்டு விட்டு, நன்கு மசாஜ் செய்து பின் சுடு தண்ணீரில் குளிக்க வைப்பதும் பலன் தரும்