தசாபுத்தியை கணிப்பது எப்படி?
ஒருவரின் தசாபுத்தி அவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்தை வைத்தே பலன்களை கொடுக்கிறது.
தசாபுத்தியை கணிப்பது எப்படி
ஒவ்வொரு கிரகங்களின் தசா வருடங்களை கணக்கில் கொண்டு 9 சமமற்ற பங்குகளாக பிரிப்பது தான் தசா புத்தியாகும். அதனால் ஒவ்வொரு தசையிலும் 9 தசா புத்திகளும் வரும். ஒவ்வொரு தசையிலும் அதனுடைய தசாபுத்தியே முதலில் வரும். தசையை விட தசாபுத்தி வலுவாக இருந்தால், அந்த தசை(தசா) கெட்ட தசையாக இருந்தாலும், தசாபுத்தி நல்லதாக இருந்தால் அக்காலகட்டத்தில் நல்ல பலன்களை கொடுக்கும். தசை(தசா) நல்ல தசையாக இருந்தாலும், தசாபுத்தி கெட்டதாக இருந்தால், தீய பலன்களையே கொடுக்கும். ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்தை வைத்து தான் அவர்களின் தசையும், தசாபுத்தியும் இப்பிறவியில் பலன்களை கொடுக்கும். தசையை போல் தசாபுத்திக்கும் கால அளவு உண்டு.
ஒவ்வொரு தசையிலும் ஒவ்வொரு தசாபுத்தி எத்தனை காலம் இருக்கும் என்பதை கணிப்பது எப்படி
எந்த ஒரு தசையையும் எந்த ஒரு புத்தியுடன் பெருக்கினால் கிடைக்கும் விடையில் கடைசி இலக்கத்திற்கு முன்னாள் வரும் இலக்கங்கள் எத்தனை மாதங்கள் என்பதை குறிக்கும். கடைசி இலக்கம் நாட்களை குறிக்கும். ஆனால் கடைசி இலக்கத்துடன் மூன்றை பெருக்கினால் எத்தனை நாட்கள் என்பது தெரியும்.
உதாரணம்:
ஒரு இலக்க எண்:
கேது தசை கேது புத்தி:
கேது தசை=7
கேது புத்தி=7
புத்தி=7×7=49
முதல் 1 இலக்க எண் மாதங்கள், ஆகவே 4 மாதங்கள். கடைசி இலக்கத்தை மூன்றால் பெருக்கினால் நாட்கள் வரும். அடுத்த இலக்கமான 9 மூன்றுடன் பெருக்கினால் 27 வரும் (9×3நாட்கள்= 27 நாட்கள்). அதாவது கேது தசையில் கேது புத்தி 4 மாதங்கள் 27 நாட்கள்.
இரண்டு இலக்க எண்:
ராகு தசை சனிபுத்தி
ராகு தசை=18
சனி புத்தி =19
புத்தி=18× 19=342
முதல் 2 இலக்க எண்கள் மாதங்கள் ஆகவே 34 மாதங்கள். கடைசி இலக்கம் நாட்களை குறிக்கும். அடுத்த இலக்கமான 2 மூன்றுடன் பெருக்கினால் 6 வரும்( 2× 3 நாட்கள்= 6 நாட்கள்). அதாவது ராகு தசை சனி புத்தி 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள். உங்களுக்கு எந்த தசை மற்றும் தசாபுத்தி நடக்கிறது என்று தெரிந்து கொண்டு அந்த தசை மற்றும் தசாபுத்திக்குரிய தெய்வத்தை வழிபட்டு வந்தால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் தலைக்கு வந்தது தலைப்பாகைவுடன் சென்றது என்று கூறுவதுபோல குறைந்து நன்மை பெருகும்.