முக்தி தரும் தில்லை
தில்லையில் நடராஜர் ஆடும் நடனம் நமக்கு உணர்த்துவது அவரின் திருவடியில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு முக்தி என்கின்ற பேரின்பம் கிடைக்கும் என்பதாகும்.
முக்தி தரும் தில்லை
சிவத்தலங்களில் முதன்மையானது ஆகாயத் தலமான தில்லையில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில். சிவபெருமான் தில்லையில் உள்ள கனக சபையில் ஆடிய ஆனந்த தாண்டவம் மற்ற தாண்டவங்களில் முதன்மையான தாண்டவமாக கருதப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி எனச் சொல்லப்படும் வரிசையில் சிதம்பரம் நடராஜ தரிசனத்தை கண்டாலே முக்தி என்று கூறப்படுவதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்.
சிவபெருமானுக்குப் பொன்னம்பலத்தான் என்ற பெயர் எப்படி உருவானது?
தில்லையில் உள்ள சிவனை அம்பலவாணர் என்று கூறுவார்கள். அவர் தில்லையில் உள்ள தங்க சபை என்று அழைக்கப்படும் பொன்னம்பலத்தில் (பொன்னால் அமைந்த கூடத்தில்) ஆனந்த தாண்டவம் ஆடியதால் சிவபெருமானுக்குப் பொன்னம்பலத்தான் என்ற பெயர் உருவானது.
ஆகாய தலத்தின் சிறப்பு
பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ர பாதர் இருவரும் சிவபெருமான் ஆடிய ஆனந்த தாண்டவத்தை காண்பதற்காக தவமிருந்தனர். சிவபெருமானும் அவர்களது பக்தியை மெச்சி தில்லையில் மார்கழி திருவாதிரை நாளன்று எனது ஆனந்த தாண்டவத்தை காணலாம் என்றார். அதேபோல் சிவபெருமான் தில்லையில் மார்கழி மாத திருவாதிரை தினத்தில் மீண்டும் தனது ஆனந்தத் தாண்டவத்தை ஆடி ஆருத்ரா திருக்காட்சியைக் அருளினார். அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் மார்கழி திருவாதிரை நாளன்று தில்லையில் அம்பலவானன் ஆனந்த தாண்டவம் திருக்காட்சியை கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இதை காண கண் கோடி வேண்டும் என்று கூறும் அளவிற்கு அற்புதமான காட்சியாகும். தில்லையில் நடராஜர் ஆடும் நடனம் நமக்கு உணர்த்துவது அவரின் திருவடியில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு முக்தி என்கின்ற பேரின்பன் கிடைக்கும் என்பதாகும். அதனால் தான் சிதம்பரத்தில் நடராஜர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவரும் மார்கழி மாதத் திருவாதிரை திருநாளன்று தில்லைக்கு சென்று ஆருத்ரா தரிசனத்தை கண்டு இறைவனின் திருவருளால் முக்தி எனும் பேரின்பத்தை பெற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.