நுரையீரல் ஃபைப்ரோஸிஸ்
நீங்கள் தூங்கும் நேரம் குணப்படுத்த முடியாத நுரையீரல் ஃபைப்ரோஸிஸை ஏற்படுத்தக்கூடும்
நீங்கள் 4 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா? அல்லது ஒரு நாளில் 12 மணிநேரத்திற்கு அதிகமாகத் தூங்குவீர்களா? மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் இருந்தால் அதுவும் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு நடந்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு ஆபத்தான நுரையீரல் நோய் வர வாய்ப்புள்ளது. நீங்கள் தினமும் 4 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால், வாய்ப்புகள் இரட்டிப்பாகும். மேலும், தினமும் 11 மணி நேரத்திற்கு மேல் தூங்குவது ஆபத்தை 300% ஆக அதிகரிக்கிறது.
'ப்ரோசிடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்' இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், உடல் கடிகாரத்திற்கும் நுரையீரல் ஆரோக்கியத்திற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 7-8 மணி நேரம் தூங்குகிறவர்கள் பாதுகாப்பான கட்டத்தில். இருக்கின்றனர். பல்மோனரி ஃபைப்ரோஸிஸ் என்னும் நுரையீரல் இழைநார்மை காரணமாக ஆண்டுக்கு 5,000 க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
“நுரையீரல் இழைநார் வளர்ச்சி என்பது ஒரு அழிவுகரமான நிலை, தற்போது இதனை குணப்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகையால், உடல் கடிகாரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்ற இந்த கண்டுபிடிப்பு இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க புதிய வழிகளைத் திறக்கும் ”என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஜான் பிளேக்லி கூறியிருக்கிறார்.
“இந்த அறிக்கை உறுதி செய்யப்பட்டால், உகந்த நேரம் தூங்குவது அபாயகரமான இந்த நோய்த்தாக்கத்தின் பாதிப்பை குறைக்கமுடியும்” என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
நமது உடல் 24 மணிநேரமும் செயல்படுவதால் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உட்புற உடல் கடிகாரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. உட்புற கடிகாரத்தில் ஏற்படும் இடையூறு நுரையீரல் உட்பட முழு உடலையும் பாதிக்கிறது. இது நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் போன்ற பேரழிவு தரும் நுரையீரல் நோய்களை உருவாக்கும் அபாயங்களை அதிகரிக்கிறது. மேலும், இங்கிலாந்து பயோபாங்கிலிருந்து தரவைச் சேகரித்த பின்னர் , இந்த குணப்படுத்த முடியாத நோய் குறுகிய மற்றும் நீண்ட தூக்க நேரங்களுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
நான்கு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இந்த நோய்க்கான ஆபத்து 200% ஆகும். அதேசமயம், 7-8 மணிநேரம் போதுமான தூக்கம் எடுப்பவர்களுடன் ஒப்பிடும்போது 11 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களில் இதன் ஆபத்து 300% ஆகும். ஒழுங்கற்ற உடல் கடிகாரம் காரணமாக நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இரவு நேர வேலை அல்லது இரவு தாமதமாக வேலை செய்பவர்களிடமும் காணப்படுகிறது.