6 பேக் வயிறு ஆபத்தானதா?
சினிமாவால் புகழ் பெற்ற விஷயங்களில் 6 பேக்கும் ஒன்று!
எல்லா ஹீரோக்களும் 6 பேக் உடலமைப்போடு இருப்பது போல் காட்சிகளில் திரையில் தோன்றுவதால், எல்லா ஆண்களும், பெண்களும் அதே போன்ற உடலமைப்பை பெற பயிற்சிகள் எடுத்து கொள்கின்றனர். உண்மையில் 6 பேக் உடலமைப்பு நல்லதா ? கெட்டதா?
இதை விட சிறந்த பயிற்சிகள் மூலம் தசை வலிமை பெறலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 6 பேக் என்பது, மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. இயற்கைக்கு மாறானது, உண்மை இல்லாதது , ஆரோக்கியத்தை குறைக்க கூடியது என்று கூறப்படுகிறது. தசைகளை வலிமைப்படுத்துவது எப்படி தவறாக இருக்க முடியும் என்று குழப்பமாக உள்ளதா?
வயிற்று பகுதியை திடமாக்க, கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வயிற்று பகுதி மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு , மற்ற பகுதி தசைகள் நிராகரிக்கப்படுகின்றன. கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு, அதனை மேற்கொள்பவருக்கு ஒரு வித அழுத்தத்தையும், சமூக வாழ்வில் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
6 பேக் வயிறு பெறுவதற்காக அளவுக்கதிகமான உடல் கொழுப்பு விகிதத்தை இழக்க வேண்டியிருக்கும். குறைந்த கொழுப்பு விகிதத்தை பெற கடுமையான பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும். பல மணி நேரங்கள் ஜிம்மில் இருக்க வேண்டி வரும். சமூக தொடர்புகளை இழக்க வேண்டும். கடுமையான உணவு கட்டுப்பாடும் டயட்டும் பின்பற்ற பட வேண்டும். உண்மையில், நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு, ஆரோக்கிய கொழுப்பு விகிதம் தான் தீர்வாகும். முக்கிய உறுப்புகளை ஆசுவாசப்படுத்த, வெப்பநிலையை கட்டுப்படுத்த, என்சைம்களை உற்பத்தி செய்ய, ஹார்மோன் அளவுகளை நிர்வகிக்க, உடலுக்கு கொழுப்புகள் அவசியம். சரியான அளவு கொழுப்பு உடலில் இல்லாமல் இருப்பது பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
பெண்களின் நிலை இன்னும் மோசம், இயற்கையாகாவே பெண்களுக்கு ஆண்களை விட கொழுப்பு அதிகம் தேவைப்படும். கருவில் குழந்தை வளர்ச்சிக்கும், குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கவும், கொழுப்பு அத்தியாவசியமாகிறது. குறைந்த கொழுப்பு உடைய உடல் பல சுகாதார கேடுகளை சந்திக்கும். 6 பேக் வயிறு கொள்வதால், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனைகள் தோன்றலாம் . 6 பேக் வயிறு வேண்டும் என்ற ஆசையை விட்டு விட்டு, மொத்த உடலின் தசை வலிமைக்கும் ஏற்ற பயிற்சிகளை மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
6 பேக் வயிறு பெறுவதற்கு, 10% விட குறைவான உடல் கொழுப்பு இருத்தல் அவசியம். சீரான மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு தேவையான கொழுப்பு, ஆணுக்கு 10-15% , மற்றும் பெண்ணுக்கு 16-20% ஆகும். . குறைந்த கொழுப்பால் உடலுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
சீரற்ற குடல் செயல்பாடு, ஹார்மோன் சமச்சீரின்மை, அதிகரித்த சோர்வு, , பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம், தசை பிடிப்பு மற்றும் வலி, மன உளைச்சல் போன்றவை இந்த பயிற்சியால் ஏற்ப்படும் எதிர்மறை விளைவுகளாகும்.அளவுககிகமான பயிற்சியால், தசைகளில் வலி ஏற்படலாம் . காயமும் உண்டாகலாம். இது ஆபத்தை கூட்டும்.
விளம்பரங்களிலும், திரைப்படத்திலும் பார்க்கும் மாடல்கள் 6 பேக் வயிறுடன் அழகாக காணப்படலாம். ஆனால் அது அவ்வளவு மதிப்பான விஷயம் இல்லை. தொப்பை இல்லாத வயிறு வேண்டும் என்பது நமது குறிக்கோளாக இருக்கலாம். அதனை நோக்கி நமது பயிற்சிகள் பயணிக்கலாம். உடலை வருத்தி, தீவினைகளை உடலுக்கு கொடுத்து, மற்றவர்கள் கண் பார்வைக்கு நம்மை அழகாக காட்டுவது நமது வாழ்க்கைக்கு ஏற்றது அல்ல.