சிவபெருமானின் புதல்விகள்
சிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டு மகன்கள் உள்ளதை அறிந்த நாம் சிவபெருமானின் மகள்கள் பற்றி இதுவரை கேட்டறிந்ததில்லை . ஆம், ஆச்சர்யமாக உள்ளதா?
சிவபெருமான் பற்றி இதுவரை நாம் அறிந்திராத செய்திகள்
சிவபெருமான் துறவியாக இருந்தது முதல் இல்வாழ்க்கையில் ஈடுபட்டது வரை சிவபுராணம் சிறப்பாக விவரிக்கிறது. பிறகு அவர் இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாக தனது பொறுப்பை சீராக நிறைவேற்றினார் என்பதும் நாம் அறிந்த செய்தி தான். ஆனால், சிவபெருமானுக்கு மகள்கள் இருந்ததாக சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும். வாருங்கள், சிவபெருமானின் மகள்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
அசோகசுந்தரி :
குஜராத் மற்றும் அண்டை பிரதேசங்களில் கூறப்படும் விரதக் கதைகளில் அசோக சுந்தரி பற்றி ஒரு கதை உண்டு. பத்மா புராணத்தில் அசோக சுந்தரி பிறப்பு குறித்து பதிவிடப்பட்டுள்ளது. தனிமையில் இருந்து விடுதலை பெறுவதற்கு பார்வதி ஒரு மரத்தில் இருந்து அசோக சுந்தரியை உருவாக்கியதாக அறியப்படுகிறது. பார்வதியின் சோகத்தை நீக்கியதால் இவர் அசோக என்று அழைக்கப்பட்டார் . சுந்தரி என்பது அவளுடைய அழகை குறிக்கும் சொல்லாக இருந்தது. பிள்ளையாரின் தலை சிவபெருமானால் வெட்டப்படும்போது பயந்துபோய் அசோக சுந்தரி ஒரு உப்பு மூட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டதாகவும், இந்த நிகழ்ச்சியால் தனது தாய் மீது கோபம் கொண்ட அசோக சுந்தரி, பின்னர் தனது தந்தை சிவபெருமானால் சமாதானம் செய்யப்பட்டதாகவும் கதைகள் உண்டு. இது தவிர இவருடைய இருப்பு குறித்து வேறு எந்த தகவலும் இல்லை. பொதுவாக அசோக சுந்தரியை உப்புடன் தொடர்பு படுத்தி கூறுவார்கள். உப்பு என்பது ஒரு முக்கிய மூலப்பொருளாகும். உப்பு இல்லையேல் சமையலில் ருசி இருக்காது.
ஜோதி:
தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் ஜோதி என்ற பெயரில் கடவுள் சிலை இருப்பதை நாம் கண்டிருக்கலாம். ஜோதி என்பது வெளிச்சத்தின் கடவுள் என்பதைக் குறிக்கும். சிவபெருமானின் ஒளிவட்டத்தில் இருந்து உருவான இந்த ஜோதி, கருணையின் உருவாக படைக்கப்பட்டது.
மானசா :
பெங்காலிய கிராமிய கதைகளில், மானசா என்ற பெண் கடவுள், பாம்பு கடியை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது. இவர் பாம்புகளின் அரசன் வாசுகியின் சகோதரி ஆவார். பாம்புகளின் அன்னை கத்ரு செதுக்கிய சிற்பத்தை சிவபெருமானின் விந்து தொட்டதால் மானசா உருவானதாக அந்தக் கதைகள் கூறுகின்றன. இந்த வகையில் இவர் சிவபெருமானின் மகளாவார். ஆனால் இவருக்கு பார்வதி அன்னை இல்லை. சண்டி என்று அறியப்படும் பார்வதி தேவி மானசாவின் மீது நம்பிக்கையற்று இருந்தார். பாற்கடலைக் கடையும்போது வெளிப்பட்ட விஷத்தை சிவபெருமான் அருந்தும்போது அவருக்கு உதவிய மானசாவை சிவபெருமானின் மகள் என்று அடையாளம் கண்டுகொண்டார் பார்வதி தேவி. ஆனாலும் சண்டி மானசாவின் மேல் அதீத கோபம் மற்றும் பொறாமைக் கொண்டு, அவளின் ஒரு கண்ணைக் குருடாக்கி விட்டார்.
பின்னர் மானசாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாளன்று மணவறைக்கு பாம்புகளால் ஆன நகைகளை அணிந்து கொண்டு செல்லும்படி சண்டி உத்தரவிட்டார். இதனால் மானசாவின் கணவர் ஜரத்காரு பயந்து மணவறையில் இருந்து ஓடிவிட்டார். தந்தை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மானசா கோபம் கொண்டு தனது கசப்பான வாழ்வை நினைத்து ஒரு கொடூரக் கடவுளாக மாறினார். பாம்பு கடியால் உண்டாகும் மரணத்தில் இருந்து தப்பிக்க இந்தக் கடவுளை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.