மகா சிவராத்திரி
சிவராத்திரியின் மகத்துவம்
மகா சிவராத்திரி
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் வரும் ராத்திரியை மகா சிவராத்திரியாக இந்துக்கள் சிவனை நினைத்து விரதம் இருந்து கொண்டாடி வருகின்றனர்.
யோகிகளின் குரு ஆதியோகி:
முதன்முதலில் தியானத்தை மேற்கொண்டவர் சிவன். அதனால் தான் யோகிகள் சிவனை தங்கள் குருவாக நினைத்து ஆதியோகி என்று அழைக்கின்றனர். யோகிகள் குருவான சிவன் தியானத்தினால் ஆதியும் இல்லாத, அந்தமும் இல்லாத லிங்க வடிவமாக மாறிய தினமே மகா சிவராத்திரி ஆகும். மகா சிவராத்திரி அன்று தியானத்தின் மூலம் இயற்கையாகவே கோள்களில் ஏற்படும் அபரிமிதமான சக்தியால் நம் உடல் மற்றும் உள்ளத்திற்கு வலிமை கிடைக்கும் என்பதால் யோகிகள் இந்த நாளில் தியானத்தை தங்களின் ஆதி குருவான சிவனைப் போல் உடல், மனம் என்ற நிலையை கடந்து மேலான நிலையை அடைவதற்காக மேற்கொள்கின்றனர். சிவராத்திரி அன்று நமது முதுகு தண்டு நேராக இருந்தால் தான் ஜீவ சக்தியை எழுப்ப முடியும். சிவராத்திரியில் நாம் கண்விழிக்கும் போது நமது உடலில் உள்ள ஜீவ ஆத்மா எழும்பி பரமாத்மாவோடு இணைவதற்கு முயற்சி செய்யும். அதனால் தான் ஞானிகளும், சித்தகளும் இந்த தினத்தன்று சிவனை நினைத்து கண்விழித்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி !எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்று மாணிக்கவாசகர் சிவனை போற்றியதற்கான காரணம் என்னவென்றால், இந்த உலகம் தோன்றுவதற்கான காரணமான இறைவன் ஒருவனே என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தவே நாங்கள் இறைவனை சிவனாக பார்க்கிறோம். மற்றநாட்டவரோ அவரவர்களுக்கு ஏற்ற இறைவனாக பார்கின்றனர் என்று பாடினார்.
நம் முன்னோர்கள் சிவனை லிங்க வடிவமாக வழிபட காரணம்: ஒரு அணுவால் பிரபஞ்சத்தில் ஏற்பட்ட ( பிக் பேங்க் எக்ஸ்பிளோஷன்) பெரும் வெடிப்பு விண்மீன்களும், உலகமும் தோன்றியதற்கான காரணமாக இருந்தது. அதன் பிறகு தான் உயிரினங்கள் தோன்றியது. அணு லிங்கத்தை போன்று கோள வடிவத்திலும், கரிய நிறமுடைய தாகவும் இருக்கும். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த பெரும் வெடிப்பு ஏற்பட்ட போது எழுந்த சத்தம் ஓம் என்றது தான். இது ஒரு அறிவியல் பூர்வமான உண்மை. இந்த உலகம் தோன்றுவதற்கான காரணமாக இருந்த அணுவாக இருந்தவனும் அவனே என்று உணர்ந்து நம் முன்னோர்கள் சிவனை லிங்க வடிவமாக வழிப்பட்டனர்.
மகாசிவராத்திரி அன்று கண்விழித்து சிவ பூஜை செய்தும், சிவன் பாடல்களை பாடியும், சிவன் கோயில்களுக்கு சென்றும் சிவனை வழிப்பட்டால் பல யாகங்களும், பூஜைகளும் செய்வதற்கு சமம். இதனால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, நற்கதியடைவோம். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் சிவராத்திரி அன்று தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தாலே போதும் அவர்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.