சருமத்தை புதுப்பிக்க உதவும் இயற்கையான பொருட்கள் 

இயற்கையான முறையில் சருமத்தில் உள்ள இறந்த செல்களை களைந்து புது பொலிவை பெற சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். அந்த தகவலை பற்றியது தான் இந்த பதிவு.

சருமத்தை புதுப்பிக்க உதவும் இயற்கையான பொருட்கள் 

கை மற்றும் கால்களில் சில நேரம் தோல் உரிவதை நாம் கண்டிருக்கிறோம். இது ஏன் என்றால் சருமம் அதன் மேல் படிவத்தில் படர்ந்துள்ள இறந்த செல்களை அழித்து கொள்வதாகும். சருமத்திற்கு இயற்கையாகவே தன்னை புதுப்பித்து கொள்ளும் தன்மை உள்ளது என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. வயது அதிகரிக்கும்போது இந்த செயலாற்றல் குறையும். பொதுவாக சிறு வயதில், பழைய தோல் உரிந்து புது தோல் வர 4 வாரங்கள் ஆகும். ஆனால் வயது முதிர்ச்சியில்   புதிய தோல் வர 2.5 மாதங்களை வரை ஆகும்.  இந்த தோல் உரிதல் மற்றும் புதுப்பித்து கொள்ளுதலில் ஏற்படும் மாற்றங்களுக்கு வைட்டமின் குறைபாடுகள், சூரிய வெளிச்ச குறைபாடு போன்றவை காரணமாக இருக்கலாம்.


இறந்த செல்களை சருமத்தில் இருந்து வெளியேற்றி புது பொலிவை பெரும் செயலை செய்ய உதவும் பொருட்களை எக்ஸ்பாலியன்ட்(exfoliant ) என்று அழைக்கலாம். இதற்கு உதவும் பொருட்கள் நம் வீட்டிலேயே உள்ளது. அவை யாவை என்பதை இப்போது பார்க்கலாம்.

ஸ்க்ரப்:
ஸ்க்ரப் என்பது தோல் உரித்தலின்  அடித்தளம். இது சருமத்தில் இருந்து பழைய தோல் வெளியாவதை தீவிரப்படுத்துகிறது. சர்க்கரை, ஓட்ஸ், உப்பு, காஃபீ கொட்டை , பாதாம் போன்றவை சிறந்த ஸ்க்ரப்களாகும்.

பேஸ் (Base ):
தேன், தயிர், பால் மற்றும் ஆலிவ் ஆயில் போன்றவற்றோடு இந்த ஸ்கரப்பை  சேர்க்கலாம்.

கூட்டு பொருட்கள்:
ஈரப்பதம், புத்துணர்ச்சி , மற்றும் நீர்ச்சத்து தேவைக்காக பைனாப்பிள் , பப்பாளி , பூசணிக்காய் போன்றவற்றை சேர்க்கலாம்.

தேன்:
சரும பாதுகாப்பிற்கு ஒரு இயற்கையான மூலப்பொருள் தேன். இதன் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் குணப்படுத்தும்  தன்மை தான் இதன் சிறப்பு. சருமத்தை இளமையாக தொடர சேர்கிறது. சுருக்கங்கள் தோன்றுவதில்  தாமதத்தை ஏற்படுத்துகிறது.  இதனை வேறு சில பொருட்களோடு இணைத்து பயன்படுத்தும்போது நல்ல பலனை பெறலாம்.

தயிர்:
தயிரில் இருக்கும் கொழகொழப்பான தன்மை , ஸ்க்ரப்போடு இணையும் போது நல்ல பலனை கொடுக்கிறது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. சரும துளைகளில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குகிறது. சருமத்தில் தோன்றும் புள்ளிகளை அழிக்கிறது.

சர்க்கரை:
பழுப்பு சர்க்கரையில் க்ளைகோலிக் அமிலம் உள்ளது. இது இயற்கையான  தோல் உரிவதற்கான பலனை கொடுக்கிறது. குறிப்பாக பருக்கள் மற்றும் இதர சரும தொந்தரவுகளுக்கு தீர்வாக இருக்கிறது. பாக்டீரியாவை எதிர்த்து போராடி, சருமத்தை தூய்மையாக வைக்க உதவுகிறது.

எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாரும் இயற்கையான முறையில் தோல் உரிதலுக்கு பயன்படுகிறது. இது எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது.

பப்பாளி:
வைட்டமின் ஏ , வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளதால், நுண் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் பப்பைன் என்னும் என்சைம் தோல் உரிதலுக்கான செயல்பாட்டில் அதிகம் உதவும். சோர்ந்த மற்றும் எண்ணெய் பசையுடைய சருமத்திற்கு ஏற்றது. வயது முதிர்வின்  காரணமாக தோன்றும் கோடுகள், சுருக்கங்கள் , போன்றவை பப்பாளியால் குறைக்கப்படுகின்றன.

பூசணிக்காய் :
சருமத்தின் அழகை மேம்படுத்த உதவும், வைட்மன் சி . ஏ ஈ மற்றும் பீட்டா கரோட்டின் இதில் அதிகமாக உள்ளது. இதன் விழுதில்  இருக்கும் என்சைம் ஒரு சிறந்த தோல் உரிதலுக்கான செயலை செய்ய உதவுகிறது.

மேலே கூறிய பொருட்களை கொண்டு சருமத்தை புதுப்பித்து கொள்ளலாம். ஆனால் அடிக்கடி இந்த முறைகளை பின்பற்றுவது ஏற்புடையது அல்ல. வறண்ட சருமமாக இருக்கும் போது வாரத்திற்கு ஒரு முறையும், எண்ணெய் சருமமாக இருக்கும் போது வாரத்திற்கு இரண்டு முறையும் இவற்றை உபயோகிக்கலாம்.