புகை பழக்கத்தை நிறுத்த புதிய கண்டுபிடிப்பு!
நாம் பல வருடங்களாக பழக்கத்தில் கொண்டுள்ள விஷயங்களை திடீரென்று முழுவதுமாக விடுவது என்பது கடினமான ஒரு செயல்.
நகம் கடிக்கும் பழக்கம், புகை பிடிப்பது, மது அருந்துவது, இப்படி எந்த ஒரு வழக்கத்தையும் உடனடியாக விடுவது அதுவும் முற்றிலும் நமது வாழ்க்கையில் இருந்து விலக்குவது என்பது உண்மையில் மிகவும் கடினம்.
புகை பிடிக்கும் பழக்கத்தை மூன்று வாரங்கள் விட்டவர், மனைவியுடன் கொண்ட கருத்து மோதலில் வெளியில் சென்று மூறு வாரங்கள் விலக்கி வைத்த பழக்கத்தை மீண்டும் தொடர தொடங்குவார், நமது மன அழுத்தம் தீய பழக்கத்தை நம்மிடமிருந்து விலக்கி வைக்க இடம் கொடுப்பது இல்லை.
யூனிவர்சிட்டி ஆஃப் கொலம்பியா ஒரு புதிய ஆய்வை நடத்தியது . அந்த ஆய்வில், ஓட்ட பயிற்சிக்கும், தீய பழக்கங்களை நிறுத்துவதற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் ஒரு ஆழமான ஆய்வை தொடங்கினர். அந்த ஆய்வின் பெயர் “விடுவதற்காக ஓடு” Run to Quit என்பதாகும்.. ஒரு குழுவை உருவாக்கி, புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக ஓட்ட பயிற்சியை தொடங்கினர்.
2016ம் ஆண்டு 168 புகை பிடிப்பவர்கள் இந்த சோதனைக்கு சம்மதித்தனர். பாதிக்கும் குறைவானவர்கள் தான் முழு பயிற்சியையும் முடித்தனர். 51% பேர் முழுமையாக புகை பழக்கத்தை நிறுத்தியிருந்தனர். நிஜமாகவே ஓட்ட பயிற்சி நல்ல மாற்றத்தை தந்தது.
ஒரு குறிக்கோளை அடைய மற்றவர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். கடினமான ஒரு செயலை செய்யும்போது சமூகம் அதற்கான ஆதரவை தெரிவிக்கும் போது வெற்றி நமதாகிறது என்பதை இது விளக்குகிறது.
ஒவ்வொரு குழுவில் இருக்கும் ஓட்ட பயிற்சி உறுப்பினருக்கும், மற்ற குழுவில் உள்ளவர்களிடம் கருத்துக்களை பகிர்வதற்கான வெளி கிடைத்தது. உறுப்பினர்கள் அல்லாதவரும் கருத்துகளை பரிமாற முடிந்தது. இதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. தனி நபரால் கடினமாக உணரும் ஒரு செயல், குழுவாக செய்யும் போது எளிய முறையில் நிறைவடைகிறது.
சைக்கோதெரபிஸ்ட் நதாலி தியோடோர் ஒரு சுவாரஸ்யமான கருத்தை பதிவு செய்கிறார். செய்ய முடியாத அல்லது செய்வதற்கு கடினமான செயலை செய்ய நினைத்து அந்த நினைப்பில் பின் வாங்காமல் இருப்பவர்களுக்கு சுயமாகவே ஒரு ஆற்றல் உருவாகிறது. இந்த ஆற்றல் அவர்களை வெற்றிகரமான முறையில் தீய பழக்கத்தை விடுவதற்கு உதவுகிறது. ஒருவரின் ஆற்றலை மேம்படுத்த ஒட்டப்பயிற்சி ஒரு சிறந்த செயல் என்று அவர் கூறுகிறார். ஒட்டப்பயிற்சியை தொடங்க அதிக அளவு முயற்சியும் அர்ப்பணிப்பும் தேவை . இதனை ஏற்படுத்திக் கொண்டு ஓட்ட பயிற்சியை தொடங்கும்போது, அவர்களால் எந்த ஒரு வேலையையும் இதே அர்பணிப்போடும் முயற்சியோடும் செய்ய முடியும் . மற்றும் அவர்களின் சுய மதிப்பீடும் அதிகரிக்கும் என்று அவர் கூறுகிறார். ஓட்ட பயிற்சி உடலை மட்டும் அல்ல மனதையும் வலிமையாக்குகிறது . இந்த வலிமை அவர்கள் வாழ்வில் இன்னும் பல சிறந்த மாற்றங்களை உருவாக்கும் என்று மேலும் குறிப்பிடுகிறார்.
பொதுவாக புகை பிடிக்கும் பழக்கம் மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகமான சூழ்நிலையில் தான் அதிகரிக்கிறது. ஓட்ட பயிற்சி இந்த மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது. மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது. இதனால் தீய பழக்கங்களின் தேவை குறைகிறது.
ஓட்ட பயிற்சியின் போது எண்டோரபின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது மன நிலையை சோர்வாகாமல் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. புகை பழக்கத்தை நிறுத்துவதால் ஏற்படும் மனச்சோர்வை இது குறைக்கிறது. பொதுவாக உடற்பயிற்சி மனம் மற்றும் உடலை அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. மன அழுத்தத்தில் பாதிக்காதபடி மகிழ்ச்சியோடு இருந்தால் மீண்டும் தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்க கூடும்.