தேங்காய் நார் - ஒரு குறிப்பு
தேங்காய் நார் தென்னை மரத்தின் ஒரு பெரிய தயாரிப்பு ஆகும். தென்னை மரத்தின் மூலம் கிடைக்கப் பெரும் பல மிக மதிப்புமிக்க பொருட்களோடு தேங்காய் நாரும் பெரும் பங்கு வகிக்கிறது.
தேங்காய் நாரைக் கொண்டு தரை விரிப்புகள், பாய்கள், தூரிகைகள் மற்றும் கரி போன்றவற்றை தயாரிக்க முடியும். மேலும் பல்வேறு பொருட்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபரால் கூட தயாரிப்பதற்கு முடியக் கூடிய வகையில் தேங்காய் நார் பல வகையில் உபயோகப் படுகிறது. பல்வேறு வணிகப் பொருட்கள் தயாரிப்புகளுக்கு உதவக் கூடிய தேங்காய் நார்கள் வணிக ரீதியாகவும் பெரும் மதிப்பை பெரும் ஒரு முக்கிய மூலப் பொருளாக விளங்குகின்றது.
மேலும் இது இயற்கையானதாக இருப்பதால் இதன் மூலம் உருவாக்கப் படும் பொருட்களில் பெரும்பாலும் பக்க விளைவுகள் என்பது இல்லை.
தேங்காய் நார் மறுசுழற்சி சுத்திகரிப்பு திறன் கொண்டது, இது 100% மறுசுழற்சி தயாரிப்பு ஆகும். தேங்காய் நார் மிக நீண்ட நீளம் வரை கிடைக்கிறது. பொதுவாக அவை 4 முதல் 12 அங்குலங்களில் கிடைக்கிறது. மேலும் அதன் வண்ணங்கள் பழுப்பு நிறமாகவும் வெள்ளை நிறமாகவும் இயல்பாகவே உள்ளன.
பொதுவாக அறுவடை செய்யப்பட்டு ஆறு மாதங்கள் ஆன தேங்காய் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நன்கு முதிர்ந்த தேங்காயிடம் இருந்து பழுப்பு நிறத்தில் தேங்காய் நாரைப் பெற முடியும். சற்று இளசான தேங்காயிடம் இருந்து வெள்ளை நார்களை பெற முடியும்.
தேங்காயில் இருந்து எடுக்கப்படும் நார் என்பது நாம் முன்பு கூறியது போல ஒரு இயற்கை நாராகும்.
தேங்காய் நாரில் இருந்து கைவினை பொருட்கள் மற்றும் இயந்திரங்களால் செய்யப் படும் பொருட்கள்,இரண்டுமே சாத்திய படுகிறது. இது இவைகளின் மற்றும் ஒரு சிறப்பு அம்சமாகும்.
பொதுவாக தேங்காய் வெளிப்புற ஓட்டில் இருந்து பல்வேறு வகையான தேங்காய் நார்கள் எடுக்கப் படுகிறது.
சந்தையில் கிடைக்கப் பெரும் பல்வேறு வகை தேங்காய் நார்கள் (கொயர்) உள்ளன. பயன்பாட்டின் தேவைக்கு ஏற்ப இதன் தரத்தை கருத்தில் கொள்வது நல்லது.
1. பழுப்பு இழை (பிரவுன் ஃபைபர்)
2. வெள்ளை இழை (வைட் ஃபைபர்)
3. பிரிஸ்டல் நார் (பிரிஸ்டல் காயர்)
4. பஃபரிங் நார் (பஃபரிங் காயர் )
இவை அனைத்தும் பல்வேறு நார் சார்ந்த பொருட்களின் உற்பத்திக்காக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உலகிலேயே இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் நார் தயாரிப்பில் முக்கிய பங்காற்ற கூடிய உற்பத்தியாளர்களாகும். குறிப்பாக இலங்கை, உலகில் தரமான, சிறந்த நார்களை உற்பத்தி செய்வதில் முதல் இடம் பிடிக்கிறது. ஏனெனில் இலங்கையில் சிறந்த இயற்கை உரங்கள் இருப்பதும், அங்கே உற்பத்தி செய்யப்படும் நார்கள் பல பல் நோக்கு பயன்பாடுகளுக்கு உபயோகப் படுவதும் ஒரு காரணம் ஆகும்.
இந்த தேங்காய் நாரானது பிலிப்பைனில் ஈக்கோ ஃபைப்பர் எனவும் அழைக்கப்படுகிறது.
தேங்காய் நார் கயிறு உற்பத்தி செய்வதற்காகவும் பரவலாக பயன்படுத்தப் படுகிறது. இதன் மூலம் உற்பத்தில் செய்யப் படும் கயிறு மிகவும் வலிமையாக இருக்கும்.
பெரும்பாலும் இலங்கையிலும் , இந்தியாவிலும் கடலோர பகுதிகளில் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவை ஏற்றுமதி பயன்பாட்டிற்காக பரந்த அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தேங்காய் நார் நமது சுற்றுசூழலுக்கு பங்கம் விளைக்காது என்பதால் அவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம்.
மீன் வடிகட்டிகள், தரையில் கம்பளங்கள், தூரிகைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் இருக்கை கவர்கள் போன்ற பல வகையான உற்பத்திக்காக ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய் நார் பெரும் அளவில் உதவுகின்றன. தேங்காய் நாரில் செய்யப் படும் மீன் வடிகட்டிகள் மிகவும் சிறந்தது. மேற் கூறிய பயன்களை தாண்டி தேங்காய் நார் செடிகள்/தாவரங்கள் சாகுபடிகளிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக வீட்டில் சட்டியில் வளர்க்கப்படும் தாவரங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவும். எப்படி என்றால், பொதுவாக ஒரு தாவரத்தை ஒரு மணலால் நிரப்பப்பட்ட ஒரு சட்டியில் புதைத்து வளர்த்து வருவோம். அப்படி செய்யும் முன், தேங்காய் நார்களைக் கொண்டு செய்யப்பட தொகுதிகளை (ப்ளாக்ஸ்) முதலில் சட்டியில் வைக்க வேண்டும், (அல்லது முழுவதும் தேங்காய் நார் கொண்டு உருவாக்கப் படும் சட்டிகளை பயன் படுத்தலாம்) பிறகு அதன் மணல் இட்டு நிரப்பி செடியை நட்டு நீர் பாய்ச்சி வரலாம். இதனால் என்ன நன்மை என்றால் பொதுவாக நாம் மற்ற சட்டிகளில் செடி நட்டு நீர் பாய்ச்சினால் அதிகமாக பாய்ச்சிய தண்ணீர் வெளியேறி விடும். ஆனால் இந்த முறையில் தேங்காய் நார் அந்த நீரை தாம் உரிந்துக் கொள்ளும். மேலும் மண்ணின் ஈரப்பதம் குறைகையில் அஃது தான் சேமித்து வைத்த நீரைக் கொடுக்கும். இது மண் எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுவதால் தாவரங்கள் மிக அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல் விரைவில் வளரும்.
11 ஆம் நூற்றாண்டில் தேங்காய் நார்கள் கப்பல் கயிறுகளாய் பயன் படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய உலகத்தில் இவை அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றின் பெருமையை வெளி நாட்டினர் அறிந்து அவற்றை தமது பயன் பாட்டில் பெரிதும் வைத்துள்ளனர். அதன் உற்பத்தியையே அதிகம் செய்யும் நாம் அவற்றின் பயனை பெரிதும் அறியாமல் இருக்கின்றோம். இனியாவது இந்த நிலை மாறுமா?