கருப்பு பூஞ்சை காளானின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
கருப்பு பூஞ்சை என்ற பெயரைக் கேட்டவுடன் இது ஒரு உணவுப்பொருள் அல்ல என்ற முடிவிற்கு வரவேண்டாம். இதனை சாப்பிடலாம் என்று சொன்னவுடன் உங்களில் சில உங்கள் முகத்தை சுழிக்கலாம்.
கருப்பு பூஞ்சை என்றால் என்ன?
ஆரிகுலேரியா பாலிட்ரிச்சா என்னும் கருப்பு பூஞ்சை என்பது ஒரு உண்ணக்கூடிய காட்டு காளான் ஆகும். இது பெரும்பாலும் சீனாவில் காணப்படும். இந்த வகை காளான்கள், கருப்பு பூஞ்சை மர காது அல்லது மேக காது காளான்கள் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் அவை மனித காதை போல் வடிவம் கொண்டிருக்கின்றன.
கருப்பு பூஞ்சை பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் அல்லது கருப்பு நிறத்தில் காணப்படும். மேலும் இவை மெல்லக் கூடிய அமைப்பைக் கொண்டிருக்கின்றன. இது மரங்களின் தண்டு மற்றும் விழுந்த மரத்துண்டுகள் மீது வளர்கிறது மற்றும் அவை இந்தியா, ஹவாய், நைஜீரியா மற்றும் பசிபிக் தீவுகள் போன்ற வெப்பமண்டல காலநிலைகள் கொண்ட நாடுகளில் நன்கு செழித்து வளர்கின்றன. பலநூறு ஆண்டுகளாக பாரம்பரிய சீன மருத்துவத்தில் கருப்பு பூஞ்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை மிகப் பெரிய ஊட்டச்சத்து நன்மைகள் கொண்ட ஒரு பொருளாகும்.
கருப்பு பூஞ்சையின் ஊட்டச்சத்து மதிப்பு:
100 கிராம் கருப்பு பூஞ்சையில் 14.8 கிராம் தண்ணீர் உள்ளது. 284Kcal ஆற்றல் உள்ளது. மேலும்,
9.25 கிராம் புரதம்
0.73 கிராம் கொழுப்பு
73.01 கிராம் கார்போஹைட்ரேட்
70.1 கிராம் நார்ச்சத்து
159 மிகி கால்சியம்
5.88 மிகி இரும்புசத்து
83 மிகி மெக்னீசியம்
184 மிகி பாஸ்போரஸ்
754 மிகி பொட்டாசியம்
35 மிகி சோடியம்
1.32 மிகி ஜின்க்
0.183 மிகி காப்பர்
1.951 மிகி மாங்கனீஸ்
43.4 மைக்ரோகிராம் செலீனியம்
- குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
கருப்பு பூஞ்சைகள் ப்ரீபயாடிக்குகளின் ஒரு நல்ல ஆதாரமாகும், இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கும் ஒரு வகை நார்ச்சத்து ஆகும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த குடல் பாக்டீரியாக்கள் ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது மற்றும் சீரான குடல் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது.
- டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நோய்களைத் தடுக்கிறது:
மருத்துவ காளான்களின் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சமைக்கப்படாத மற்றும் சமைத்த கருப்பு பூஞ்சை காளான்களை சாப்பிடுவது அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களைத் தடுப்பதில் நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது.
- கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது:
கருப்பு பூஞ்சை அதிக அளவு சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட்களைக் கொண்டுள்ளது, அவை எல்.டி.எல் என்னும் கெட்ட கொழுப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று மருத்துவ காளான்களின் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. இதன் காரணமாக இதய நோய் அபாயம் குறைகிறது.
- கல்லீரலைப் பாதுகாக்கிறது:
கருப்பு பூஞ்சை சில வகையான தீங்கு விளைவிக்கும் கூறுகளிலிருந்து கல்லீரலை பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. காய்ச்சல் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனமான அசிடமினோபனின் அதிகப்படியான மருந்தினால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலைத் மீட்டெடுக்க கருப்பு பூஞ்சை தூளை தண்ணீரில் கலந்து பருகுவது சிறந்த முறையில் உதவும் என்றும் ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது
- நாட்பட்ட மருத்துவ நிலைகளைத் தடுக்க உதவுகிறது:
கருப்பு பூஞ்சை ஆன்டிஆக்சிடெண்ட் கூறுகளால் நிரம்பியுள்ளது என்று ஆராய்ச்சி ஆய்வுகள் குறிப்பிடுகின்றன, இது ஃப்ரீ ரேடிகல்கள் என்னும் தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து உடல் அணுக்களைப் பாதுகாக்கிறது. புற்றுநோய், முடக்கு வாதம் மற்றும் இதய நோய் போன்ற நாட்பட்ட பாதிப்புகளைத் தடுக்க இது உதவுகிறது.
- பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கிறது:
கருப்பு பூஞ்சை காளான்கள் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. அவை, பாக்டீரியாவின் சில பாதிப்புகளைத் தடுக்க உதவும் என்று 2015 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி தெரிய வருகிறது. தொற்றுநோய்களுக்கு காரணமான ஈ.கோலி மற்றும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறனை இந்த காளான்கள் கொண்டுள்ளன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சைக் காளான்களின் பக்க விளைவுகள்:
பொதுவாக கருப்பு காளான்கள் உண்பதற்கு பாதுகாப்பான ஒரு பொருளாகும். அரிதாக சிலருக்கு குமட்டல், படை நோய், வீக்கம், அரிப்பு போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கலாம்.