அழகுக்கு அழகு சேர்க்க பேர்ல் பேஷியல்
மேக் அப் இல்லாமல் வெளியில் செல்ல தயங்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.
பிங்க் நிறம் பெண்களுக்கு பிடிக்கும். பெண்களே பிங்க்காக இருந்தால் எல்லோருக்கும் பிடிக்கும். காஷ்மீரி பெண்கள் பிங்க் நிறத்தில் மிகவும் அழகாக இருப்பார்கள். அவர்களை போன்ற நிறத்தில் இருப்பது என்பது நம் ஊர் பெண்களின் கனவில் தான் சாத்தியமாகும். அந்த அளவிற்கு மாசும் தூசும் சேர்ந்து நமது பெண்களின் முகத்தை சோர்வடைய செய்து, நிறமிழக்க வைக்கிறது. இதனை தடுக்க, வெயில் படும் பகுதிகளை மூடி, மூக மூடி அணிந்தவர்களாக தான் இந்நாட்களில் பெண்களில் வெளியில் தலை காட்டுகிறார்கள். இருந்தாலும், சரும பாதிப்புக்கு எந்த ஒரு குறையும் இல்லை.
மேக்கப் இல்லாமல் அழகான முகத்தை பெறுவது சாத்தியமா? ஆம்! சாத்தியம்தான். ஆனால் அதற்கு சில செயல்கள் செய்யதாக வேண்டும். அவற்றை மேற்கொள்ளும்போது முகத்திற்கு மேக் அப் இல்லாமல் அழகான பொலிவு கிடைக்கும். அதுவும் இயற்கையான முறையில்! அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். அது தான் பேர்ல் பேஷியல் ! இந்த பேர்ல் பேஷியலை அழகு நிலையங்களில் செய்து கொள்ளலாம். அழகு நிலையம் செல்ல நேரம் இல்லாதவர்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். இதன் முடிவு நிச்சயம் உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும். எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது சிறப்பாக பொருந்தும். முயற்சித்து முடிவை தெரிந்து கொள்ளுங்கள்.
பேர்ல் பேஷியல் செய்து கொள்வதில் சில நன்மைகள் உண்டு. அவை,
. சருமம் கருத்துபோவதை தடுக்கிறது.
. முகத்தை பொலிவாக்குகிறது.
. சருமத்தை மென்மையாக்குகிறது.
. இள வயதில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்கிறது.
. சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை அதிகரிக்கிறது.
. எண்ணெய் சருமத்தை ஆழமாக ஊடுருவி அழுக்கை அகற்றி, சரும சிதைவுகளை சீராக்குகிறது.
. பருக்களை குறைக்கிறது.
வீட்டிலேயே இந்த பேஷியலை செய்து கொள்வதால், பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை பற்றிய கவனம் இருக்கும். பண விரயத்தை குறைக்கலாம். சருமத்தில் முழுவதுமாக பிரயோகிக்கும் முன், சருமத்தின் ஒரு சிறு பகுதியில் சோதித்து விட்டு பின்பு பயன்படுத்தலாம். ஒவ்வாமை எதாவது ஏற்பட்டால் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
சரியான மற்றும் தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவது நல்ல விளைவை தரும்.
தேவையான பொருட்கள்:
. பேர்ல் க்ரீம்(நல்ல தரமான பிராண்ட் பொருளை வாங்கவும்)
. சுத்தமான பேர்ல் பவுடர்
. மிதமான க்ளென்சர்
. தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர்
. ஆலிவ் எண்ணெய்(வறண்ட சருமத்திற்கு)
. பிரெஷ் க்ரீம்
. தேன்
. முட்டை
. எலுமிச்சை சாறு
. உங்கள் சருமத்திற்கு ஏற்ற டோனர்
செய்முறை:
. முகத்தை க்ளென்சரால் நன்றாக கழுவி கொள்ளவும். முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கவும். மேக்கப் முழுவதும் போகும்படி நன்றாக கழுவவும்.
. தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் பேர்ல் பவுடர் சேர்த்து கலக்கவும். இதனை முகத்தில் தடவவும். வறண்ட சருமமாக இருப்பின், இந்த கலவையுடன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம். 10 நிமிடங்கள் நன்றாக மென்மையாக மசாஜ் செய்யவும்.
. பிறகு முகத்தை டிஷ்யூ பேப்பரால் துடைத்து விட்டு, பேர்ல் க்ரீமை தடவவும். 10 நிமிடம் கழித்து , முகத்தை கழுவவும்.
. முகத்தில் கட்டிகள் அல்லது பருக்கள் இருந்தால், பிரெஷ் க்ரீமுடன், பேர்ல் பவுடரை சேர்த்து ஒரு மாஸ்க் போல் முகத்தில் போடலாம். அல்லது, பேர்ல் பவுடருடன் தேன், முட்டை, எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவலாம். மாஸ்க் காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். மென்மையான துண்டு கொண்டு முகத்தில் உள்ள நீரை ஒத்தி எடுக்கவும்.
. பிறகு டோனர் பயன்படுத்தலாம் அல்லது ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைக்கலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
பேர்ல் பேஷியல் செய்து கொள்ளும்போது சில விஷயத்தை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். அவை பின்வருமாறு
பேர்ல் பவுடர் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதனால் முதலில் சருமத்தின் ஒரு சிறு பகுதியில் இதனை தடவி சோதித்து விட்டு பின்பு முகத்திற்கு பயன்படுத்தவேண்டும். எதாவது சரும பிரச்சனை ஏற்படுமாயின் இந்த சிகிச்சையை தொடராமல் இருப்பது நலம்.
1. எண்ணெய் சருமம் அல்லது வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பேர்ல் பவுடர் ஒவ்வாமையை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
2. 4-6 வாரங்களுக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.
3. க்ளென்சிங் மட்டும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம். இதனால் முகத்தில் அழுக்கு சேராமல் இருக்கும்.
4. மாஸ்க் போடுவது, நீராவி பிடிப்பது, மாய்ஸ்ச்சரைஸ் செய்வது போன்றவை 4-6 வாரங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
5. முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் மென்மையாக மசாஜ் செய்யவும். சருமத்தை கடினமாக கையாளும்போது சுருக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
6. மசாஜ் செய்யும் போது சூழல் வடிவில் மசாஜ் செய்யவும்.
7. கீழிருந்து மேலாகவும் மசாஜ் செய்யவும்.
8. பேஷியல் செய்தபிறகு சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும். அதனால் சூரிய ஒளி படும்போது சரும பாதிப்புகள் உண்டாகும் . எனவே நேரடியாக சூரிய ஒளி படாமல் உங்கள் முகத்தை காப்பது நல்லது. பேஷியல் செய்தவுடன் வெளியில் செல்லாமல் இருப்பது சருமத்திற்கு நன்மை தரும்.
அழகுநிலையத்தில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து இந்த பேஷியலை செய்து கொள்வதை விட வீட்டில் நிதானமாக ஓய்வாக இதனை செய்து கொள்ளுங்கள். வீட்டில் 2 பெண்கள் இருந்தால் மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் இதனை செய்து அன்பையும் பரிமாறிக்கொள்ளலாம். அழகையும் பரிமாறிக்கொள்ளலாம்.