ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்
நீங்கள் ஒற்றைப் பெற்றோரா? நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள்
வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். பெற்றோராக மாறுவதற்கு முன் பெற்றோராக மாறியதற்கு பின் என்று இரண்டு வாழ்க்கைப் பயணமும் வெவ்வேறாக இருக்கும். பெற்றோராக இருப்பது ஒரு சவாலான காரியமாகும். ஒரு குழந்தை பிறந்து, தவழ்ந்து, நடந்து, பதின் பருவம் கடந்து, பெரியவனாகும் வரை அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் ஒவ்வொரு பெற்றோரும் வளர்ந்து கொன்டே வருகின்றனர். அந்தக் குழந்தை கற்றுக் கொள்ளும் விஷயங்களை போல் பெற்றோரும் பல விஷயங்களை கற்றுக் கொன்டே வருகின்றனர்.
ஒரு குழந்தை பிறப்பதற்கு ஆண்-பெண் இருவரும் காரணமாக இருக்கும்போது அந்தக் குழந்தை பிறந்து வளரும்போதும் இருவரும் இணைந்து வளர்ப்பது நல்லது. ஆனால் வாழ்க்கை பயணத்தில் ஒருவருடன் ஒருவரின் உறவு சரியான பாதையில் பயணிக்காத பட்சத்தில் அவர்கள் இருவரும் தங்கள் உறவை முறித்துக் கொண்டு தனியாக வாழ விரும்புகின்றனர். இவர்களுக்கிடையில் அந்தக் குழந்தை பாதிக்கப்படுகிறது.
தாய் - தந்தை இருவரில் ஒருவரிடம் அந்தக் குழந்தை வளரும் சூழ்நிலை உண்டாகிறது. குழந்தை வளர்ப்பில் ஒற்றைப் பெற்றோரின் நிலை இன்னும் கடினமாகிறது. நிதி நிலையை சமாளிப்பதும் , வீட்டைப் பார்த்துக் கொள்வதும், குழந்தையை வளர்ப்பதும் என்று எல்லா சவால்களையும் ஒருவர் மட்டுமே எதிர் கொள்ளும் நிலை உண்டாகிறது. இப்படி ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்கும் ஒரு பெரிய பொறுப்பைக் கொண்டிருக்கும் ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை நாம் இந்த பதிவில் காணலாம்.
சிறப்பான குடும்பம்:
பொதுவாக குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படும் போது மழலையர் வகுப்பில் ஆசிரியர்கள் குடும்பம் பற்றிய வரைபடங்களை காட்டி அவர்களுக்குப் பாடம் எடுக்கப்படுவது வழக்கம். அந்த வரைபடத்தில் ஒரு குடும்பம் என்பது தாய், தந்தை, குழந்தை ஆகியோரைக் கொண்டது என்று குறிப்பிட்டிருக்கும். ஆனால் தன்னுடைய குடும்பத்தில் அவ்வாறு இல்லையே என்று குழந்தைகள் குழப்பம் அடையலாம். அந்த தருணத்தில் உங்கள் குழந்தையை நீங்கள் சமாதானம் செய்யலாம். குடும்ப அமைப்பு என்பது யார் அந்த குடும்பத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததல்ல. யாரெல்லாம் அன்பாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று உணர்த்தலாம். இவர்களுடைய குடும்பம் வித்தியாசமானது அல்ல சிறப்பானது என்று அவர்களுக்கு கூறலாம்.
நிதி சார்ந்த பிரச்சனைகள்:
ஒவ்வொரு ஒற்றைப் பெற்றோருக்கும் நிதி நிலைமை ஒரு தலையாய பிரச்சனையாகும். தாய்-தந்தை என்று இரண்டு பேரும் இருக்கும் குடும்பத்தில் , இருவரும் சம்பாதிக்கும் சூழ்நிலையில் வாழ்க்கை வண்டி மிகவும் மென்மையாக செல்லமுடியும். ஆனால் ஒற்றைப் பெற்றோர் என்று வரும்போது, ஒருவரின் வருமானத்திற்குள் வாழ்க்கையை சுருக்கிக் கொள்ளக் கூடிய நிலை உண்டாகும். உங்களுக்கு நிதி ரீதியாக உதவக்கூடிய நபர் இல்லை என்ற அந்த எண்ணம் உங்கள் செலவுகளை இழுத்து பிடிக்க வைக்கும்.
குடும்பத்திற்கான நேரம்:
இந்த பிரச்சனை உடனடியாக தொடங்குவதில்லை. குழந்தைகள் வளரும்போது காலப்போக்கில் இதற்கான பாதிப்பு வெளிவரும். குழந்தைகள் உளவியல் ரீதியாக வளர்ச்சி பெறுவதற்கு குடும்பநேரம் பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு குழந்தை வளரும் வேளையில் தன்னுடைய மழலைப் பருவத்தை நினைத்துப் பார்க்கும்போது சந்தோசம், விளையாட்டு, இன்பம் போன்றவை அவர்கள் கண்ணில் தெரிய வேண்டும். ஆகவே குழந்தை பருவத்தில் உங்கள் பிள்ளைகளை தினமும் வெளியில் அழைத்துச் சென்று அவர்களுடன் உங்கள் நேரத்தை செலவிட முயற்சியுங்கள். அன்றைய நாளில் உங்கள் குழந்தையின் சந்தோஷமான மற்றும் சோகமான தருணங்களைப் பற்றி அவர்களிடம் உரையாடுங்கள். இதனைத் தொடர்ந்து செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதால் உங்கள் குழந்தைக்கு குடும்ப அமைப்பின் மீது ஒரு நம்பிக்கை உண்டாகும். குழந்தையுடன் நேரம் செலவிடுவதால் உங்களுக்கும் மனரீதியான அழுத்தத்தில் இருந்து விடுபடமுடியும்.
புதிய துணையை தேர்ந்தெடுப்பதில் அசௌகரியம்:
மனிதன் ஒரு சமூக விலங்கு, காதலுக்குள் நுழைவதும், வெளியேறுவதும் அநேகமாக வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். உங்களைச் சார்ந்து ஒரு குழந்தை இருக்கும்பட்சத்தில் மற்றொரு நபரிடம் காதல் கொள்வது ஒரு பிரச்சனையாக உருவாகலாம். ஆனால் ஒற்றைப் பெற்றோரும் மனிதர்கள்தான். எனவே அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. ஆனால் நீங்கள் விரும்பும் ஒருவர் உங்கள் வாழ்க்கைத் துணையாக மாறுவதற்கு உங்கள் குழந்தையின் அனுமதியும் தேவைப்படுகிறது. சிலநேரங்களில் இந்தப் பிரச்சனையே உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு இடைவெளியை உண்டாக்கலாம். இதனை மிகவும் நிதானமாக கையாள வேண்டும்.
முதலில் நீங்கள் துணையாக ஏற்க விரும்பும் நபரிடம் உங்கள் குழந்தையை அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் இருவரையும் பழக விடுங்கள் . அவருடன் இருப்பதை உங்கள் குழந்தை சௌகரியமாக உணர்கிறாரா என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையிடம் உங்கள் உறவு குறித்து ரகசியம் காக்க வேண்டாம். மூன்றாவதாக வேறொரு நபரிடமிருந்து உங்கள் உறவு குறித்து அறிந்துகொள்ளும்போது, உங்கள் குழந்தைக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்படலாம். அந்த நபருடன் உங்கள் குழந்தை எளிதாக பழகும் நிலையில் உங்கள் உறவுகுறித்து உங்கள் பிள்ளளையிடம் வெளிப்படுத்துங்கள். இது உங்கள் பிள்ளையிடம் ஒரு சிறு தடுமாற்றத்தை உண்டாக்கினாலும் நீங்கள் அவரிடம் எதையும் மறைக்காமல் இருக்கிறீர்கள் என்ற நிலை புரியும்போது இந்த தடுமாற்றம் விலகும்.
ஒற்றைப்பெற்றோர் வாழ்க்கை ஒரு சுமையான வாழ்க்கை என்று சொல்லமுடியாது . அதே நேரத்தில் மிகவும் கவனமாக கையாள வேண்டிய வாழ்க்கை என்பது மறுக்கமுடியாது