இயற்கை வழிமுறைகள் மூலம் முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை களைதல்
பெண்களின் முகத்திலுள்ள தேவையற்ற முடியை அகற்ற சில குறிப்புகள் பற்றி காண்போம்.
பெண்களின் சருமம் வழுவழுப்பாக இருப்பதை தான் எல்லா பெண்களும் விரும்புகின்றனர். பெண்களின் உடலில் தலையைத் தவிர மற்ற இடங்களில் இருக்கும் முடி, அவர்களின் பெண்மையை பறைசாற்றுவதாக இல்லை என்று பலரும் நம்புகின்றனர். ஆகவே இந்த தேவையற்ற முடிகளை அகற்றுவது இன்றியமையாததாகிறது. இது மிகக் கடினமான காரியம் இல்லை. எளிய முறையில் இந்த முடிகளை நம்மால் அகற்ற முடியும். இதற்கான பொதுவான சில வழிமுறைகளைப் பற்றி இப்போது காண்போம்.
1. ப்ளீச்சிங்
முகத்திற்கு பேஷியல் செய்யும்போது ப்ளீச் செய்வதால் முகத்தில் உள்ள முடிகள் நிறம் மாறி, அதிக கவனிப்புக்குள்ளாவதில்லை. ப்ளீச்சிங் க்ரீம் பல் வேறு ஒப்பனை பொருட்களுக்கான கடைகள் மற்றும் சந்தைகளில் விற்கப்படுகின்றன. அதன் உறையில் கூறப்பட்டுள்ள முறையில் உங்கள் உடலின் சிறு பகுதியில் பரிசோதனை செய்து, அதன் மூலம் அந்த பகுதி சிவந்து போவது, எரிச்சல் ஏற்படுவது போன்ற அனுபவம் இல்லாமல் இருக்குமாயின் அந்த பொருளை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம். மிகவும் மெல்லிய முடிகளை மட்டுமே அகற்றும் தன்மை இந்த க்ரீமுக்கு உண்டு. அடர்ந்த முடிகளை இந்த க்ரீம் நீக்க முடியாது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் ப்ளீச் செய்வதை தவிர்க்கவும்.
2. ஷேவிங் :
தேவையற்ற முடிகளை அகற்ற மிகவும் விரைவான மற்றும் எளிதான வழி ஷேவிங். ஆனால் பெண்கள் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற இந்த வழியை தவிர்க்க வேண்டும். அக்குள் முடி மற்றும் கை கால்களில் இருக்கும் முடிகளை அகற்ற மட்டுமே ஷேவிங் சிறப்பானது. வறண்டு இருக்கும் பகுதிகளில் எப்போதும் ஷேவ் செய்வதை தவிர்க்க வேண்டும். ஷேவ் செய்ய வேண்டிய பகுதியில் முதலில் மாயச்ச்சரைசெர் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு கீழிருந்து மேலாக ஷேவ் செய்ய வேண்டும். உங்கள் முடி வளரும் திசையில் ஷேவ் செய்ய வேண்டும். கூர்மையான ப்ளேடை பயன்படுத்துவதால் ரேசரால் உண்டாகும் சிராய்ப்பு தடுக்கப்படும். ஷேவ் செய்யும் இடங்களில் துரிதமாக அடுத்த சில நாட்களில் மறுபடி முடி முளைத்து விடும். எனவே அடிக்கடி ஷேவ் செய்ய வேண்டிய அவசியம் இருப்பது இதன் அனுகுலமற்ற செயல்பாடாகும்.
3. த்ரெட்டிங் :
கிழக்கத்திய நாடுகளில் முடிகளை அகற்ற தோன்றிய பழமையான முறை த்ரெட்டிங் என்று விக்கி பீடியா கூறுகிறது. சமீப காலங்களில் மேற்கத்திய நாடுகளில் இந்த முறை பிரபலமானது. தேவையற்ற முடிகளைக் களைய எளிமையான காட்டன் நூல் மட்டுமே போதுமானது. ஆனால் அழகியல் நிபுணர் அல்லது இதற்கான முறையான பயிற்சி பெற்ற நிபுணர் மட்டுமே இதனை செய்ய முடியும். சருமம் சிவந்து போவது, வீக்கம் உண்டாவது, சரும நிறத்தில் மாற்றம் உண்டாவது போன்றவை இதன் பக்க விளைவுகளாகும்.
4. ட்வீசிங் :
சிறிய பகுதி முடிகளை அகற்ற மட்டுமே ட்வீசிங் சிறந்தது. மற்றபடி அதிக முடிகளை அகற்ற இயலாது. சந்தையில் கிடைக்கும் ட்வீசர் மூலம் ஒரு நேரத்தில் ஒரு முடியை மட்டுமே அகற்ற முடியும். உதடுகளுக்கு மேல் பகுதி மற்றும் கண் புருவங்கள் போன்றவற்றை இதன் மூலம் சரி செய்ய முடியும். ட்வீசிங் செய்வது மிகவும் வலி நிறைந்தது. மேலும் அடிக்கடி ட்வீசிங் செய்வதால் அந்த இடத்தில தழும்பு உண்டாகலாம். ட்வீசிங் செய்வதற்கு முன்னும் பின்னும் அந்த இடத்தில் ஐஸ் கட்டி மூலம் ஒத்தடம் கொடுப்பதால் வலி குறைகிறது. மரு மற்றும் மச்சத்தில் இருக்கும் முடியை பிடுங்கக் கூடாது.
5. வேக்சிங் :
இந்த சிகிச்சைக்கென பிரத்யேகமான ரெடிமேட் வாக்ஸ் சந்தையில் கிடைக்கின்றன. வேக்சிங் செய்ய வேண்டிய இடங்களை முதலில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அந்த பாக்கெட்டில் உள்ள குறிப்பின்படி, வாக்ஸ் முழுவதையும் முடி வளரும் திசையில் உடலில் சமமாக பூசிக் கொள்ளவும். வாக்ஸ் தடவிய இடத்தில் ஒரு காட்டன் துணியை நீளமாக வைத்து அழுத்தி கொள்ளவும். முடி வளரும் திசைக்கு எதிர் திசையில் அந்த காட்டன் துணியை பிடித்து வேகமாக இழுக்கவும். இது மிகவும் வலி நிறைந்த வழிமுறையாகும். ஆனால் ஷேவிங் செய்யும் நாட்களை விட நீண்ட நாட்கள் முடியின்றி இருக்கலாம். சந்தையில் கிடைக்கும் ரெடிமேட் வாக்ஸ் ஸ்ட்ரிப்பை வாங்கி பயன்படுத்தலாம். இவை தடவுவதற்கு எளிமையாக இருக்கும். மேலும் இவற்றில் மாயச்ச்சரைசெர் சேர்க்கப்பட்டிருக்கும். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் வேக்சிங் செய்வதால் உடலில் வீக்கம் அல்லது கட்டி உண்டாகலாம்.
6. முடிகளை அகற்றும் வேதிப்பொருள்:
முடிகளில் உள்ள கேரடினை கரைக்கும் ரசாயனம் முடிகளை நீக்கும் கிரீம்களில் உண்டு. எந்த ஒரு க்ரீமையும் பயன்படுத்துவதற்கு முன், உடலின் சிறு பகுதியில் சோதனை செய்து பின் பயன்படுத்தவும். முடியை அகற்றும் இடத்தை சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும். ஒரு துண்டால் அந்த பகுதியை துடைத்து காய வைத்துக் கொள்ளவும். இந்த பேக்குடன் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்பாட்டுலா மூலம் கூறப்பட்டுள்ள முறையில் க்ரீமை பயன்படுத்தவும். முடிகளை அகற்றிய பின், ஒரு ஈர துணியால் க்ரீமை அகற்றி விடவும். தண்ணீரால் அந்த இடத்தை மறுபடி சுத்தம் செய்து பின் துடைத்து காய வைக்கவும். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் இந்த க்ரீம்களை தவிர்ப்பது நல்லது என்பது கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இத்தகைய கிரீம்கள் மூலம் அக்குள், கை மற்றும் கால் முடிகளை மட்டுமே அகற்ற வேண்டும்.
இயற்கை தீர்வுகள் / எளிய குறிப்புகள் மூல தேவையற்ற முடிகளை நீக்கலாம்:
1. எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச். கடலை மாவு, கோதுமை மாவு, பால் க்ரீம், சில துளிகள் எலுமிச்சை சாறு , கடுகு எண்ணெய், மற்றும் தண்ணீரை ஒன்றாகச் சேர்த்து கலக்கவும். இந்த விழுதை முடியுள்ள இடத்தில் சுழல் வடிவத்தில் தேய்க்கவும். பின்பு கழுவி விடவும். இதனை தொடர்ந்து செய்து வரவும். மிக இளம் வயதில் இருந்தே இந்த வழிமுறையை பின்பற்றலாம் . அந்த பருவத்தில் முடிகள் மிகவும் மெலிதாக மற்றும் மென்மையாக இருக்கும். ஆகவே விரைந்து பலன் பெறலாம்.
2. சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு அடர்த்தியான கலவை தயார் செய்து கொள்ளவும். இதனை முடியுள்ள இடங்களில் தடவி காய விடவும். பின்பு கழுவி விடவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்வதால் முடி வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
3. பார்லி பொடி இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு பால் , சில துளி எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து ஒரு பேஸ்ட் செய்து கொள்ளவும். இதனை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடம் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் முகத்தில் இருக்கும் சிறு சிறு முடிகள் உதிர்ந்து விடும்.
4. பயத்தம் பருப்பு பொடி, வேப்பிலை பொடி, கஸ்தூரி மஞ்சள் தூள், குப்பைமேனி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளவும். இதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். உங்கள் சருமத்தில் இந்த விழுதை தடவி 15-20 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு மென்மையாக முடி வளர்ச்சி இருக்கும் திசையில் ஸ்க்ரப் செய்யவும். இதனால் முடிகள் உதிர்ந்து விடும்.
இந்த இயற்கை தீர்வுகளை தொடர்ந்து பின்பற்றுவதால் ஒரு காலகட்டத்தில் முடி வளர்ச்சி முற்றிலும் நின்று விடும். தாடை மற்றும் உதடுகளின் மேல் பகுதியில் இருக்கும் சிறு முடிகள் கூட இந்த முறையில் உதிர்ந்து விடும்.
எலேக்ட்ரோலிசிஸ் என்னும் மின்னாற்பகுப்பு மற்றும் லேசர் சிகிச்சைகள் மூலம் சிறந்த முறையில் முடிகளை அகற்ற முடியும். ஆனால் அதற்கான லைசன்ஸ் பெற்ற நிபுணர்களிடம் சென்று இதனை செய்து கொள்வது நல்லது.