புத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்
இந்த புதிய ஆண்டு நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்!
புத்தாண்டு தொடங்கவுள்ளது. நம் அனைவருக்கும் மற்றும் ஒரு புதிய ஆண்டு. இந்த ஆண்டு அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று அனைவரின் இல்லமும் இன்பத்தில் தழைக்கட்டும்! நாட்டில் அமைதியும் வெற்றியும் ஓங்கட்டும்!
பொதுவாக ஒவ்வொரு புத்தாண்டில் நம்மில் பலர் சில தீர்மானங்கள் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கலாம். இனிமேல் பொய் பேசுவதில்லை, கோபப்படுவதில்லை, மது அருந்துவதில்லை என்பது போன்ற வாழ்வியல் சார்ந்த தீர்மானங்கள், பணம், உடல் எடை, ஆரோக்கியம் போன்றவை சார்ந்த தீர்மானங்கள் ஆகியவை இவற்றுள் அடங்கும். ஆனால் வீடு சார்ந்த தீர்மானங்களை நீங்கள் எடுத்துக் கொண்டதுண்டா? இந்த புத்தாண்டில் வீடு குறித்த சில தீர்மானங்களை இப்போது காண்போம்.
ஒவ்வொரு புத்தாண்டும் சில தீர்மானங்களுடன் தொடங்குகிறது. இந்த ஆண்டும், பெரிய சந்தோஷங்கள், ஆச்சர்யங்கள் ஆகியவற்றுக்கு புத்தான்டு தொடங்கவிருக்கிறது. இதில் உங்கள் இல்லத்தை நீங்கள் இணைத்துக் கொள்ளுங்கள். அலங்காரத்திலிருந்து தூய்மை வரை, மற்றும் பராமரிப்பு முதல் முன்னேற்றம் வரை, உங்கள் வீட்டிற்கான புத்தாண்டு தீர்மானங்களைத் தொடங்குவதற்கு முன் அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்திருப்பது அவசியம். இது உங்கள் வீட்டை சீராக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையிலிருந்து தேவையற்ற ஒழுங்கீனத்தையும் களைந்துவிடும்.
உங்கள் வீட்டிற்கான முதல் ஐந்து புத்தாண்டு தீர்மானங்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். உங்கள் வீடு குறித்த இதர திட்டங்களை நீங்கள் யோசிக்கும்போது இந்த தீர்மானங்களையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த தீர்மானங்கள் உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தும்.
முறைப்படுத்துங்கள்:
புத்தான்டு தீர்மானங்களில் மிக முக்கியமானது உங்கள் வீட்டை முறைப்படுத்துவது. உங்கள் அன்றாட பயன்பாட்டு பொருட்களை நெறிப்படுத்தி ஒழுங்கமைத்து வைக்கவும். உங்கள் சமையலறை , படுக்கையறை போன்ற இடங்களில் வைத்திருக்கும் தேவையற்ற பொருட்களை வெளியேற்றி தேவையான பொருட்களை மட்டும் சரியான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் இல்லம் எளிமையாக சுவாசிக்க உதவுங்கள்.
ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றுங்கள்:
நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டுவைத்த பணிகளை முடிக்க முயற்சியுங்கள். உங்கள் அலமாரியை ஒழுங்குபடுத்துங்கள். நீங்கள் திட்டமிட்ட பணிகளை அவ்வப்போது நிறைவேற்றுங்கள். ஒவ்வொரு மாதமும் முதலில் சிறுசிறு வேலைகளை முடித்துவிட்டு பின்பு பெரிய பெரிய வேலைகளை திட்டமிடுங்கள்
பாதுகாப்பை பரிசோதியுங்கள்:
உங்கள் வீட்டின் பாதுகாப்பை பற்றி ஆலோசியுங்கள். மின்சார சாதனம், பூட்டு , கம்பிகள், ஒயர்கள் ஆகியவற்றை சரிபார்த்து, அவை பழையதாகவோ அல்லது நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டாலோ சரி செய்யுங்கள். எந்த ஒரு செயலுக்கும் தாமதமாக வருந்துவதைவிட, முன்பே சரிபார்த்துக் கொள்வது நல்லது.
பட்ஜெட்:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு. என்று விழாக்கோலமாக இருப்பதால் பட்ஜெட் ராக்கெட் போல் உயர்ந்து இருக்கலாம். ஆகவே உங்கள் பொருளாதாரத்தின் மேல் அதிக கவனம் செலுத்துங்கள். தாட்பூட் என்று மேலும் செலவுகளை இழுத்துவிட வேண்டாம். மின்சார கட்டணங்களைக் குறைத்துக் கொள்ள முயற்சியுங்கள். தேவையற்ற மின் உபகரணங்களை அணைத்து வைப்பது , பல்புகளை மாற்றுவது, தேவையில்லாத இடங்களில் ஒளிரும் விளக்குகளை அணைத்து வைப்பது போன்றவை மின் கட்டணங்களைக் குறைக்க உதவும்.
பராமரிப்பு மற்றும் சுத்தம்:
வீட்டை சுத்தம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் திட்டமிடுவது நல்லது. இது உங்களுக்கு சலிப்பைத் தந்தாலும் பின்னர் யோசிக்கும்போது நன்மையைத் தரும். உங்கள் நேரத்திற்கு ஏற்ப இதற்கான பணிகளை திட்டமிடுங்கள். வாரத்திற்கு ஒருமுறை, 15 நாட்களுக்கு ஒருமுறை, மாதத்திற்கு ஒருமுறை என்று உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான பணிகளை திட்டமிடுங்கள். ஒருமுறை திட்டமிட்டால் அதன்படி தவறாமல் நடந்து கொள்ளுங்கள்.
இந்த எளிய புத்தாண்டு தீர்மானங்கள் உங்கள் வீட்டை இன்னும் கொஞ்சம் அழகாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும்.
உங்கள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்!