சிகிச்சை அளிக்கப்படாத ஆஸ்துமாவால் உண்டாகும் அபாயங்கள்
ஆஸ்துமா என்பது நுரையீரல் சார்ந்த ஒரு கோளாறு.
ஆஸ்துமா என்பது அழற்சியுடன் தொடர்புடைய ஒரு நாட்பட்ட நுரையீரல் நோய் ஆகும். ஆஸ்துமாவால் வீசிங், மார்பு இறுக்கம், மூச்சுத்திணறல், இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எந்த வயதினரையும் ஆஸ்துமா பாதிக்கலாம். குறிப்பாக இந்த பாதிப்பு வளரும் பிள்ளைகளிடம் அதிகம் உள்ளது. ஆஸ்துமா பாதிப்பிற்கு எந்த ஒரு நிரந்தர தீர்வும் இல்லாமல் இருந்தாலும், சில நவீன சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் எளிதாக இந்த பாதிப்பை நிர்வகிக்க முடியும்.
சில நேரங்களில் ஆஸ்துமா பாதிப்பிற்கான அறிகுறிகள் மிதமானதாக இருந்தால், குறைவான சிகிச்சை அளிப்பதால் தானாகவே சரியாகி விடலாம். ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டவுடன் தொடக்கத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையேல், இதன் விளைவுகள் மோசமாகவும் மாறலாம் , சில நேரத்தில் அவசர கண்காணிப்பும் தேவைப்படலாம். ஆஸ்துமா சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், சில பொதுவான அபாயங்கள் ஏற்பட நேரலாம். அவற்றைப் பற்றியது தான் இந்தப் பதிவு. வாருங்கள், அந்த பாதிப்புகளைப் பற்றி நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.
தூக்கம் தொலைவது:
ஆஸ்துமா அறிகுறிகள் எந்த நேரத்திலும் ஆஸ்துமா நோயாளிகளை பாதிக்கலாம். குறிப்பாக இரவு நேரங்களில் இருமல் அவர்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கலாம். இதனால் அவர்கள் தூக்கத்தில் குறைபாடு உண்டாகலாம். காலப்போக்கில், தூக்க இழப்பு பல்வேறு தீவிர பாதிப்புகளுக்கு வழி வகுக்கும். நாட்பட்ட தூக்க குறைபாடு காரணமாக, அலுவலகம் அல்லது பள்ளியில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்படலாம். குறிப்பாக வாகனம் ஓட்டும்போது, இயந்திரங்களில் பணி புரியும்போது தூக்க குறைபாடு காரணமாக உண்டாகும் பாதிப்பு விபரீதமாக இருக்கலாம்.
உடல் செயல்பாடுகள்:
ஆஸ்துமா பாதிப்பு காரணமாக இதயம் தொடர்பான உடற்பயிற்சிகள் அல்லது விளையாட்டுகள் போன்றவற்றை சிலர் தவிர்க்கலாம். இப்படி உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால், உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, மனச்சோர்வு, அல்லது உளவியல் ரீதியான அழுத்தம் போன்றவை ஏற்படலாம். உங்கள் உடல் எடையும் அதிகரிக்கலாம்.
உற்பத்தி :
ஆஸ்துமா பாதிப்பு அதிகமாகும்போது, பள்ளி அல்லது அலுவலகம் செல்ல முடியாத நிலை உண்டாகலாம். பள்ளிகளுக்கு குழந்தைகள் அதிக விடுப்பு எடுக்க முக்கிய காரணமாக ஆஸ்துமா பாதிப்பு உள்ளதாக அறியப்படுகிறது.
காற்று பாதை மறுவடிவாக்கம் :
சில மக்களுக்கு, நீடித்த ஆஸ்துமா பாதிப்பால், சுவாசப் பாதையில் நாட்பட்ட அழற்சி ஏற்படலாம். இதற்கான சரியான சிகிச்சை அளிக்காத பட்சத்தில், சுவாச பாதையில் நிரந்தர வடிவ மாற்றம் ஏற்படலாம். இதனை சுவாச பாதை மறுவடிவாக்கம் என்று கூறலாம். இந்த நிலையால், சுவாச பாதையில் உள்ள அணுக்கள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பு முற்றிலும் மாற்றம் பெறலாம் . இந்த மாற்றத்தின் காரணமாக, நுரையீரல் செயல்பாடுகளில் நிரந்தர இழப்பு அல்லது நாட்பட்ட இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
இறப்பு:
தீவிர ஆஸ்துமா பாதிப்பு, சுவாச பாதையை சுருக்குகிறது. இதனால் சுவாச உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டு, இறப்பும் சாத்தியமாகலாம். ஆகவே ஆஸ்துமா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நல்லது.