தினமும் ஊறுகாய் சாப்பிடலாமா?
இந்திய உணவுகளில் ஊறுகாய்க்கு தனி இடம் உண்டு.
விருந்துகளில் தவிர்க்க முடியாத ஒரு உணவாக இன்றும் இருந்து வருவது ஊறுகாய். வாயில் எச்சில் ஊற வைக்கும் இதன் சுவை, விருந்து உணவுகளில் எல்லாவற்றையும் விஞ்சி விடும். சாதம், சப்பாத்தி, தோசை, பிரட் என்று எல்லா வித உணவுடனும் ஊறுகாயை சேர்த்து சாப்பிடும் பழக்கம் நம் மக்களிடையே உள்ளது. சிலர் வெறும் வாயில் கூட ஊறுகாயை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். ஊறுகாயை சாதத்தில் பிசைந்து சாப்பிடும் ஊறுகாய் பித்தர்களும் கூட இருக்கிறார்கள். கேரட், மாங்காய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், நார்த்தங்காய், எலுமிச்சை என்று ஊறுகாய்க்கு பயன்படுத்தும் காய்கறிகளை சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் சொல்லப்போனால் மீன் மற்றும் சிக்கனில் கூட நம் இந்தியர்கள் ஊறுகாய் செய்யத் தொடங்கி விட்டனர். இப்படி இந்திய உணவுகளில் எல்லாமுமாய் இருக்கும் ஊறுகாயை சிலர் தங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு என்று எல்லா நேரத்திலும் நாக்கில் எச்சில் சொட்டச் சொட்ட சுவைத்து வருகின்றனர். ஊறுகாயின் காரம் மற்றும் புளிப்பு சுவை நாக்கை அதற்கு அடிமையாக வைத்திருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை.
ஆனால் இப்படி எல்லா வேளைகளிலும் , தினமும் ஊறுகாய் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா? ஊறுகாய் புளிப்பு சுவை கொண்ட ஒரு உணவு பதார்த்தம் என்பதால் குடலுக்கு நல்லது என்று ஒரு சிலர் கூறலாம். இந்திய ஊறுகாயில் பெருமளவு சோடியம் உள்ளது. இதற்குக் கரணம் நாம் ஊறுகாயில் பயன்படுத்தும் அதிகளவு உப்பு. மேலும் பூஞ்சை பாதிப்பில் இருந்து தடுக்கவும், நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்கவும், ஊறுகாயில் அதிகமான எண்ணெய் சேர்க்கப்படுகிறது. உப்பு மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பொதுவான உண்மையாகும். இதனால் கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகரித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. இதற்குக் கரணம், ஊறுகாயில் , ஹய்ட்ரஜென் ஏற்றப்பட்ட அல்லது ட்ரான்ஸ் கொழுப்பு அடங்கிய எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மோசமான வகை கொழுப்பாகும்.
உடலில் LDL எனப்படும் லோ டென்சிட்டி லிப்போ புரத கொலஸ்ட்ரால் அதிகரிப்பிற்கு ட்ரான்ஸ் கொழுப்பு தான் பொறுப்பாகும். இதனால் இதய கோளாறுகள், உடல் பருமன் மற்றும் இதர பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. நம் ஊறுகாயின் அதிக உப்பு உள்ளடக்கம் உடலுக்கு மிகவும் கெட்டது மற்றும் வீக்கம், நீர் தக்கவைத்தல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற பிரச்சினைகள் இதனால் ஏற்படுகின்றன. "ஊறுகாயில் பயன்படுத்தப்படும் காரம், செரிமான மண்டலத்தை எரிச்சல் அடைய வைக்கலாம்", என்று மக்ரோபயோடிக் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பயிற்சியாளர் ஷில்பா அரோரா கூறுகிறார். மேலும், மலிவான எண்ணெய்கள் கல்லீரலுக்கு மிக ஆபத்தான மற்றும் நச்சுத்தன்மையுள்ள டிரான்ஸ் கொழுப்புக்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றைக் கண்டு ஊறுகாய் பிரியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இத்தகைய ஆரோக்கிய பாதிப்புகள் ஏதுமின்றி ஊறுகாயை உட்கொள்ளலாம். ஆனால் அதன் தயாரிப்பு ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான வழியில் இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான ஊறுகாயை சுவைக்க ஷில்பா அரோரா சில வழிகளைக் குறிப்பிடுகிறார். "ஊறுகாய் என்பது காய்கறிகளை புளிக்க வைத்து ஆண்டு முழுவதும் சாப்பிட வைக்கும் ஒரு பாரம்பரிய வழி. கடுகு எண்ணெய் மற்றும் மசாலா பொருட்களை சரியான விகிதத்தில் கலந்து ஆரோக்கியமான மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் ஊறுகாய் குடலுக்கு ஆரோக்கியமானது. ஊறுகாயில் சேர்க்கப்படும் காய்கறிகள் புளிப்பு சுவையை உடையதால், குடலுக்குள் ஆரோக்கியமான பக்டீரியா உற்பத்தியாகி உடலை உத்வேகப்படுத்துகின்றன. அதிக ஊறுகாய் எடுத்துக் கொள்பவர்களுக்காக ஷில்பா கூறுவது, "சரியான மூலப்பொருட்களை கவனமாக சேர்ப்பதுடன் அவற்றை மிதமாக எடுத்துக் கொள்ளவேண்டும்" என்ற அறிவுரை மட்டுமே. சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான வழியில் தயாரிக்கப்படும் ஊறுகாயை எந்த ஒரு ஆரோக்கிய சீர்கேடுகள் பற்றிய அச்சமும் இல்லாமல் தாராளமாக உட்கொள்ளலாம்.