லக்னம் பற்றி தெரிந்து கொள்வோமா ?
ஒருவர் ஜாதகத்தை துல்லியமாகக் கணித்து கூற லக்னம் மிக முக்கியமானது.
லக்னம் என்பது என்ன ?
பிறக்கும் பொழுது இருக்கும் கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதக கட்டம் கணித்து கூறுகிறார்கள். அந்த ஜாதகத்தை துல்லியமாகக் கணித்து கூற லக்னம் மிக முக்கியமானது. சூரியனை கொண்டு லக்னத்தை கணிப்பதால் லக்னத்தை உயிர் என்று கூறுகிறார்கள். அதனால் தான் சூரியனை தந்தை கிரகம் என்றும் சொல்கிறார்கள்.
லக்னத்தை எப்படி கணிப்பது?
சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு ராசியில் இருப்பார். சூரியன்
சித்திரை மாதத்தில் மேஷத்திலும்,
வைகாசி மாதத்தில் ரிஷபத்திலும்,
ஆனி மாதத்தில் மிதுனத்திலும்,
ஆடி மாதத்தில் கடகத்திலும்,
ஆவணி மாதத்தில் சிம்மத்திலும்,
புரட்டாசி மாதத்தில் கன்னியிலும்,
ஐப்பசி மாதத்தில் துலாமிலும்,
கார்த்திகை மாதத்தில் விருச்சகத்திலும்,
மார்கழி மாதத்தில் தனுசிலும்,
தை மாதத்தில் மகரத்திலும்,
மாசி மாதத்தில் கும்பத்திலும்,
பங்குனி மாதத்தில் மீனத்திலும் உதிக்கும்.
உதாரணமாக சித்திரை மாதம் சூரிய உதய நேரத்தில் முதல் லக்னமாக மேஷத்தில் ஆரம்பித்து, தொடர்ந்து சூரியன் சுமார் 2 மணி நேரத்திற்கு ஒரு லக்னம் என்ற கணக்கில் ஒரு நாளைக்கு மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னத்திலும் பயணம் செய்து முடிப்பார். ஒரு ராசிக்கான லக்னம் என்பது சுமார் 2 மணி நேரமாகும். சிலர் ஜாதகத்தில் ல என்று குறிப்பிட்டிருக்கும் அதுவே லக்னமாகும். லக்னமே ராசியின் முதல் வீடாகும்.
லக்னத்தை வைத்து ஒருவர் எந்த வேளையில் பிறந்தார் என்பதை எப்படி கணிப்பது?
ஒருவர் லக்னத்திற்கு 1,2,3,4,5,6 ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் அவர் காலையில் பிறந்தவர் என்றும், அதுவே அவர் லக்னத்திற்கு 7,8,9,10,11,12 ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் அவர் மாலையில் பிறந்தவர் என்று கணிக்கலாம் என்று கூறுவார்கள்.
ஜென்ம லக்னத்தை வைத்து தான் அனைத்து கட்டத்திலும் உள்ள கிரக நிலைகள், ஒருவரின் உருவம், நிறம், புகழ், சிந்தனை, படிப்பு, பேச்சு, தொழில், நிர்வாகத்திறன், மனோபலம், கற்பனை வளம், சமயோசித புத்தி, ஒழுக்கம், குணநலன்கள், பூர்வ புண்ணிய கர்மா போன்ற விஷயங்களை கணித்து சொல்ல முடியும்.