மார்பக வலியைப் போக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள்
மார்பக வலியைப் போக்குவது எப்படி ? பெண்களின் மார்பகம் மிகவும் உணர்ச்சிமிக்க மற்றும் மென்மையான திசுக்களால் ஆனது. ஒரு சிறு பாதிப்பு கூட அவற்றில் வலியை உண்டாக்கலாம். பூப்பெய்தும்போது, மாதவிடாய் சுழற்சியின்போது அல்லது மெனோபாஸ் காலகட்டத்தின்போது இந்த வலியை அனுபவிக்க நேரலாம். பொதுவாக மார்பக வலி நீண்ட நேரம் இருக்காது. சிறிது நேரத்தில் மறைந்து விடக் கூடிய வலியாகவே பலருக்கும் உள்ளது. ஆனால் அந்த வலி ஏற்படும் நேரத்தில் அதனைக் குறைக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் தொடர்ந்து காணலாம்.
மார்பக வலியைப் போக்க உதவும் சில அற்புதக் குறிப்புகள்:
மார்பக வலியைப் போக்க உதவும் சில எளிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மார்பக வலியைப் போக்க குளிர் ஒத்தடம் :
மார்பக வலிக்கு ஒரு அற்புதமான தீர்வைத் தருவது குளிர் ஒத்தடம். இது மிகவும் குளிர்ச்சியான மற்றும் மிருதுவான உணர்வைத் தருகிறது. குளிர் ஒத்தடம் தருவதால் அந்த இடத்தில் உணர்ச்சி குறைந்து வலி மிதப்படுகிறது. ஒரு துணியில் நான்கு அல்லது ஐந்து ஐஸ்கட்டிகளை வைத்து மூடி, அந்த துணியைக் கொண்டு உங்கள் மார்பகத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். உங்கள் மார்பகத்தை ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம். ஒரு நாளில் பல முறை இதனை முயற்சிக்கலாம். நேரடியாக ஐஸ்கட்டிகளை மார்பகத்தில் வைப்பதை தவிர்ப்பது நல்லது.
மார்பக வலியைப் போக்க சோம்பு விதைகள்:
மார்பக வலிக்கு சிகிச்சை அளிக்க சோம்பு விதைகள் உதவுகின்றன. இது அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகள் கொண்டது. மாதவிடாய் காலங்களில் அல்லது மாதவிடாய்க்கு முந்தைய காலகட்டத்தில் வறண்டு இருக்கும் மார்பகத்திற்கு மென்மையைத் தருவதற்கும் சோம்பு உதவுகிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.
மார்பக வலியைப் போக்க ஆளி விதைகள் :
ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மார்பக மென்மையை கட்டுப்படுத்தவும் , மாதவிடாய்க்கு முந்தைய வலியைக் குறைக்கவும் ஆளி விதைகள் உதவுகின்றன. யோகர்ட்டில் ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை சேர்த்து உட்கொள்ளலாம் அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை சேர்த்து ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகலாம்.
ஆளி விதைகளை எடுத்துக் கொள்ளும்போது அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும், இல்லையேல் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
மார்பக வலியைப் போக்க முட்டைகோஸ் :
முட்டைகோசில் வைட்டமின் சி, கே, பி 2 , பி 6, பொட்டாசியம், கால்சியம், செலெனியம், இரும்பு, மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இது இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, மேலும் மார்பக வலியைப் போக்குவதில் சிறந்த தீர்வை வழங்குகிறது.
முட்டைகோசின் இரண்டு பெரிய இலைகளை எடுத்துக் கொள்ளவும். இந்த இலைகள் உங்கள் மார்பகம் முழுவதும் மூடும் அளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். சில நிமிடங்கள் இந்த இலைகளை தண்ணீரில் ஊற விடவும். பிறகு, உங்கள் மார்பகத்தை சுற்றி இந்த இலைகளை சுற்றிக் கொள்ளவும். முட்டைகோஸ் இலைகள் விழுந்து விடாமல் இருக்க அதனைச் சுற்றி ஒரு காட்டன் துணியால் கட்டிக் கொள்ளவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.
மார்பக வலியைப் போக்க விளக்கெண்ணெய் :
பொதுவாக எரிச்சலைக் குறைத்து காயங்களை ஆற வைக்கும் தன்மை விளக்கெண்ணெய்க்கு உண்டு. உட்புற நரம்புகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் மேலும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும் விளக்கெண்ணெய் உதவுகிறது. கர்ப்ப காலத்திற்கு பிறகு மார்பகத்தில் உண்டாகும் வலியைக் குறைக்க விளக்கெண்ணெய் நல்ல பலன் தருகிறது.
விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இரண்டு எண்ணெய்களை மிதமாக சூடாக்கி, மார்பகத்தில் 3-5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.
மார்பக வலியைப் போக்க இஞ்சி :
இஞ்சிக்கு வலி நிவாரணி பண்புகள் உண்டு. இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மாதவிடாய்க்கு முந்தைய காலம், மாதவிடாய் காலம் மற்றும் மாதவிடாய் முடிந்த பின்னர் என்று எல்லா நேரத்திலும் மார்பகத்தில் உண்டாகும் வலியைப் போக்க இஞ்சியைப் பயன்படுத்தலாம்.
இஞ்சியை நறுக்கி நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொண்டு அதில் அரை ஸ்பூன் தேன் சேர்க்கவும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை வெதுவெதுப்பாக இந்த நீரை பருகவும்.
மார்பக வலியைப் போக்க லாவெண்டர் எண்ணெய் :
லாவெண்டர் எண்ணெயின் வாசனை மார்பக வலியைக் குறைப்பது மட்டுமில்லாமல் மன அழுத்தத்தையும் போக்க உதவுகிறது.
ஒரு கைக்குட்டையில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய்யை ஊற்றி ஒரு நாளில் சில முறை தொடர்ந்து இதன் வாசனையை நுகருங்கள்.
மார்பக வலியைப் போக்க ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் எண்ணெய் :
ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் எண்ணெய்யில் கமொலேனிக் அமிலம் அதிகமாக உள்ளது. அதனால் தசை இறுக்கத்தை தக்க வைக்கவும், ஹார்மோன் நிலையை சமச்சீராக வைக்கவும் உதவுகிறது. மார்பகத்தில் உண்டாகும் கட்டியைப் போக்குவதில் சிறந்த பலன் தருகிறது.
ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் எண்ணெய்யால் உங்கள் மார்பகத்தை ஐந்து நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரால் அந்த இடத்தைக் கழுவவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.
கர்ப்பிணிகள் இந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம்.
என்ன வாசகர்களே, மார்பக வலியைப் போக்க நாங்கள் மேலே கூறியுள்ள குறிப்புகளை தெரிந்து கொண்டீர்களா? இந்த குறிப்புகள் உங்கள் வலியைக் குறைப்பதில் விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த குறிப்புகளைப் பின்பற்றியும் வலி குறையவில்லை என்றால், மருத்துவரை அணுகி உங்கள் உடலை பரிசோதித்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.