மூக்கடைப்பிற்கான எளிய தீர்வுகள் 

நீண்ட நாட்கள் தொடர் வேலை பளுவிற்கு பிறகு கிடைக்கும் விடுமுறை நாட்களில் , மூக்கடைப்பு, மற்றும் சளி தொந்தரவுகள் ஏற்பட்டால், அது விடுமுறை நாளை வெகுவாக பாதிக்கும். படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், மூச்சு திணறல் மற்றும் தொடர் தும்மல் போன்ற விஷயங்கள் பாடாய் படுத்தும். முடிவில், தூக்கமில்லா இரவாக, மறுநாள், சோர்வும் அசதியும் நம்மை வாட்டி எடுக்கும். 

மூக்கடைப்பிற்கான எளிய தீர்வுகள் 

நமது இந்திய பாரம்பரியத்தில், நம் முன்னோர்களால் பல வழிகள் பின்பற்றபட்டு வந்தது . பாரம்பரிய வைத்திய முறைகள் பல நம் வீட்டு பாட்டிகளால் பின்பற்றப்பட்டு, மிகுந்த பலனளிக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்த மூக்கடைப்பு மற்றும் மூச்சு திணறலை ஒரே இரவில் சரி செய்யும் சக்தி இந்த பாட்டி வைத்தியத்திற்கு உண்டு. 

மூக்கடைப்பை போக்க அவற்றுள் சில வழிமுறைகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முயற்சித்து பார்க்க மேலும் படியுங்கள்.

நீராவி பிடிப்பது :
பல சுவாச சம்மந்தப்பட்ட கோளாறுகளுக்கு நீராவி பிடிப்பது ஒரு சிறந்த தீர்வாகும். நாட்பட்ட சளி, சைனஸ் போன்ற உபாதைகளுக்கும் நீராவி பிடிப்பது நல்ல பலனை தருகிறது. சைனஸ் தொந்தரவால், தலையில் பயங்கர வலி உண்டாகிறது. நீராவி பிடிப்பதன் மூலம், தலை மற்றும் மூக்கில் அடைக்கபட்டிருக்கும் நீர் வெளியேறுகிறது . ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். ஒரு போர்வையை நன்றாக போர்த்திக் கொண்டு தண்ணீரில் இருந்து வெளியேறும் ஆவி முகத்தில் படுமாறு குனிந்து கொள்ள வேண்டும். அந்த ஆவியை நன்றாக உள்ளிழுத்து வெளியில் விடவும். தேவைபட்டால், புதினா அல்லது மற்ற எதாவது ஒரு மூலிகையை சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் தீர்வு இரட்டிப்பு ஆரோக்கியத்தை தரும்.

எண்ணெய்யை நுகர்வது :
வீட்டில் பயன்படுத்தும் எண்ணெயுடன் சிறிது மூலிகைகளை சேர்த்து பயன்படுத்துவது மூக்கடைப்பை விலக்கும். தைல எண்ணெய்யின் வாசம் மூக்கடைப்பை தீர்க்க வல்லது. கொதிக்க வைத்த நீரில், சில துளி தைல எண்ணெய்யை தெளிக்கவும். அந்த நீரில், நீராவி பிடிப்பதன் மூலம், மூக்கடைப்பு உடனே சீராகி, மூச்சு திணறல் குறைகிறது. புதினா எண்ணெயையும் இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம் .

சலைன் நீர் :
வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும். இப்பொது இந்த திரவத்தை சலைன் திரவம் என்று கூறலாம். இந்த திரவத்தை சில துளிகள் மூக்கிற்குள் விடவும். இதனை செய்வதன் மூலம் , மூக்கில் கட்டியுள்ள சளி மென்மையாகி மூக்கு வழியே வடியத் துவங்கும். மேலும்,  தூசு, சளி போன்றவை விலகி, சீரான சுவாசம் கிடைக்கும்.

பூண்டு:
பூண்டிற்கு பலவித மருத்துவ குணங்கள் உண்டு. குறிப்பாக மூக்கடைப்பிற்கு இது மிக சிறந்த தீர்வாகிறது. மூக்கடைப்பை சரி செய்ய, பூண்டு பற்களை முழுதாக கடித்து விழுங்கலாம். அல்லது சூப் செய்து பருகலாம். பூண்டில் இருக்கும் கிருமிகளை தடுக்கும் தன்மை, தொற்றுகளை நீக்கி, மூக்கடைப்பை சரி செய்கிறது. 

வெங்காயம் :
வெங்காயத்தை அறியும் போது கண்களிலும் மூக்கிலும் நீர் வருவதை நாம் அனைவரும் அறிவோம். இதே போல், மூக்கடைப்பு ஏற்படும்போது 5 நிமிடம் தொடர்ந்து வெங்காயத்தை நுகரும்போது, மூக்கடைப்பு சரியாகி, மூச்சு சீராகிறது. முயற்சித்து பாருங்கள்.

ஆப்பிள் சிடர் வினிகர் :
வெதுவெதுப்பான நீருடன் 2 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு நாளில் 3 முறை இந்த நீரை பருகி வரவும். நாளின் இறுதியில் உங்களால் நல்ல வித்தியாசத்தை உணர முடியும். மூக்கடைப்பிற்கு மட்டுமில்லாமல், சைனஸ் தொடர்பான  பிரச்சனைகளுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாகிறது.

எலுமிச்சை :
வைட்டமின் சி அதிகமுள்ள இந்த சிட்ரஸ் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. எலுமிச்சை , சிறந்த ஒரு அன்டி ஆக்ஸ்சிடென்ட். 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை மிளகு தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து, இந்த திரவத்தை மூக்கில் சில துளிகள் விடவும். சில நிமிடங்களில் மூக்கடைப்பு குணமாகிறது.

தக்காளி சாறு :
தக்காளியை மசித்து, உப்பு சேர்த்து தண்ணீருடன் கொதிக்க வைக்கவும். இந்த கலவையில் சிறிய துண்டு இஞ்சி சேர்க்கவும். நன்றாக கொதித்த இந்த நீரை ஒரு நாளில் 2 முறை பருகவும். தக்காளிக்கு அழற்சியை குறைக்கும் தன்மை உண்டு. ஆகவே மூக்கு பகுதியில் ஏற்படும் வீக்கம் போன்றவை இந்த நீரை பருக்வதால் குறைகிறது. சைனஸ் பிரச்சனைக்கும் இது ஒரு தீர்வாகும்.

துளசி:
துளசி இலைக்கு ஒரு புனிதத்தன்மை உண்டு. மேலும், இதற்கு மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. துளசி இலைகள் சிலவற்றை எடுத்து, கழுவி, வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். காலை உணவிற்கு முன் இதனை எடுத்துக் கொள்வது நல்லது. காலையில் டீ பருகும்போதும், சில துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து பருகுவது நல்லது. இதனால் மூக்கடைப்பு முழுதும் காணாமல் போகும்.

இஞ்சி :
இஞ்சிக்கு அழற்சியை குறைக்கும் தன்மை உள்ளது. மூக்கடைப்பிற்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுவதால் அல்லது டீயில் சேர்த்து பருகுவதால் மூக்கடைப்பு குணமாகும். உடனடி நிவாரணத்திற்கு இஞ்சி மிகவும் நல்லது. 

எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், உடனடி நிவாரணத்திற்கு மேலே கூறிய பொருட்களை பயன்படுத்தி மூக்கடைப்பை குணப்படுத்தலாம்.