விடிய விடிய நல்லா தூங்குங்க! உங்க அறிவாற்றல் அதிகரிக்கும் !
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் எல்லோரும் விரும்பும் ஒரே விஷயம் நிம்மதியான தூக்கம்.
"கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணை சொக்குமே
அது அந்த காலம்
மெத்தை விரித்து சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே
அது இந்த காலம்
என் தெய்வமே … தூக்கம் கொடு…"
இந்த பாடல் அனைவருக்கும் தூக்கத்தின் தேவையை வெளிப்படுத்தும்.
நாள் முழுதும் வேலை செய்த உடல் சில மணி நேரங்கள் தொடர்ந்து ஓய்வெடுப்பதால் மறுபடி உறுப்புகள் புத்துணர்ச்சி பெற்று மறு நாள் தன் கடமைகளை சரிவர பணியாற்ற இயலும். ஆகவே தினமும் 6-8 மணி நேர தூக்கம் ஆரோக்கியமான உடலுக்கு அவசியம் தேவை. ஆரோக்கியமான உடலுக்கு மட்டும் அல்ல. ஆரோக்கியமான மூளைக்கும் தூக்கம் அவசியம். மூளை தன்னைத்தானே மாற்றி கொள்ளவும் மறு சீரமைப்பு செய்து கொள்ளவும், தூக்கம் உதவுகிறது. மூளையின் அணுக்களின் ஒரு பகுதியை டென்ரிட் என்ற ஒருங்கு முனைப்பு பகுதி என்று கூறுவர். இந்த பகுதி புதிய தகவல்களை சேமித்து வைக்கும் இடமாகும். இந்த பகுதியில் உள்ள தகவல்களை மட்டும் தனியாக எடுத்து பதிவு செய்து பரிசோதனைக்கு உட்படுத்தும் செயலை கட்டிங் எட்ஜ் டெக்னீக் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பரிசோதனை ஞாபக சக்தி மற்றும் படிப்பதில் கோளாறு உள்ளவர்களுக்கு , புதிய வழிகளை கண்டுபிடித்து அவற்றிற்கு தீர்வுகள் காண உதவும்.
ஒருங்கு முனைப்பு பகுதியின் செயலாற்றல் தூங்கும்போது சிறப்பாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஞாபக சக்தி அதிகரிக்க தேவையான மூளையின் அலைகளுடன் இந்த ஒருங்குமுனைப்பு பகுதியின் அதிவேக செயலாற்றல் இணைக்கட்டுள்ளதாக தெரிவிக்கிறது இந்த ஆய்வு . நமது மூளை என்பது ஒரு அற்புதமான உறுப்பு . அனுபவத்தின் அடிப்படையில் தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்பு அதற்கு உண்டு என்று இந்த ஆய்வு குழுவின் தலைவர் டாக்டர் . ஜூலி கூறுகிறார். மூளையின் இத்தகைய வளைந்து கொடுக்கும் மாற்றங்களுக்கு தூக்கத்தின் பங்கு முக்கியமானது . மூளையின் அலைகள் தொடர்ச்சியாக மற்றும் சிறியதாக இருக்கும்போது இத்தகைய மாற்றங்கள் அதிக அளவில் உண்டாகிறது என்று கூறப்படுகிறது. இந்த மூளை அலைகளை ஸ்பீண்டல் அல்லது சுழற்சி என்று கூறுகின்றனர்.
தூக்க சுழற்சி ஞாபக சக்தி உருவாக்கத்தில் துணை புரிவதாக கூறப்படுகிறது. இத்தனை நாட்கள் இந்த தூக்க சுழற்சியின் பங்கு மூளையின் செயலாற்றலில் என்ன என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்த ஆராய்ச்சிக்கு பின், இந்த தூக்க சுழற்சி தான் ஒருங்கு முனைப்பு பகுதிக்கான பாதையாக இருந்து தூக்கத்தின்போது ஞாபகங்களை புதுப்பிக்க உதவுகின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டது. தூக்க சுழற்சியின் அதே அலைவரிசையில் ஒருங்கு முனைப்பு பகுதியையும் ஊக்குவிக்கும்போது மூளையின் செயலாற்றல் மேலும் அதிகரிக்கிறது. இந்த முயற்சி, கவன சிதைவு, படிப்பதில் கவனம் இல்லாமை, டிமென்ஷியா போன்ற கோளாறுகள் உள்ளவர்களின் அறிவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இதனை நோக்கி தான் இவர்களின் அடுத்த கட்ட ஆய்வு என்று தெரிவிக்கின்றனர்.
தூங்கு மூஞ்சி என்று யாராவது உங்களை கிண்டல் செய்தால் அதனை இனி பொருட்படுத்தாமல் இரவில் நன்றாக உறங்குங்கள். உங்கள் அறிவாற்றல் மேம்படும்.