மழைக்காலத்திற்கு ஏற்ற சூப்
காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம்.
இந்த மழை காலங்களில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது. இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம். இது ஒரு திரவ உணவு, சூடான சூப் வகையை சேர்ந்தது.
சூப் உடல் சூடு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் மிக சிறந்த பலன்களை கொடுக்க வல்லது.
தேவையான பொருட்கள்:
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பட்டை - சிறிதளவு
வெள்ளை பூண்டு - 10 பற்கள்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு - சிறிதளவு
தனியா - சிறிதளவு
கிராம்பு - 7
தண்ணீர் - 750 ml
உப்பு - தேவையான அளவு
சூப் செய்முறை :
ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும்.
குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும்.
இந்த கலவையை நன்கு கிளறவும்.
பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.
ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும்.
பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும். (குறிப்பு:- பிரஷர் குக்கர் உபயோகிக்க வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml க்கு பதில் 1250 ml தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.)
பிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும்.
பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.
இந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள்:
மொத்த கலோரிகள்: 36 கலோரிகள்
மொத்த கொழுப்பு: 0.5 கிராம்
சாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்
சோடியம்: 603 mg
மொத்த கார்போ ஹைடிரேட்: 3%
இந்த சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும். மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும். இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.