மாடித் தோட்டத்தில் கீரை
ஆரோக்கிய உணவுப் பட்டியலில் கீரை முக்கியமான பங்கு வகிக்கிறது .
வீட்டு மாடியில் ஆரோக்கியமான கீரை செடிகளை எப்படி வளர்ப்பது என்று பார்ப்போம். முதலில் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஒரு நல்ல இடம் தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு அந்த இடத்தில் குறைந்தபட்சம் இரண்டிற்கு இரண்டடி நீல அகல வீதம், அரையடி உயரமுடைய ஒரு தொட்டி போல் அமைக்க வேண்டும். இத தொட்டியில் தான் நாம் கீரை செடிகளை பயிர் செய்யப் போகிறோம்.
நமது தேவைக்கேற்ப வித விதமான கீரைகளான, சிறு கீரை , தண்டுக் கீரை, பசலைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக் கீரை மற்றும் அரைக் கீரை போன்ற கீரை வகைகளை நாம் பயிரிடலாம்.
கீரை வளர்ப்பிற்கு மிக முக்கியமாக தேவைப்படும் கரைசல் ஒன்றை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இக்கரைசலுக்கு தேவையான பொருட்கள், ஒரு கிலோ கிராம் பப்பாளிப் பழம், ஒரு கிலோ கிராம் பரங்கிப் பழம், ஒரு கிலோ கிராம் நன்கு கனிந்த நாட்டு வாழைப் பழம், பிறகு ஒரு நாட்டுக் கோழி முட்டை மற்றும் ஒரு கிலோ கிராம் உருண்டை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை.
முதலில் ஒரு மூடியுடன் கூடிய ஒரு பேரலை (barrel) எடுத்துக் கொள்ளவும். பேரல் பிளாஸ்டிக்கில் இருப்பது நலம்.
பிறகு ஒரு கிலோ கிராம் பப்பாளிப் பழத்தையும், ஒரு கிலோ கிராம் பரங்கிப் பழத்தையும், ஒரு கிலோ கிராம் நன்கு கனிந்த நாட்டு வாழைப் பழத்தையும் எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு உருண்டை வெல்லத்தையோ அல்லது நாட்டு சக்கரையையோ பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது நாம் எடுத்து வைத்திருக்கும் பேரலில் மூன்று பழங்களின் நறுக்கிய துண்டுகளை போடவும். அதன் பின் உருண்டை வெல்லப் பொடியையோ அல்லது நாட்டு சக்கரைப் பொடியையோ அதில் போடவும் . பிறகு நாம் எடுத்து வைத்திருக்கும் நாட்டு முட்டையை ஓட்டுடன் சேர்த்து உடைத்து அதில் போட வேண்டும். அதன் பிறகு இந்தக் கரைசல் நன்கு ஊறும் அளவிற்கு நிறைய தண்ணீரை ஊற்றவும். பிறகு அந்த பேரலை நன்கு மூடிவிடவேண்டும்.
பிறகு அந்த பேரலை எப்போதும் நிழல் இருக்கும் ஓர் இடத்தில் ஓரமாக வைத்து விட வேண்டும். பிறகு ஒரு மாதம் கழித்து மூடியைத் திறந்து பார்த்தால் அந்த கரைசலில் மீது வெள்ளை நிற படலம் உருவாகி இருப்பதைக் காணலாம். அதுவே அந்த கரைசல் நன்றாக உருவாகி இருப்பதற்கான அறிகுறி.
இப்போது நாம் கரைசலை உருவாக்கி விட்டோம். இந்தக் கரைசல் நீரில் கலந்து மண்ணில் ஊற்றுவதால் நாம் வளர்க்கப் போகும் செடிகளுக்கு, அவற்றின் வளர்ச்சியை துரிதப் படுத்த உதவும் நுண்ணுயிர்களின் அளவை பெருக்கச் செய்யும் ஆற்றல் கிடைக்கும் . மேலும் இது செடிகளுக்கு தேவையான அடிப்படைச் சத்துக்களை அதிகமாக தரக் கூடியது.
நமக்கு தேவையான கரைசலை 100 மில்லி லிட்டர் எடுத்து 3 லிட்டர் நீரில் கலந்து கரைசல் நீரை தனியே வைத்துக் கொள்வோம்.
1. முதலில், தொட்டியின் உயரத்தில் பாதி அளவு உயரத்திற்கு மணலைக் கொட்டிவைக்க வேண்டும்.
2. பிறகு மணல் ஈரமாகும் வரை கரைசல் நீரை தெளிக்க வேண்டும்.
3. பிறகு மணலுடன் கீரைகளின் விதைகளைக் கலந்து நாம் அமைத்து வைத்த தொட்டியில் மணல் மீது படர்வது போல் தூவ வேண்டும்.
4. பிறகு மணலை வைத்து மேலே போட்டு மூட வேண்டும்.
5. பிறகு அதன் மீது கரைசல் நீரை மீண்டும் தெளிக்க வேண்டும்.
6. மூன்றாம் நாளில் மீண்டும் நீர் தெளிக்க வேண்டும்.
7. இப்போது கீரைகள் முளைக்க 7-10 நாட்கள் ஆகும்.
8. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மண்ணின் ஈரப்பதம் பொறுத்து கரைசல் நீரை தெளிக்க வேண்டும்.
9. நடுவில் முளைக்கும் களைகளை வெட்டி எரிய வேண்டும். தேவை அற்ற இவை கீரைகளை செல்லும் கரைசல் நீரையும், சத்துக்களையும் உறிந்து கொண்டு கீரைகளுக்கு சேர வேண்டிய சக்திகளை வீணடித்து விடும்.
10. நான்கு முதல் ஐந்து வாரத்திற்குள் கீரை நன்கு வளர்ந்து நாம் உபயோகப் படுத்துவதற்கு தயாராகி விடும்.
11. பாலக் கீரை, பசலைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகிய வகைகள் முதல் அறுவடை செய்த பின்னும் ஏறக் குறைய ஒரு வருடத்திற்கு நாம் எதுவும் செய்யாமலேயே மீண்டும் அறுவடைக்கு தயாராகும். ஒரு வருடத்திற்கு பிறகு நாம் மீண்டும் முதலில் இருந்து விதை தூவி வளர்க்க வேண்டும்.
12. தண்டுக் கீரையும், வெந்தயக் கீரையும் ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் மீண்டும் முதலில் இருந்து விதை தூவி வளர்க்க வேண்டும்.
வீட்டுத்தோட்டத்தில் வளர்ந்த கீரைகளை சுவைத்து ஆரோக்கியமாக வாழ்வோம் !