சூரிய ஆற்றலின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்
சூரிய ஒளி பயன்படுத்தக்கூடிய வகையில் ஆற்றலாக மாற்றப்படும்போது அது சூரிய ஆற்றலாக அதாவது சோலார் எனெர்ஜி என்று அறியப்படுகிறது.
சூரிய ஆற்றல் ஒரு இயற்கையான, வரம்பில்லாத, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாகும். இந்த சூரிய சக்தி மிகவும் தூய்மையான எரிசக்தியாகும். இந்த ஆற்றல் பூமியை மாசுபடுத்தும் எந்த ஒரு வாயுவையும், தயாரிப்பையும் வழங்குவதில்லை. நிதி நன்மைகள் முதல் ஆரோக்கிய நன்மைகள் வரை கொண்டிருக்கும் இந்த சூரிய சக்தி சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த நன்மையை அளிக்கிறது.
பருவநிலையின் மோசமடைந்து வரும் நிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சூரிய ஆற்றல் ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அதன் உற்பத்தியில் டன் கணக்கில் தண்ணீரைப் பயன்படுத்துவது, புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது போன்ற சுற்றுச்சூழலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்த வகையான பசுமை ஆற்றல் ஒருவர் மின்சாரத்தைச் சார்ந்து இருப்பதைக் கட்டுப்படுத்துகிறது, இது பருவகால பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தடுக்கிறது.
சூரிய சக்தி ஒரு வற்றாத மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஒரு சக்தியாகும். இதற்கான அமைப்பை நிறுவுதல் மூலம் இதனை எளிதில் பயன்படுத்த முடியும். இந்த சூரிய ஆற்றல் பொருளாதாரம் முதல் எண்ணெய் சார்பு வரை பல சமூக நன்மைகளைக் கொண்டுள்ளது. மேலும் மின் கட்டணங்களில் இருந்து விடுபடுவது, மாறுபட்ட பயன்பாடு, குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் சூரிய சக்தியை சேமித்தல் போன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கிறது.
உங்கள் மாதாந்திர மின்சார கட்டணங்களை குறைப்பதில் இருந்து ஆற்றலை சுதந்திரமாக கையாளுவது வரை, சூரிய சக்திக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன, அவற்றைப் பற்றி நாம் இந்த பதிவில் மேலும் காணலாம்
சூரிய சக்தியின் ஆரோக்கிய நன்மைகள்:
- சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை குறைக்கிறது:
சூரிய சக்தியைப் பரவலாகப் பயன்படுத்துவதால் , அவை நைட்ரஸ் ஆக்சைடுகள், சல்பர் டை ஆக்சைடு மற்றும் துகள்களின் வெளியேற்றத்தை வளிமண்டலத்தில் கணிசமாகக் குறைக்கும் மற்றும் ஆஸ்துமா, சுவாசக் கோளாறு போன்ற பல்வேறு சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியின் வரம்பைக் கட்டுப்படுத்தவும் இந்த சக்தி உதவுகிறது.
- இதயம் தொடர்பான ஆரோக்கிய சுகாதார பிரச்சினைகளை நிர்வகிக்கிறது:
நாம் சுவாசிக்கும் காற்றில் எந்த அளவிற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் வெளியிடப்படுவது குறைகிறதோ அந்த அளவிற்கு இதயம் தொடர்பான பிரச்சனைகளும் குறையும். சூரிய ஆற்றல் இதய பிரச்சனைகளின் வளர்ச்சி மற்றும் இதய ஆரோக்கியம் தொடர்பான குறைபாடுகள் போன்றவற்றின் அபாயத்தைக் குறைப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன
- ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலமும், பசுமையான மற்றும் திறமையான மாற்று வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும். சூரிய சக்தி மிகவும் சுத்தமானது, திறமையானது மற்றும் நிலையானது . உங்கள் வீடு அல்லது பணியிடத்திற்கு மிகவும் ஏற்றது மற்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் ஆரோக்கியமான தேர்வாகவும் இந்த ஆற்றல் கருதப்படுகிறது.
சூரிய சக்தியால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மைகள்:
- காற்று மாசுபாட்டைக் குறைக்கிறது:
சூரிய சக்தியைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு குறைகிறது. வழக்கமான ஆற்றலுக்கு பதிலாக சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் முதன்மை நன்மை இதுவாகும். பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டலத்தில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு இருப்பதற்கான முக்கிய காரணம் புதைபடிவ எரிபொருள்கள் ஆகும். ஒருவர் சூரிய ஆற்றல் மற்றும் சோலார் பேனல்களை பயன்படுத்துவதன் மூலம், மாசுபடுத்திகள் காற்றில் சிக்கி, கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துவதைத் தடுக்க முடியும்.
- புதுப்பிக்க இயலாத ஆற்றலைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கிறது:
சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவது, புதுப்பிக்க முடியாத ஆற்றல் ஆதாரங்களில் நாம் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவுகிறது. இந்த புதுப்பிக்க முடியாத ஆற்றல் ஆதாரங்கள் மாசுபாட்டிற்கான காரணம் ஆகும் மற்றும் அவை குறைந்து போவதற்கான வாய்ப்புள்ளது. அதாவது, அவற்றைப் பயன்படுத்திக் கொன்டே இருப்பதால், அவை இறுதியில் தீர்ந்துவிடும். ஆனால் நீங்கள் சூரிய சக்தியைச் சார்ந்து இருந்தால், ஆற்றல் வெளியேறி தீர்ந்து போவதற்கான வாய்ப்பு இல்லை.
- பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது:
நாளுக்குநாள் நமது பூமியின் மோசமடைந்து வரும் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஒன்றாக கூடி குரலெழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், சூரிய சக்தியை ஏற்றுக்கொள்வது மிகச் சிறந்த தீர்வாகும். புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால், காற்றில் மாசுபடுத்திகளின் அளவு அதிகரிக்கிறது மேலும் வளிமண்டலத்தில் அதிகரித்துக் காணப்படும் கார்பன் எண்ணிக்கை மேலும் உயர்ந்து வருகிறது. பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் பாதிப்பைத் தடுக்க சூரிய சக்தி பயன்பாடு ஒரு சிறந்த வழியாகும். மேலும் சூரிய சக்தி பயன்பாடு , மிகச்சிறிய அளவாக இருந்தாலும் கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டைத் தடுக்க உதவுகிறது. இதனால் காற்றில் மாசு பொருட்களின் அளவு குறைகிறது.