இலங்கை தீக்கு இரையானதற்கான உண்மையான கதை
இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உள்ளது.
இறைவன் ஹனுமான் ஒரு முறை இலங்கை முழுவதும் தீ வைத்த கதையை நாம் அனைவரும் அறிவோம். இலங்கை மன்னன் ராவணனுக்கும் ஸ்ரீ ராமருக்கும் உண்டான விரோதம் காரணமாக இது நிகழ்ந்தது என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது அந்த உண்மையான கதையின் ஒரு பகுதி மட்டுமே.
இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் ஒரு செயல் மற்றொன்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. அனைத்து செயலும் கர்ம வினையால் மட்டுமே நடக்கின்றன. அதைபோல் இலங்கை மாளிகை எரிக்கப்பட்டதற்கும் ஒரு கர்ம வினை உண்டு. அந்த வினையைப் பற்றிய கதையை இப்போது நாம் காணலாம்.
பார்வதி தேவி, ஒரு முறை லக்ஷ்மி தேவியை விருந்திற்கு அழைத்தார்:
சிவபெருமான் தனது தேவி பார்வதியுடன் கைலாச மலையில் வாழ்ந்து வந்தார். தேவி பார்வதியும் தேவி லஷ்மியும் சகோதரிகள். ஒருமுறை, பார்வதி தேவி லக்ஷ்மி தேவியை இரவு விருந்திற்கு தனது இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். எல்லா வித மரியாதையுடன் பல பரிசுப் பொருட்களுடன் தேவி லஷ்மி தனது கணவர் விஷ்ணுவுடன் தேவி பார்வதி, சிவபெருமான் இல்லத்திற்கு வருகை புரிந்தனர்.
அவர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது லக்ஷ்மி தேவி குளிரால் நடுங்குவதை தேவி பார்வதி அறிந்து கொண்டார். ஆனால் தன்னால் அந்த குளிரைப் போக்க முடியாமல் இருக்கும் நிலையை எண்ணி பார்வதி தேவி மிகவும் வருந்தினார். விருந்தினரை சரியாக உபசரிக்க முடியவில்லை என்று வருத்தமுற்றார். விருந்து முடிந்து, லக்ஷ்மி தேவியும் விஷ்ணு பகவானும் விடைபெறும்போது, மறுநாள் அவர்கள் மாளிகைக்கு விருந்திற்கு வருமாறு, பார்வதி தேவியையும் சிவபெருமானையும் அழைத்தனர்.
சிவபெருமானும் பார்வதி தேவியும் விஷ்ணு பகவான் மாளிகைக்கு வந்தனர் :
மறுநாள், சிவபெருமானும் பார்வதி தேவியும் லக்ஷ்மி தேவி மற்றும் விஷ்ணு பகவானின் அரண்மனைக்கு சென்றனர். அவர்களின் மிகவும் அழகான மாளிகையைப் பார்த்து பார்வதி தேவிக்கு அதனைப் போன்ற ஒரு மாளிகை தனக்கும் வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. பிறகு இருவரும் தனது இல்லம் வந்து சேர்ந்தனர். அடுத்த சில நாட்கள், பார்வதி தேவி மிகவும் மன வருத்தமாக இருந்தததை சிவபெருமான் கவனித்தார்.
ஒரு நாள், சிவபெருமான் பார்வதி தேவியிடம் அவரின் கவலை குறித்து கேட்டறிந்தார். அப்போது, பார்வதி தேவி, தனது விருப்பத்தைக் குறித்து தெரிவித்து, அதனை நிறைவேற்றுமாறு சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான், தான் ஒரு முனிவர் என்பதாலும் , பார்வதி தேவி முனிவரின் மனைவி என்பதாலும், இவர்கள் இருவரும் மாளிகையில் இருப்பது தவறு என்றும் கூறினார்.
பார்வதி தேவியின் விருப்பம்:
அன்று லக்ஷ்மி தேவி குளிரால் நடுங்கியபோது தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையை எண்ணிய பார்வதி தேவி, நிச்சயம் தனக்கு ஒரு அழகான மாளிகை வேண்டும் என்று சிவபெருமானை வற்புறுத்தினார். அதனால், வேறு வழியின்றி சிவபெருமான் பார்வதி தேவியின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்து, விஸ்வகர்மாவை அழைத்து தனது மனைவிக்காக ஒரு அரண்மனையை உருவாக்குமாறு கூறினார்.
விஸ்வகர்மா என்பவர் தேவலோகத்தில் வசிக்கும் கட்டிட வடிவமைப்பாளர் ஆவார். அவரும் சிவபெருமானின் ஆணையை ஏற்று தங்கத்தால் ஆன ஒரு மாளிகையை வடிவமைத்தார். அதுவே இலங்கையில் இருந்த ஸ்வர்ண மாளிகை ஆகும். இது முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன ஒரு அழகிய மாளிகையாக விளங்கியது.
பார்வதி தேவியின் ஆசை நிறைவேறியது :
அழகு ஒளிரும் அரண்மனையைக் கண்டதும் பார்வதி தேவிக்கு அளவிட முடியாத சந்தோஷம் கிடைத்தது. அனைத்து கடவுள்களையும் முனிவர்களையும் புதிதாக கட்டிய அரண்மனைக்கு விருந்திற்கு அழைத்தார். விருந்தினர்களுக்கு பார்வதி தேவியும் சிவபெருமானும் பல வித பரிசுப் பொருட்களை வழங்கி வந்தனர். அந்த நேரத்தில் புனிதத்துவம் மிகுந்த முனிவர்களுள் ஒருவரான விஷ்வ முனிவர் அங்கு வந்தார். சிவபெருமானிடம் அந்த அரண்மனையையே பரிசாக கேட்டார்.
முனிவர் ஒருவர் கேட்டதை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்த சிவபெருமான், உடனடியாக அந்த அரண்மனையை அவரிடமே கொடுத்து விட்டார். முனிவரின் இந்த நடத்தை பார்வதி தேவிக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. ஒருநாள் இந்த அரண்மனை முற்றிலும் தீயில் கருகி சாம்பலாகி என்று சாபமளித்தார்.
பார்வதி தேவியின் சாபத்தால் இலங்கை தீக்கு இரையானது:
வால்மீகி எழுதிய ராமாயணத்தின்படி, ராவணன், புலத்ச்ய முனிவரின் பேரனும், விஷ்வ முனிவரின் மகனும் ஆவார். அதனால், அன்று பார்வதி தேவி அளித்த சாபம் காரணமாக ஸ்வர்ண மாளிகை முழுவதும் எரிந்து சாம்பலானது.