திருவாதிரை திருநாளன்று சிவனுக்கு களி படைக்கும் பழக்கம் எப்படி வந்தது
சேந்தனார் சிவனுக்கு களி படைத்திட்ட நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளாகும். அன்றிலிருந்து திருவாதிரை நாளன்று களி படைப்பது வழக்கமானது.
திருவாதிரை நாள் அன்று சிவனுக்கு களி படைக்கும் பழக்கம் எப்படி வந்தது
சிவபக்தனான சேந்தனார் அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவராவார்.
சிவனின் திருவிளையாடல் மூலம் இவரின் பக்தி எவ்வாறு உணர்த்தப்பட்டது என்பதையும்,
திருவாதிரை நாள் அன்று சிவனுக்கு களி படைக்கும் பழக்கம் எப்படி வந்தது என்பதை பற்றியும் இப்பதிவில் காணலாம்.
சிவனின் திருவிளையாடல் மூலம் இவரின் பக்தி எவ்வாறு உணர்த்தப்பட்டது
சேந்தனார் கடும் வறுமையிலும் சிவனடியாருக்கு உணவளிக்காமல் தான் உண்பதில்லை என்ற கொள்கையோடு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது வீட்டில் சமைக்க கொஞ்சம் அரிசி மற்றும் வெல்லம் தான் இருந்தது மற்றபடி வேறு ஏதுமில்லாத போதும், அவர் அந்த அரிசியை பொடித்து, சிறிதளவு வெல்லம் சேர்த்து களியாய் கிளறி அடியவருக்காக காத்திருந்தார். இரவுப்பொழுது ஆகியும் யாரும் வராததால் கவலையோடு இருந்தார். இவருடைய கவலையை போக்க சிவனே அடியவர் ரூபத்தில் வந்து சேந்தனாரிடம் பிட்சை கேட்டார். அந்த அடியாரின் பசியை தீர்க்க களியை படைத்தார் சேந்தனார். களியை உண்ட பின் மீதமுள்ள களியை எனக்கு அடுத்த வேளை உணவிற்காக கொடுப்பாயா என்று சேந்தனாரிடம் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றார் சிவனடியார். அன்று இரவில் அரசனின் கனவில் சிவபெருமான் காட்சி கொடுத்து சேந்தனார் வீட்டில் களி உண்ட செய்தியையும், அவரின் பக்தியை பற்றி கூறி தேர் திருவிழாவில் அவரை காண்பாய் என்றார். மறுநாள் காலையில் அந்தணர்கள் தில்லையில் (சிதம்பரம்) கோவிலில் உள்ள கருவறையை திறந்து பார்த்த போது களி அங்கும் இங்கும் சிதறி கிடந்தது. உடனே இந்த செய்தியை அரசருக்கு தெரிவித்தார்கள். சேந்தனாரின் சிவ பக்தியை எண்ணி அவரை காண மன்னர் ஆவலுடன் இருந்தார். அன்று தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்களின் மத்தியில் சேந்தனாரை எப்படி கண்டுபிடிப்பது என்று மன்னன் யோசிக்கும் அதே நேரத்தில் தேர் நகர மறுத்தது. உடனே அசரீரி வாக்கு சேந்தனாரை பாடுமாறு சொன்னது. சேந்தனாரோ ஒன்றுமறியாத நான் எப்படி பாடுவேன் என்று கலங்கி நின்றார். சிவபெருமானின் அருளால் சேந்தனார் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" எனும் பாடலை பாட ஆரம்பித்தவுடனே அத்தேர் தானாகவே நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. இவரும் தேர் நிலையில் நிற்கும் வரை தொடர்ந்து பாடி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்தார். இவர் பாடிய பதிமூன்று பாடல்கள் சிவபெருமானை பற்றி வாழ்த்தி பாடியதாகும். இவர் பாடி தேர் நகர்ந்த அதிசயத்தை கண்ட அரசரும், அங்கிருந்தவர்களும் சேந்தனாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். அம்பலவாணரே தங்களின் வீட்டிற்கு வந்து களி உண்டதாக அரசர் கூறியதை கேட்ட சேந்தனார் இறைவனின் அருளை நினைத்து பரவசமடைந்தார்.
சேந்தனார் சிவனுக்கு களி படைத்திட்ட நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளாகும். அன்றிலிருந்து திருவாதிரை நாளன்று களி படைப்பது வழக்கமானது. இதன் அடுத்த பதிவில் திருவாதிரை களி செய்வது எப்படி என்று பார்ப்போம்.